14.12.14

வானவில் வண்ண மின்னல்
தேஜாவின் முகம் லேசான சோகத்தில் இருந்தது. என்னவென்று கேட்டேன்.

“அப்பா திட்டிட்டார் மகி.. எங்கப்பா ஏன் இப்படி இருக்கிறாரு.. என்னை புருஞ்சுக்கவே மாட்டேங்கறார்..” என்றான்.
நான் சொன்னேன், "எல்லா அப்பாக்களும் அப்படித்தாண்டா.. நாளைக்கு நீ அப்பாவானாலும் அப்படித்தான்". சிரித்தான்.
நான் அவனிடம் ஒரு சம்பவத்தை சொல்லத்தொடங்கினேன்: “நம்ம காந்தித்தாத்தா ஒரு தடவ ட்ரைன்ல அவர் பொண்டாட்டி கஷ்தூரிபாவோட போய்கிட்டு இருந்தாரு .. ஒவ்வொரு ஸ்டேசன்லையும் அதிகமான கூட்டம்.. எல்லா மக்களும் "மகாத்மா காந்திக்கு ஜே"ன்னு கோசம் பட்டைய கிளப்புது.. அப்ப வண்டி ஒரு ஸ்டேசன்ல நிக்கிது.. ஒரே கூட்டம் எல்லோரும் காந்தி கோசம் போடுறாங்க.. கூட்டத்துல ஒருத்தர் மட்டும் "கஸ்தூரிபாவுக்கு ஜே" ன்னு கத்திக்கிட்டே அவங்க பக்கத்துல போறாரு.. அவர பாத்து கஸ்தூரிபாவுக்கு கண்கலங்குது.. காந்திக்கு சங்கடம்.. அந்த மனிதர் கஷ்தூரிபாவுக்கு பக்கத்துல போய் கையிலிருந்த ஒரு ஆரஞ் பழத்தை கொடுக்கிறார். கஸ்தூரி அத வாங்கிட்டு என்கூடவே வான்னு அவர கூப்பிடுறார்.. அப்ப காந்தி அவரப்பாத்து எனக்கு ஏதும் இல்லையா..ன்னு கேக்குறாரு. அதுக்கு அவர் "நீங்க உண்மையிலேயே மகாத்மாவா இருப்பீங்கன்னா அதுக்கு காரணம் கஷ்துரிபா தான் " அப்பிடின்னு சொல்றாரு.. காந்தி அதை உண்மைன்னு ஒத்துக்கிறாரு.. பிறகு தெருபைத்தியகாரன் மாதிரி கிழிஞ்ச சட்டையோட மிகுந்த போதையில இருந்த அந்த ஆள் கூட்டத்துல கலந்து வெளியேறி வரவங்க போறவங்ககிட்ட குடிக்க பணம் கொடுங்கன்னு பிச்சைஎடுக்க ஆரம்பிக்கிறாரு. அவர் பேரு ஹரிலால். மகாத்மாவோட முதல் மகன்". 

"ஆக, அப்பனுக்கும் புள்ளைக்குமான உறவு அடிப்படையில முரணாத்தான் இருக்கு.. காரணம் மகன் மேல அப்பன் எடுத்துக்கிற உரிமையும் மகன் தான் ஒரு தனிமனிதன் என்று உணர்கிறதும் தான்னு நினைக்கிறேன்.. அதைவிட முக்கியமான காரணம் காலம்.. தலைமுறை இடைவெளி .. சராசரியா முப்பது வருசங்கள் இடைவெளி..”

“பணத்தை பத்தி சொல்றேன்னு கூப்ட்டு இப்படி மொக்கைய போடுறீங்களே..” என்றான் தேஜா.

நான் சொல்லத் தொடங்கினேன், ” என்னொட சின்ன வயசு ஞாபகம் ஏறக்குறைய எல்லாம் மறந்து போச்சு.. ஆனால் சில விசயங்கள மறக்கவே முடியாது இல்லையா.. அதிலொன்று எனது முதல் பல்.. நாக்கில் ஏதொ இடறுதுன்னு என்று விரலை விட்டு எடுத்தபோது எங்கையில பல்லு இருந்தது.. வலி இல்லை. ஆனா நிறைய அழுதேன். என்னவகையான உணர்வுன்னு ஞாபகமில்லை.. எதுவோ ஒன்னு எங்கிட்ட இல்லாம போச்சு.. பயமா இருந்தது.. பிறகு அந்த ஞாபகம் என்னோட மூளையில ஆழ்கடலில (abyss) மூழ்கின கப்பல் மாதிரி அமுங்கிப்போச்சு..  நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி சென்னையின் எதோ ஒரு திரையரங்கில் Welcome to jungle படம் பார்த்துக்கிட்டிருந்தேன்.. அதில வில்லனாய் நடிச்ச அமெரிக்க நடிகர் கிரிஷ்டோபர் வாக்னர் பேசுகிற வசனத்தில் சிறுவயதில் அவரோட  முதல் பல் போன அனுபவத்தை சொல்லுவார்.. வில்லன் வசனம் பேசுகிற போது நான் அழுத படம் அது.. அதிர்ஷ்டவசமாக என் மகனின் ஒரு பல்லை நான் பாதுகாத்து வர்றேன்.. சில நேரத்தில மனிதர்கள் ஒரு காரியத்தைச் செய்வதற்கு ஒரு காரணமும் இருப்பதில்லை.. இல்லையா..  பின்னால அதுக்கான நூறு காரணங்கள் நம்மை அறியாமலேயே வந்து சேரும்..  அனேக நேரங்களில அப்படி கிடைக்கிற அனைத்து காரணங்களும் சரியாக இருப்பதையும் நாம்  உணரலாம் அல்லது அதற்கு நேர்மாறாகக் கூட நிகழலாம்...”

”படுத்துற மகி...”

