நல்ல வெயில். மயிலாய் இருப்பதில் எவ்வளவு பெரிய சிரமம் என்பது இவ்வளவு நீண்ட தோகையை தூக்கி சுமப்பவனுக்குத்தான் தெரியும். களிமண் தரை கெட்டிப்பட்டு பாலம் பாலமாய் பிளவுபட்டு ஒரே வெக்கைப்பரவல். அகவினால் தொண்டை எரிகிறது. நீருக்கும் வழியில்லை என்றில்லை. உப்புக்காற்று உணர்கிறேன். எங்கோ பக்கத்தில் கடலிருக்கிறது. நீரை எவ்வளுவுதான் குடிப்பது. பசி அடங்க மாட்டேன் என்கிறது. ஒரு மண்புழுவை பிடிக்க ஒன்றரை அடி பறிக்க வேண்டியிருக்கிறது. ஒரு விரல் நகம் வேறு ஒடிந்து லேசான குருதி கசிவு. இப்போது தேவை ஒரு எலி. ஒரு இளம் பாம்பென்றால் கோடி புண்ணியம். அடிக்கிற வெயிலுக்கு கருவேல மரத்துக்குள் நுழைந்தால் குத்தும் முள் கடும் எரிச்சல். எல்லாம் அந்த கலாபத்தால் வந்தது. வாலில்லாமல் அதுகள் தான் எவ்வளவு இலகுவாக ஓடித்திரிகிறது. இதுகளை தொகை விரித்து அழகு காட்டி சரி செய்வதற்குள் தீர்ந்துவிடும் போங்கள். அந்த நேரத்தில் பசி வேறு தெரிந்து தொலையமாட்டேன் என்கிறது. இதுதான் சூழல். இனி நடப்பவைதான் என்னை பைத்தியமாகிவிட்டது. பாருங்கள் கருவேலன்கிளையில் சட்டையை உரித்துக்கொண்டிருந்ததுதான் முதலில் தெரிந்தது. இளஞ்சாரை. கொழுப்பு. கோடி புண்ணியம்தான். அதே நேரம் ஒரு வெள்ளெலி புதருக்குள் நுழைகிறது. இரட்டை மாங்காய் என்றால் இதுதானோ. இரண்டு கோடிப் புண்ணியம். வாயில் சாரை. காலில் எலி. பசித்தவனுக்கு எதற்கு பாவ புண்ணியம். அந்த கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்லி தொலையவேண்டும். வந்தது வினை. எதற்கு எங்கள் இரண்டு பேரையும் உண்ண வேண்டும் என்கிற குரல் எலியா பாம்பா. இரண்டையும் தரையில் இறக்கினேன். உரையாடல் தொடங்கிற்று.
எலி: ஏன் எங்கள் இருவரையும் ஒரே நேரத்தில் உண்ணவேண்டும்.
பாம்பு: அதானே.
நான்: பசி. வேறென்ன செய்ய.
எலி: எனக்கும் கூடத்தான் பசி. சில தானியமணிகளை தேடத்தான் வெளியே வந்தேன்.
பாம்பு: இஸ் இட்? உனக்கு பசிக்குமா என்ன? நீ நான் உண்ணும் தின்பண்டமாயிற்றே. உன்னை பார்த்துவிட்டுத்தான் பாதி சட்டையைக்கூட கழற்றாமல் கீழிறங்கினேன். அதற்குள் மயிலார் கவ்வி விட்டார்.
எலி முறைத்தது.
எலி: நானும் உயிர் கொண்டு அலைபவள்தான். எனக்கும் பசிக்கும். உன்னை விட அதிகமாக. எதையாவது விழுங்கவில்லை என்றால் கூட நாங்கள் எதையாவது கடித்துக்கொண்டிருப்போம்.
நான்: ஒ.. நீ பெண்.
எலி: பெண் என்றால் இளக்காரமா. பெண்தான் எலிஎன்றாலும்.
பாம்பு: இவள் உடம்புக்கு ஆடையுடுத்தி மறைத்தலையும் ஜந்துக்களை போல பேசுகிறாள். பசிக்காக அனைத்தையும் உண்ணும் கழிசடைகள். I never like'em.. you know.
