5.4.10

வேட்கையின் இலக்குகள்

வரிகளில் மறைத்த பொறிகளை இலகுவாக கண்டடைகிறாய் . அவமானம் பிடிங்கித்தின்கிறது . இலக்குகள் எல்லாவற்றிற்கும் உன் சாயலை கொண்டுவந்து பூசுகிறாய். நான் எதை வீழ்த்தினாலும் நீ விழுவது தற்செயல் அல்ல என்பதை சொல்கிறது உன் நங்கூரத்திலகம். சாட்டைகளையும் குருவாள்களையும் அடுக்கிய பெருஞ்சிப்பமொன்றை சுமந்தலையும் என்னிடம் உன் நீண்ட மெல்லிய விரலின் நகங்களை பூவாக்கி கொய்யச்சொல்கிறாய். மரணம் என்பது நெடிய வாழ்வின் தடம். அன்பு தடவிய என் அம்புகளுக்கு பலியாவது இலக்குகளின் கடன்.

**********************************

யாசிப்பிற்கு பிடிபடாதது நமதான வேட்கை. பிச்சைபொருளும் அன்று. பசிய இலையொத்த பறவைகளின் அலகில் சிக்கிக்கொள்ளும் விதையுள் தவறிய பெருவிருட்சம் அது. விசும்பில் கிளைபரப்பி நினைவுகளில் வேர்கொள்ளும் ரணம். முரணாக நீயும் நானும் கேட்டலையும் அந்தக தாகத்தை கையில் பிடித்தபடிக்கு கானகம் அலையும் சில்வண்டுச்சிறுமியை பின்தொடர ஏதுவான வாகனம் ஒன்று மூன்றாம் இரவின் நிறத்தில் திரியும் எருது. நீலாற்றின் கரையில் கடைசியாய் அச்சிறுமியை கண்டடையும் போது கையில் திணித்தாள் ஒரு சுளை வெயிலை.

**********************************

3 கருத்துகள்:

  1. ஒரு சுளை வெயிலை கையில் வைத்துக்கொண்டு திகைத்து போய் நிற்கிறேன் ஆதிரன் .இந்த சொல்லாடலில் திளைத்தும் போய் .
    அந்த விதையுள் தவறிய பெருவிருட்சம் இன்னும் எத்தனை நாள் மனச்சிந்தனையை அலைக்கழிக்குமோ தெரியாது .
    வார்த்தைகளைக் கொண்டு மாயாஜாலம் செய்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  2. "பசிய இலையொத்த பறவைகளின் அலகில் சிக்கிக்கொள்ளும் விதையுள் தவறிய பெருவிருட்சம் அது".அருமை ஆதிரன். பெரு விருட்சத்தை தன்னுள் வைத்து பறந்து செல்லும் பறவையை காணமுடிகிறது.

    பதிலளிநீக்கு