”நாம எல்லாரும் நம்ம விருப்பத்திற்காக எப்பவும் எதையாவது ஒன்ன செய்ய நினைக்கிறோம்... அல்லது பெத்தவங்க சொன்னதற்காக.. அல்லது நண்பர்கள் சொல்லியதற்கான்னு எதையாவது செய்றோம்.. அம்மா சொன்னாங்கன்னு பிடிக்காத காய்கறிகளை சாப்புடறோம்.. நண்பர்கள் சொல்றதுக்காக பிடிக்காதவரின் முதுகில பேனா மையத் தெளிக்கிறோம்.. ஒரு பையனை அல்லது ஒரு பிள்ளையை கவர்வதற்காக கைகளால பிளேடை வைத்துக் கீறிக்கொள்கிறோம்.. அப்பா ஆசைப்பட்டாட்னு டாக்டர்  ஆகுறதுக்கு  MBBS - ல சேருகிறோம்.. இதைப்போல ஆயிரமாயிரம் செயல்கள்களை நாள்தோறும் நாம செய்ய முயற்சிக்கிறோம்.. எல்லாத்துக்கும் ஒரே குறிக்கோள் செய்கிற காரியத்தில் வெற்றி பெறனும் என்பதுதானே.. ஆக வெற்றி பெற வேண்டும். அது ஒன்றே குறிக்கோள். செய்கிற காரியம்  நல்லவையா அல்லது கெட்டவையா என்ற ஆராய்ச்சி கூட இரண்டாம் நிலைதான்.. அப்படினா, எல்லாத்துக்கும் வெற்றிதான் ஆதாரமென்றால் எனக்கு ’வெற்றி’ என்பதுக்காக சமூகத்துல இருக்கிற விளக்கங்கள் மீது நிறைய கேள்விகள் இருக்கு...”

”இருந்துட்டு போகட்டும்.. மொத்தத்துல என்ன சொல்ல வர்ற நீ...”

”என்னைப் பொருத்தவரைக்கும் வெற்றியின் பலவைகைகளில முக்கியமான ஒன்னு தோல்வி..”

“தத்துவம்.. தத்துவம்.. ஐயோ.. பிச்சிட்ட போ.. ஏன் மகி என்ன சொல்ல வர்றன்னு கேட்டேனே..”

”கேளுடா பேசாம.. வெற்றி மற்றும் தோல்வி ஆகிய இரண்டு பதங்களுக்கும்  நடைமுறை வாழ்வில பொதுவாக உருவாக்கப்பட்டிருக்கிற அர்த்தங்கள் வேறுவேறானதா தோன்றினாலும் ஆழமா ஆய்வு செஞ்சா இரண்டும் சமநிலையில் இருப்பதைக் கண்டறியலாம்.. சரியா.. அதே  நேரம் இரண்டிற்கும் அர்த்தமற்றதொரு நிலையையும் நம்மால் உணர முடியும்.. இவ்வாறாக வெற்றி மற்றும் தோல்வி இரண்டையும் சமமானதாகவோ அல்லது அதற்கும் மேலாக அர்த்தமற்றவை என்றோ ஒருவர் உணரும் தருணம் அவர் முற்றிலும் ஒரு புதிய மனிதராகத் தன்னை உணர்வார் என்பது எனது முடிவு.. புரியுதா..”

“புரியல.. வெற்றி தோல்வி ரெண்டையும் சமமா எடுத்துக்கனும்னு பொதுவா சொல்லுவாங்களே.. அதத்தான் இப்படி ஜல்லியடிக்கிறயா..”

”ஏறக்குறைய அப்படித்தான் தேஜா.. வெற்றி தோல்வி இப்படி ரெண்டு நிலையும் இல்லவே இல்லைங்கிற புரிதல்.. ஆனா, இது புரியிறதுக்குத் தோதான பொதுச்சூழல் சமூகத்துல இல்லன்னு நினைக்கிறேன்.. மேலும் இன்றைய காலநிலையில் அந்த தன்மையை உணர நமக்கு அவகாசமில்லை..  நடைமுறை உலகம் வேகத்தால் ஆகிவிட்டதாக நம்புகிறோம்.. செய்யவேண்டிய பணிகளுக்கிடையில எந்தவொரு விசயத்தைப் பற்றியும் தெளிவு கொள்ள அவசியமில்லை என நம்புகிறோம்..  எதையும் அறிந்து கொள்வதற்கு பதிலாக யாரேனும் ஒருவர் நமக்காக அதைச் செய்வார்கள் என நம்புகிறோம்.. ஒரு பிரச்சனையின் மூலக்காரணம் பற்றி அறிய அக்கரையின்றி இருக்கிறோம்.. ஆனால் அதேசமயம் இங்கு இருக்குற எல்லாவிதமான பிரச்சனைக்கும்  அது குடும்பப் பிரச்சனையோ இல்ல சமூகப்பிரச்சனையோ  ஆச்சர்யப்படும்படியா கணக்கில்லாம தீர்வுகள் சொல்லிக்கிறோம்.. கொஞ்சம் நாடகத்தனமா சொல்லனும்னா, “நமக்கிடையே புழங்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் எண்ணிலடங்லாத அறுதியிட்டு சொல்லப்பட்ட பல்வேறு தீர்வுகள் நிலவுகின்றன.. அதாவது ஏறக்குறைய எந்த பிரச்சனைக்கும் பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு பல்வேறு வழிகளில் நம்மிடையே  நுகர்வுப் பொருள்களாக ”தீர்வு” விற்பனைக்கு கிடைக்கிது... ”

”ஆமாமாம் மகி.. ஆளாளாக்கு அட்வைஸ் பண்ணியே கொல்றாங்க.. எல்லாருக்கும் எல்லாமும் தெரியும்கிற நெனப்பு.. அப்ப எனக்கு மட்டும் தெரியாதா என்ன .. சந்தோசமா நம்மள இருக்க விடமாட்டேன்றாங்க.. முக்கியமா என்னோட அப்பன் தொல்ல தாங்க முடியல.. என்ன செய்றதுன்னே தெரியல...”