நான்: நீ எங்கிருந்து வருகிறாய் சாரை. ஆங்கிலம் எல்லாம் தூக்குதே. சரி அது எதுக்கு எனக்கு. எனக்கு பசி.. உன் சட்டையை முழுதாக கழற்றித்தொலை.. உன் கொழுப்பு என்னை கொஞ்சம் சாந்தப்படுத்தும்.
எலி: என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.
நான்: பெண் என்பதால் உன்னை கொத்திக்குதறாமல் ஒரே விழுங்கு.. சரிதானே.
பாம்பு: அவள் என்ன கேட்டாள். நீ என்ன சொல்கிறாய்.
நான்: என்னை ஒருமையில் அழைக்காதே சாரை. என் பொறுமை கரையத்தொடங்கி விட்டது.
எலி: இதோ பார். நீ எங்களை இறக்கி விட்டதும் ஓடியிருந்தால் உன்னால் எங்களை பிடித்து இருக்கமுடியாது. காட் ப்ராமிஸ்.. நாங்கள் நிற்கிறோம் என்றால் எங்கள் நேர்மையை நீ கவனி. சொல்வதைக்கேள். எங்கள் இரண்டு பேரில் ஒருவரை விட்டு விடு.
எனக்குத்தான் எத்தனைத் தொல்லை. பசித்தால் திங்க வேண்டும். அதைவிட்டு விட்டு. இப்பொழுது என் அறத்தை பற்றிய கேள்வி எழுப்பி நொம்பலப்படுத்துதுகள். இதற்கு பேசாமல் அந்த கலாபத்தை தின்னு தொலைத்திருக்கலாம். பசி வேறு கண்ணைக்கட்டிக் கொண்டு வருகிறது. நான் ஒரு மயில். எலியையோ பாம்பையோ தின்றால் என்ன பிரச்சனை. இதை இரண்டையும் ஒரே நேரத்தில் உண்டால் யாருக்குத்தான் என்ன பிரச்சனை. சனியன் வேறு யாராவது கேட்டால் பதில் சொல்லலாம். இதுகளே வந்து கேட்டால். நரன் வடிவேலுவின் கதைபோல ஆகிப்போனதே பிழைப்பு.
எலி: என்ன மயிலாரே பலமான யோசனை. ஒரு முடிவுக்கு வாரும் சீக்கிரம். எனக்கு பசி.. பாருங்கள் உங்கள் நகங்களை திங்கத்தொடங்கிவிட்டேன். என் சைசுக்கு நீங்கள் கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும் மாரிக்காலம் வரை தாங்கும்.
என் விரல் நகங்களை பார்க்க குனிந்த சைக்கிள் கேப்பில் பாம்பார் எலியை லவட்டி விட்டார். எலிவால் துருத்திய வாயை அதக்கியவாறு life is very short for lies என்றார் பாம்பார். நான் அவரை இரண்டு கால்களிலும் வாகாக பிடித்துக்கொண்டு கொத்தி கொத்தி தின்னத்தொடங்கினேன். அதன் தலைப் பகுதியில் எப்பொழுதும் போல காதுகளை காணவில்லை. அதன் கண்களைக் கொத்துவதற்கு முன் அவற்றைப் பார்த்து சொன்னேன் vengence is lazy form of grief.
பாம்பாரின் கழுத்துக்கீழ் நெளிந்து கொண்டிருந்த எலியார் விழுந்த ஓட்டை வழி தவ்வி குதித்தோடினார் களிமண் தரையில் புழுதி பறக்க kepéla என்று கத்தியவாறு. நான் பசியாறினேன். இன்னொரு நாளைக்கு எலி சிக்காமலா போய்விடும்.
**************
kepéla. - lt means standing on opposite sides of the river."
this story is dedicated to nicole kidman.
***********************
24.4.10
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எப்பவும் போல அருமை.
பதிலளிநீக்குஒரு வழியில் பார்க்க போனால் எதாவது ஒரு சமயம் நாம் அனைவரும் யாரோ ஒருவருக்கு kepela தான்.