”ஹ.. ஹ.. கேளு தேஜா.. மனுசனுக்கு ஆகப்பெரிய விருப்பம் என்னவென்று ஆராய்ச்சி செஞ்சோம்னா ’மகிழ்ச்சியான வாழ்க்கை’னு எல்லாரும் சொல்வாங்க இல்லையா.. அதாவது ஒவ்வொரு மனிதரும் சந்தோசமாக வாழவேண்டும் என்பது அனைவருக்கும் அடிப்படை விருப்பமாக இருப்பது தெரியவரும்.. அப்படின்னா இதில ’சந்தோசம்’ என்றால் என்ன என்றும் ’வாழ்க்கை’ என்றால் என்ன என்றும் இரண்டு கேள்விகள் வருது..  முதல்ல சொன்னதுபோல உலகம் வேகத்தால் ஆகிட்டதுன்னு நாம எல்லோரும் உணர்ந்ததுதான்.. ஆன என்னப்பொறுத்த வரைக்கும் வேகம்ங்கிறது காலம் மற்றும் தூரத்தால் ஆனது.. எப்படிங்கறத பின்னால சொல்றேன்.. இந்த வாக்கியத்திலயும் ’காலம்’ என்றால் என்ன என்பதும் ’தூரம்’ என்றால் என்ன அப்படிங்கற ரெண்டு கேள்விகள் வருது.. ”

”அடடா.. மகி.. காலம்.. தூரம்.. வாழ்க்கை.. சந்தோசம்.. ம்ம்.. ஒரு முடிவாத்தான் இருக்க.. எங்கம்மா உங்கூட சேரக்கூடாதுன்னு சொன்னப்ப கேட்டிருக்கலாமோ..”

வெளையாட்டுக்குச் சொல்லடா.. இயல்பா சில விசயங்கள சொல்றேன்.. அதுலயிருந்து சில புரிதல்கள் உனக்கு கிடைச்சா நல்லது.. சரியா.. நான் என்ன சொன்னேன்.. ஆங்.. கேள்விகள்.. நான் உங்கிட்ட சொன்ன வார்த்தைகள வெச்சு மொத்தம் நாலு கேள்விகள் எடுக்கிறேன்.. இந்த கேள்விகள் மூலமா சந்தோசம் (மகிழ்ச்சி), வாழ்க்கை, காலம் மற்றும் தூரம் ஆகிய நான்கு பதங்கள் எப்படி விளக்கப்படுதுன்றதையும் ஒன்னுக்கொன்னு தொடர்புடையவையா .. அப்படினா எந்த வகையில் தொடர்பு .. அல்லது இவை ஒவ்வொன்றும் வெவ்வேறவையானதுனா எந்த வகையில் தொடர்பில்லாம இருக்கு என்பதையும் நான் விளக்க முயற்சிக்கிறேன்.. சரியா..”

”அனால், ஏன் விளக்கனும் மகி..”      

“ நல்ல கேள்வி.. இந்த கேள்விக்கு  நான் பதில் சொல்வதற்கு முன்னால..  தேஜா..  இது சம்பந்தமா சில தெளிவுகளை பெற முயற்சிக்கலாம்.. என்னை பொறுத்தவரை மனிதர்கள் இரண்டு வகையானவர்கள்.. சமுதாயத்தில் இருக்கிற நெறிமுறைகள், நடைமுறைகள், கருத்துக்கள் அனைத்துக்குள்ளும் இசைந்து வாழ்ந்து அவற்றுடன் விவாதித்து ’எல்லாம் பெரியவங்க தெரியாமலா சொல்லியிருப்பாங்க’ என்கிற எளிய புரிதலோடு வாழ்க்கை நடத்துபவர்கள்..  மற்றொரு வகையினர் அனைத்து கருத்துகளின் மூலத்தை ஆய்வு செய்து நடைமுறை வாழ்க்கைக்கு புது கருத்தாக்கத்தை உருவாக்க முயல்பவர்கள்.. “
”புரியும்படியா சொல்லமாட்டியா...”

” சரி, ஒரு எடுத்துக்காட்டாக ’கடவுள் இருக்கிறாரா இல்லையா’ என்ற உலகத்தின் அதரப்பழசான ஒரு பிரச்சனையை (fact) எடுத்துக் கொள்வோம்.. இந்தப் பிரச்சனையின் வரலாறு பற்றி அறிய கிளம்பினா ஏறக்குறைய மனித குல வரலாற்றையே  நம்மால புரிஞ்சிக்க முடியும்..  ஆனால் நாம ’கடவுள் இருக்கிறாரா இல்லையா’ என்கிற இந்த பிரச்சனையின் வரலாற்றை எப்படி தெரிஞ்சிக்கிறது? அல்லது பொதுவா, எந்தவொரு பிரச்சனையின் வரலாற்றையும் எப்படி தெரிஞ்சிக்கிறது? சுலபமாச் சொல்லமுடியும்.. புத்தகங்கள், ஊடகங்கள், கல்வி, நூலகங்கள்.. இன்னும் நிறைய..  ஆக எந்தவொரு பிரச்சனை பற்றிய வரலாற்று அறிவை பெற இங்கு தீர்வுகள் இருக்கின்றன.. வகைவகையானத் தீர்வுகள்..! கோடானகோடி வாழ்வுமுறைப் பரிசோதனைகள்.. விளக்கங்கள்.. குவிந்து கிடக்கும் இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது? எப்படி தேர்ந்தெடுப்பது? ”குறைந்தபட்சம் சரியானவை” என்று எவ்வாறு தீர்மனிப்பது? இது எல்லாத்துக்கும் எங்கிட்ட இருக்கிற ஒரே பதில் ”அடிப்படைகளைப் புரிந்து கொள்வது

”கடவுள் இருக்காரா மகி..”

”ஏண்டா நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்ன கேக்குற.. நான் சொல்றத கவனிக்கறயா இல்லையா.. ரொம்ப முக்கியமான விசயம்டா..”

”கேக்குறேன் மகி.. முதல்ல கடவுள் இருக்காரா இல்லையா.. சொல்லு மகி..”

“இல்லை”

”எப்படிச் சொல்ற..”

”உனக்கு கடவுள் இருக்காருன்னு படுதா..”

“தெரியல.. பதிலச் சொல்லுன்னா என்னை கேள்விகேட்டே கொல்லு..”

அதுதாண்டா நான் சொல்லவற்றதும்.. கடவுள் இருக்காறா இல்லையான்னு நீ கேட்ட.. என்னோட பதில் என்ன .. இல்லைனு ஒரு வார்த்தையில சொல்றேன் இல்லையா.. அந்த முடிவுக்கு எப்படி நான் வந்தேன்..  அந்த முடிவுக்கு வந்த வழிதான் நான் சொல்லப்போற மொத்தமும்.. பொறுமையாக் கேளு..”

”சாமி இருக்கு மகி.. நான் பாத்துருக்கேன்...”

”என்னடா சொல்ற.. “

“விக்ரம் படம்.. கிருஷ்ணா தியேட்டர்ல பாத்தோம்.. ஹி.. ஹி..”

”நல்லா கடிக்கக் கத்துக்கிட்ட.. சரி ”அடிப்படைய புரிந்து கொள்வது” பத்தி சொல்றேன்.. ஒரு பிரச்சனையின் அடிப்படையைப் புரிஞ்சிக்கிட்டா மட்டுமே அது பத்தின தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரமுடியும். அப்படினா அடிப்படையை புரிந்து கொள்ள நம்மகிட்ட இருக்கும் ஒரே கருவி என்றால் என்ன ?” என்கிற கேள்வி மட்டுமே. மேற்சொன்ன எடுத்துக்காட்டையே எடுத்துக்கொள்வோம். ”கடவுள் இருக்கிறாரா .. இல்லையா” இது ஒருவருக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறதுன்னு எடுத்துகிட்டா , முதல்ல அவர் என்ன செய்யனும்னா ஒரு கேள்வி கேட்கனும்.. ”கடவுள் என்றால் என்ன” இந்த ஒரு கேள்வி அவருக்கு ஒரு பெரும் வரலாற்று அறிவைக் கொடுத்து விடக்கூடும்னு நான் நம்புறேன்.  சரி, நான் சொன்னது அடிப்படைகளைப் புரிந்து கொள்வது பத்தி. ஆக இப்ப நான் என்ன செய்யனும்? ஒரு கேள்வி கேட்க வேண்டும். அடிப்படை என்றால் என்னஎன்கிறதுதான் அந்த கேள்வி.. இப்போது  நீ கேட்ட கேள்விக்கு வருகிறேன். இதையெல்லாம் ஏன் விளக்க வேண்டும்? ஆரம்பத்துல சில வார்த்தைகள் பத்தி சொன்னேனில்லையா.. மகிழ்ச்சி, வாழ்க்கை, நேரம் (காலம்) மற்றும் தூரம் அப்படின்னு.. இவைகளோட அடிப்படைகளைப் புரிந்து கொள்ள இவற்றை விளக்க வேண்டும். சரி விளக்கலாம்.. அனால் எதற்காக விளக்க வேண்டும்?  அன்பு தேஜா.. இந்த கேள்விக்கான விடையை நான் இவ்வாறு சொல்கிறேன்: ஒருவர் தனது வாழ்நாளில் எந்த ஒரு கணத்திலும்  பூஜ்ஜியத்தை (zero) அடைந்து விட்டாலும் மீண்டும் புதிதாக எண்ணத்தொடங்க வேண்டும்அதற்கான மனவலுவை / நம்பிக்கையை இந்த ”அடிப்படைப் புரிதல்” அவருக்கு அளிக்கும்எனவே என்னைப்பொருத்தவரை அவருக்கு (உனக்குவேறு மாற்று இல்லை.

“உனக்கு வேற வேலையே இல்லையா மகி.. எதையாவது ஜாலியா பேசிக்கிட்டு இருக்கலாம்னு வந்தா.. நெஜமாவே படுத்துற.. நீ சாதாரணமா பேசுனாலே புரியமாட்டேங்குது.. இதுல பூஜ்ஜியம் போஜ்ஜியம்னு.. நேரமாகுது கெளம்பட்டா..”

“இருடா.. ஜாலியாவே பேசலாம்.. அதே நேரம் நான் சொல்றது கொஞ்சம் கேட்டுக்க.. நீ வாழ்க்கையில மொத்ததுக்கும் ஜாலியா இருக்க அது ரொம்பவும் உதவும்..”

“மொத்ததுல ஜாலியா இருக்க எங்கப்பன் விடமாட்டான்னு நெனைக்கிறேன்.. நான் எதச் சொன்னாலும் கேக்கமாட்டேங்கறாரு.. அவரு என்ன சொன்னாலும் எனக்கு புடிக்க மாட்டேங்குது.. “

”அது சாதாரணமான கம்யூனிகேசன் சிக்கல்றா.. தகவல் பரிமாற்றத்துல சில வகையான பிரச்சனைகளை புரிஞ்சிகிட்டோம்னா எல்லாம் சரியாகிடும்.. தகவல் தொடர்பு பத்தி நான் பின்னால விளக்கமா சொல்றேன்.. இப்ப அடிப்படையப் பாப்போம்..”

”விடமாட்டேன்ற.. சரி சொல்லு.. ஏதோ போஜ்ஜியம்னு சொன்னியே..”

“போஜ்ஜியம் இல்லடா.. பூஜ்ஜியம். சைபர்.. வாழ்க்கையில நடுத்தெருவுக்கு வந்தாலும் மனசு விட்றாம முதல்ல இருந்து ஆரம்பிக்கனும்.. அது எத்தன வயசுலனாலும் சரி.. அதுக்கான மன திடம் நம்ம கிட்ட இருக்கனும் அதுக்குத்தான் அடிப்படை புரிதல் அவசியம்னு சொல்றேன்..”

“மொத்தத்துல எதையும் கண்டுக்காம சந்தோசமா இருக்கனும்னு சொல்ற..”

“இல்ல தேஜா.. மொத்தத்துல எல்லாத்தையும் கண்டுகிட்டே சந்தோசமா இருக்கனும்..”

“அது எப்புடி.. நமக்கென்ன பொடனியலயா இருக்கு கண்ணு..”

“கண்ணு பொடனியில இருக்க வேண்டாம்.. அறிவுல இருக்கனும்.. இனி நான் கொஞ்சம் உரை நடை தமிழ்ல சொல்ல போறேன் வார்த்தைகள் எதுவும் புரியலைன்னா கேளு..”

“இது வேறையா.. “

”கவனமா கேளு.. ஆக, ஒன்றும் இல்லாமல் போகும் காலத்தில் நாம் மீண்டும் புதிதாக எண்ணத்தொடங்க வேண்டும்.
“ஆனால் ஒன்றும் இல்லாமல் போகும் காலத்துக்காக நாம் ஏன் காத்திருக்கனும்.. எப்ப பாத்தாலும் கெட்டு முட்டச் சாம்பலா போயிருவோம்னு யோசிச்சுக்கிட்டே இருந்தா நல்லாவா இருக்கும்..”

“ஆனா இது வருமுன் காப்போம் திட்டம்டா.. அதுவுமில்லாம கெட்டுபோற காலத்துக்கு மட்டுமில்ல இருக்குற எல்லா காலத்துக்கும் இந்த அறிவு அதாவ்து அடிப்படை அறிவு அவசியம்.. அப்பதான் உண்மையான சந்தோசம் அப்படின்னா என்னான்னு தெரியவரும்..”

“ஆனா நீ சொல்ல வர்றது எல்லாம் சாதாரணமான ’வாழ்க்கையில் முன்னேறும் வழி’ புத்தகங்கள் மாதிரி தெரியுதே..”
“இப்ப அப்படிதான் தெரியும் .. பின்னால போகப் போக அதுக்கும் இதுக்குமான வித்தியாசத்தை புரிஞ்சுக்குவ.. கேளு.. திருக்குரளுக்கு பேர்போன தமிழர்கள் நாம். அதுபோல, மொத்தம் இரண்டாயிரத்துச் சொச்சம் குரள்களையும் ஒரே பாடலில் சொன்னவன் கனியன் பூங்குன்றன். அவன் சொன்னான்: தீதும் நன்றும் பிறர் தர வாரா. இந்த வாக்கியம்தான்  மொத்த அடிப்படை! ஆனால் எப்படி? அதைத் தெரிந்து கொள்ள நாம் மேற்சொன்ன அந்த நாங்கு பதங்களைப் பற்றிய புரிதலை மேற்கொள்ளும் கடப்பாடுக்கு வருகிறோம்..”

“கடப்பாடா.. அப்படின்னா என்ன..”

“கடப்பாடுன்னா கட்டாயம்.. கட்டாயத்துக்கு தள்ளப்படுறோம்னு அர்த்தம்.. சரியா.. சரி விசயத்திற்கு வர்றேன்..  நான் குறிப்பிட்ட முதல் சொல்லான மகிழ்ச்சி (சந்தோசம்) என்பது பற்றி இங்கு எதுவும் விளக்கப்போவதில்லை. எல்லாத்துக்கும் கடைசியா இறுதிப்பகுதியில் இதற்கான அடிப்படையை நாம் புரிந்துகொண்டுவிடலாம். அனால் மற்ற மூன்று பதங்களின் அடிப்படை பற்றிய சில புரிதல்களுடன் தொடங்கினால் இனிவரும் விசயங்கள் புரிவதற்கு சற்று சுலபமாகும். பொருண்மையற்ற அதாவது வெளிப்படையான உருவமில்லாத வெறும் சொல்லாலான இம்மூன்று பதங்கள் பிரபஞ்சத்திற்கு ஆதாரமானவை என்று ஒரு எளிமைக்காக எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் அனைத்திற்கும் பொருளே முதல் என்று இருக்கையில் பொருண்மையற்ற இவை எப்படி ஆதாரமாகும் என்ற கேள்வி செயல் விளக்கங்களுடன் பின்னால் விவரிக்கிறேன்.

“பொறு மகி.. பொருண்மை.. பொருளே முதல்.. என்ன இதெல்லாம்.. மண்ட காயுது..”

“அதான் சொன்னேனே.. பொருண்மைன்னா ஒரு விசயத்துக்கு ஒரு அர்த்தமிருக்கும் ஆன உருவம் இருக்காது.. தூரம் அப்படின்னு சொன்னா புரியும் ஒரு உருவமா காட்டமுடியாதில்லையா.. அதுமாதிரி.. பிறகு பொருளே முதல்னா உலகத்தில் எல்லா விசயங்களும் பொருள்தான் முதல்ல இருக்கும்னு விளக்குற ஒரு சித்தாந்தம்.. இதுபத்தியும் சித்தாந்தங்கள் அப்படின்னா என்னங்கற பகுதியில விளக்கமா சொல்றேன்.. ஆக, இதோ அந்த ஆயிரம் கோடி மதிப்பிலான கேள்வி! வாழ்க்கை என்றால் என்ன? இந்த கேள்வியைப் கேக்கும் போது எத்தனை பேர் சிரிப்பாங்கன்னு தெரியல.. எத்தனை பேர் கோபமும் எரிச்சலும் அடைவாங்கன்னு தெரியல.. எத்தனை பேர் சலிப்படையிறாங்கன்னு தெரியல.. மேலும் என்னென்ன வகையான உணர்வுகளை அடைகிறார்களோ.. எல்லாம் ஓரளவுக்கு யூகிக்கமுடியக் கூடியவைதான். ஆனால் நான் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லிவிட முடியும். அவங்க எத்தனை வகையான உணர்வுகளை அடைந்தாலும் ஒருத்தரப் பார்த்து இந்தக்கேள்வியை நீங்கள் கேட்கிற போது ஒரே ஒரு உணர்வு மற்றும் வராது. அது சுவாரஸ்யம் என்கிற உணர்வு. ஏனென்றால் உலகில் ஒவ்வொரு தனிமனிதரும் தனக்கான பிரத்தியேகமான பதிலை இந்தக் கேள்விக்காக வைத்திருக்கிறார்..”

“உனக்கும் கூடத்தானே...”

“விதிவிலக்கில்லாமல் என்னிடமும் ஒரு விளக்கம் உண்டு.. ஒரு சிறிய எடுத்துக்காட்டுடன் அதை விளக்க முயல்கிறேன்.கொஞ்சம் நாடகத்தனமா இருக்கும்: பூப்பூவா மழை சிதறும் ஒரு சிலிர்த்த அக்டோபர் மாதத்தில் ஒரு அற்புதமான பெரும் பள்ளத்தாக்கு பக்கம் போகிறோம். எண்ணற்ற வண்ணமயமான பூச்செடிகள், கற்பனைக்கு எட்டவே எட்டாத அமைப்புகளுடன் விதவிதமான மரங்கள் அடர்ந்த அந்த பள்ளத்தாக்கைச் சுற்றி அடர்காடு கொண்ட மலைகள். அங்கு தெளிந்த நீர் கொண்ட அழகான குளம். அந்த குளத்தில் குளிர் நீர் பனி படர பார்க்க பார்க்க கண்கொள்ளாக் காட்சியா இருக்கிறது. அந்த குளத்தை பார்ட்தவுடனே ஒரு நொடியில அதில் குதித்து நீந்த வேண்டும் என்கிற பேரார்வம் உனக்கு வருகிறது. ஒவ்வொரு நொடியும் அதில் குதித்து விடும் ஆர்வத்துடன் இருக்கும் உன்னிடம் நான் சொல்லுகிறேன், “வேண்டாம்.. குதித்துவிடாதே”. காணப் பரவசம் கொள்ளச் செய்யும் அந்த பள்ளத்தாக்கு என்பது ஒரு ஆடிப் பிம்பம். அதில் இருக்கும் குளத்தில் குதித்தீர்களானால் அது உடைந்து போகும். அல்லது அதிலிருந்து வெளியேற முடியாமல் பிம்பத்தின் ஒரு பகுதியாய்  நீங்கள் மாறிப் போய்விடக் கூடும். 

”சுத்தம்.. ஒரு எழவும் புரியல.. எப்பவும் சொல்லுவயே சிகரெட்டுக்குள்ள எதையோ கலந்து ஊதுவன்னு.. அதுமாதிரி எதுவும் போட்டுட்டு வந்திட்டியா..”

“இல்லடா.. சும்மா ஒரு  வார்த்தை விளையாட்டு இது.. எளிமையா சொல்றேன் கேளு.. உன் கண்ணுக்கு முன்னாடி தெரியிறது உண்மையா இருக்கனும்னு அவசியமில்லை.. அதாவது அது நல்ல விசயமோ கெட்ட விசயமோ.. மேலோட்டமா இருக்கிறதுக்கு பின்னால நம்மால யூகிக்கவே முடியாத வேறொன்று இருக்க எப்பவுமே வாய்ப்பிருக்கு..”

”சரி சரி.. வாழ்க்கைனா என்னனு நீ சொல்லு மகி..”

“அதுக்கு முன்னாடி நீ சொல்லுடா.. வாழ்க்கைனா என்ன..”

“எனக்கு என்ன தெரியும் மகி.. ஒரு அம்பத்து அஞ்சு வயசுல கேட்டைய்னா சொல்லுவேன்.. ம்ம் .. வாழ்க்கைனா புடிக்கிறத செய்றது..சரியா..”

”செம.. புடிக்கிறத செய்றது.. யாருக்கு புடிக்கிறத செய்றதுன்னு ஒரு கேள்வி இருக்கு..”

“இது என்ன கேள்வி எனக்கு புடிக்கிறதுதான்..”

“உனக்கு என்ன புடிக்கும்ம்னு உனக்கு எப்படி தெரியும்..”

“எப்படியோ தெரியும்.. எல்லாம் தானா வர்றதுதான..”

“இல்ல தேஜா.. எதுவும் இங்க தானா வர்றது இல்ல.. ஒன்னு நீ தேடிப் போகனும் இல்லைனா யாராவது உனக்கு குடுப்பாங்க.. ஆனா பொதுவா இங்க எதுவும் நம்ம தேர்வு கிடையாது.. எல்லாமே அவங்க சாய்ஸ்தான்..”

“அவங்கன்னா..”

“அவங்கன்னா மத்தவங்க.. உன்னத்தவிர எல்லாரும் அல்லது எல்லாமும்.. மொத்தமா இந்த பிரச்சனையை புரிஞ்சுக்க வெக்கிறதுதான் என்னோட நோக்கம்..”

“மறுபடியும் குழப்புற.. சரி நீ சொல்லு வாழ்க்கைனா என்ன..”

“அது எனக்கும் தெரியாது.. ஆனா எனக்கு உகந்தமாதிரி ஒரு கத இருக்கு.. அதன் மூலமா சொல்றேன்.. ‘யேன் மிர்தாலின் - life of Pie’  நாவலின் கதைதான் இதுவரையில் எனக்குத் தெரிந்து சுவாரஸ்யமான வாழ்க்கைத் தத்துவம்.. அந்த கதை என்னனா.. ஒரு மிருகக்காட்சி சாலை முதலாளி வியாபார நஷ்ட்டம் காரணமாக அவருகிட்ட இருந்த மொத்த விலங்குகளையும் வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல கப்பலில் ஏற்றுகிறார்.  நடுக்கடலில் கப்பல் விபத்தில் சிக்குகிறது. விபத்திலிருந்து அந்த முதலாளியின் மகனும் ஒரு புலியும் மட்டும் தப்பி ஒரு படகில் மாட்டிக் கொள்ளுகிறார்கள்.  நடுக்கடலில் மனிதனுக்கும் புலிக்கும் இடையிலான போராட்டம்தான் மேற்சொன்ன நாவலின் கதை. ஒரு கடல். ஒரு படகு. ஒரு புலி. ஒரு மனிதன். இதில் வாழ்க்கை என்றால் என்று என்னைக் கேட்டால் அந்த புலிதான் வாழ்க்கை என்பேன். கடல் என்பது பிரபஞ்சம். படகு என்பது பூமி. ஒரே துரதிர்ஷ்ட்டம் மனிதன் மட்டுமே மனிதனாக இருக்கிறான். வாழ்க்கைக்கு எப்படி ஒரு அற்புதமான படிமம்! படகை செலுத்த, திசை அறிந்து கரை ஏற ஒரே வழி புலியை பழக்குவதுதான். அதற்கு புலியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எனவே வாழ்க்கையின் தத்துவம் என்பது புலி என்றால் அதாவது வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்துகொள்வதுதான்..”

“சிரிப்பு சிரிப்பா வருது மகி.. ஒரு சின்ன கேள்வி.. கடல்ல நடக்குற போராட்டத்துல மனுசன் செத்தா பரவாயில்ல.. புலி செத்துடுச்சுன்னா.. அவனுக்கு என்ன ஆகும்.. உன் கணக்கு படி வாழ்க்கைங்ற புலி செத்துடுச்சுன்னா மனுசன் நிலமை என்ன..”

“அழகு..அழகு..  இது மாதிரி என்ன கவுத்துனாதான் நான் தெளிவா சொல்ல முடியும்.. வாழ்க்கைக்கு நான் சொன்ன விளக்கம் சரி வரலன்ற அப்படித்தான.. இப்படி வேணும்னா வெச்சுக்கலாம்.. அந்த கடல், படகு, புலி, மனிதன் இதுல எது வேணுமினாலும் வாழ்க்கையா இருக்கலாம்.. அது அவரவர் பார்வைக்கு தக்க மாறும் சரியா..”

“இது ஓரளவு பரவாயில்ல மகி..”

”பேசலாம்.. ஆக நான் முதலில் சொன்னது போல வாழ்க்கை என்பது கண்ணாடியில் தெரியும் கவர்ச்சியான ஒரு இயற்கைக் காட்சியின் ஒரு பிம்பம்.  அந்த பிம்பத்துல தெரியும் ஒரு அழகான குளம் என்பது  உண்மையில் நீ எங்கு குதித்து நீந்தி மகிழ வேண்டும் என்பதற்கான ரகசிய குறிப்பு. இன்னும் சொல்லப்போனால் இந்த உலகில் உன்னுடைய இடம் எதுவென்று அறிந்து கொள்ள உதவும் ஒரு வரைபடம். நீ யாராக இருக்கப் போகிறாய் என்பதை ஒளித்து வைத்திருக்கும் ஒரு ரகசிய வரைபடம். எனவே, அந்த சமிக்கையை, ரகசியக் குறிப்பை உணர்ந்து கொள்ள, அந்த வரைபடத்தை புரிந்து கொள்ள என்னிடம் ஒரு எளிமையானதும் அதே சமயத்தில் வலிமையானதுமான ஒரு வழிமுறை இருகிறது. ”எல்லாவற்றிற்குமான அடிப்படைப் புரிதல்“ என்று அதற்குப் பெயர். அதை ஒரு கல் வடிவில் இப்போதைய உன் நம்பிக்கை எனும் குளத்தில் எறியப்போகிறேன். கடைசியாக, கலங்கிய குளம் தெளியத் தெளிய ஆழத்தில் நீ அனைத்தையும் காணலாம்.

“என்னமோ சொல்ற.. கேக்க நல்லாயிருக்கு.. ஒரு எழவும் புரியல.. ஆனாலும் இன்னும் கொஞ்சம் விரிவா சொன்னா நல்லா இருக்கும்..”

”எல்லாம் சரியாப்போகும்.. இப்ப இல்லைனாலும் நல்லது நடந்தே தீரும்னு எல்லார்கிட்டையும் ஒரு நம்பிக்கை இருக்கும்.. இல்லையா.. உலகில் உள்ள எல்லோரும் - அனைத்து மதங்களும் உட்பட - நம்பிக்கையை பத்தி போதிக்கிறார்கள். நான் நம்பிக்கையை குழைக்கவே விரும்புகிறேன் ஏனென்றால் உண்மையை/உண்மையான நம்பிக்கையை விட்டு நாம் வெகுதூரம் விலகி விட்டோம். எளிய அடிப்படைகளை உணர்ந்து கொள்வது மூலம் இழந்து போன நமது உண்மையான நம்பிக்கையை மீட்டெடுக்கலாம். அதுபோலவே உலகத்திலுள்ள அனைத்து நீதிமான்களும் ஞானிகளும் ஞானத்தை போதிக்கிறார்கள். நான் சூனியம் என்றால் என்ன என்பதை எனது அடிப்படையாக வைத்து விளக்கப்போகிறேன். ஏனென்றால், வாழ்க்கையை விளங்கிக்கிறதை விட அத  நமக்கு இனிமையானதா மாத்தியமைக்க வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கிறோம்னு நான் புரிந்து கொண்டதனால். எனவே நம்மையும் நம்மைச் சுற்றிய அனைத்தையும் பற்றிய அடிப்படைகளைப் புரிந்து கொள்ள முயல்வது மூலம் புதிய பாதைகளை கண்டுணர்ந்து நமக்கேற்ற செரிவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள என்ன செய்யனும்னு நான் பேசப்போறேன்..”

” நம்பிக்கையை குழச்சா எல்லாம் சரியாப் போயிடுமா..”

“நான் நம்பிக்கையைக் குழைக்கிறேன் சொல்றது மறுபடியும் சரியான நம்பிக்கையைக் கண்டு கொள்வதற்காக.. முன்னாடி பேசுனதுதான், ”தீதும் நன்றும் பிற தர வாராது” என கனியன் பூங்குன்றன் சொன்னான்.. இல்லையா.. அது அற்புதமான வாகியம்தான். ஆனால் அது மெய்யான கூற்றா.. அதுக்கு மாற்றுக் கருத்து இல்லையா.. புகழ் பெற்ற பிரஞ்சு தத்துவவியலாளர் ழான் பால் சார்த்தர், “அனைத்தும் பிறவற்றிலிருந்து வருகிறது சொல்லுகிறார்”.  உளவியல் அடிப்படையின் இவரின் இந்தக் கூற்றை பல அறிஞர்கள் சரி என்று விளக்கியுமுள்ளார்கள். ஆக, ”தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதும் “அனைத்தும் பிறவற்றிலிருந்து வரும்” என்பதும் வெவ்வேறு கூற்றுகள். கேட்பதற்கு இரண்டும் எதிமாறான கருத்துக்கள் என்று தெரிந்தாலும் இவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. அகமும் புறமும் போல. ஒன்றின்றி ஒன்று இல்லை. அல்லது இரண்டும் ஒன்றே. அதனால் அகம் மற்றும் புறத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்வது மூலம் தொடங்கலாம்.

“உள்ள வெளிய விளையாடச் சொல்ற.. அஹம் ப்ரமாஸ்மி..”

“தமிழ் சினிமா உங்கள கெடுத்துடுச்சு.. அகம் புறம் பத்தி பேசுறதுக்கு முன்னாடி வேறொன்ன பத்தி தெரிஞ்சுக்கிறது அவசியம்.. அது ஒரு செயல்பாடு பத்தினது..   நான் ரஸ்ய ராணுவ வீரர்களுக்கு பயிர்சியின் போது மூன்று வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப போதிப்பதாகப் படித்திருக்கிறேன். முதலாவது கிடைப்பதை சமயோசிதமாக உபயோகப்படுத்து (improvise)             இரண்டாவது சூழலுக்கு உகந்து உன்னை தகவமைத்துக் கொள் (adapt), மூன்றாவது இந்த இரண்டையும் உபயோகித்து தப்பித்து வெளியேறு (overcome). சிக்கலான, உயிருக்கே போராட வேண்டிய அல்லது வெளியேற முடியாமல் ஏதாவது ஒரு இடத்தில் ராணுவ வீரர்கள் அகப்பட்டால் இந்த மூன்றும்தான் மந்திரம். கிடைத்ததை உபயோகித்து சூழலுக்கு தகுந்து செயல்பட்டு தப்பிக்க வேண்டும். முடியவில்லை என்றால் மரணம்தான்..”

“ நமக்கதுக்கு அந்த மாதிரி பிரச்சனை வரப்போகுது மகி..”

“தப்புடா.. நாம ஏற்கனவே அந்த நிலையிலதான் இருக்கிறோம்.. ராணுவ வீரர்களுக்கு கூட பரவாயில்ல.. அவங்களோட சூழ்நிலை தெரிஞ்சுடுது.. நாம அப்படி இல்ல.. நமக்கு சூழ்நிலை தெரியல.. பிரச்சனைகளோட ஆழம் புரியல..  நீ இருக்கிறது ஒரு காட்டுக்கு நடுவுல.. கர்ணம் தப்புனா மரணம்..”

“என்ன மகி உளர்ற.. சும்மா பயம் காட்டுறயா..”

”இல்லடா.. பயம் காட்டல.. நெஜத்த காட்ட முயற்சிக்கிறேன்.. சரி கொஞ்சம் எளிமையா வேற விசயம் பேசலாம்.. ஆனாலும் இதுவும் காடு மாதிரிதான்.. பதின் பருவம்ங்ற (teen age) திசை தெரியாத அல்லது திசையே இல்லாத புதிரான காடு..   திசைதான் இருக்குமான்னு தெரியாது.. ஆனா திரும்புன பக்கமெல்லாம் பாதையா இருக்கும் காடு..”

“சாமீ.. ஏன் இந்த கொலவெறி..”

”கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சிப்பா.. துடிப்பபான இளம் வயசு.. திரும்புன பக்கமெல்லாம் ஓடத்தோனும்.. ஆனா எங்க போகனும்னு தெரியாது.. நான் சொல்றேன்.. இப்படி எதுவுமே இல்லை.. ஜஸ்ட் கொஞ்சம் நிதானமா சுத்தி பார்த்தா போதும்.. எல்லாம் விளங்கும்.. பாதையெல்லாம் திசைகாட்டிகளும் சமிக்கை பலகை (signs) களும் நிரஞ்சு கிடக்கிறது தெரியும். ஆனால் எல்லாம் இங்க நிலையில்லாதது. ஒரே திசைகாட்டி வேறவேற நேரத்துல வேற வேற வழியைக் காட்டும்.. ஒரே தகவல் பலகை வேற வேற விசயத்தை கொடுக்கும்..”

”ஏன் மகி நாங்களும் பள்ளிக் கூடத்துக்கு போறோம்ல.. எனக்கும் நாலு பேரு நாலு விசயம் சொல்லிக் கொடுப்பாங்கதான.. இங்க எதுவுமே நல்லதிலைங்ற பீல் கொடுக்கிற..”

“உண்மைதான் தேஜா.. நான் சொல்றது எல்லாம் சரின்னு சொல்ல வரல.. அதுபோல இங்க பொதுவா பிரச்சனையில்ல.. ஆனா ஏன் நாடு கெட்டுபோச்சுன்னு .. கலாச்சாரம் கெட்டுபோச்சுன்னு பொது வெளியில மக்கள் பேசுறாங்க..”

“அப்படியா பேசுறாங்க..”

“அதனாலதான் சொல்றேன்.. பதின்பருவம் என்கிறது ஒரு காடு.. சமூகம் பல பாதைகளா பிரிஞ்சு கெடக்கு.. எந்த பாதைன்னு கேட்டா என்ன சொல்வ நீ..”

“எனக்கு புடிச்ச பாதை..”

“அதான் ஏற்கன்வே சொன்னேன் இல்லையா.. உனக்கு பிடிச்ச பாதைன்னு உனக்கு எப்படி தெரியும்.. ஆக, அப்படியான ஒரு திசை தெரியாத அடர்ந்த காடு தான் இந்த பதின்பருவம் (teen age) என்பது.. மறுபடியும் சொல்றேன்.. பதின்பருவமே திக்கில்லாத பெரும் புதிர்க்காடு.. சுற்றிலும் அல்லது அனைத்து திசைகளிலும் பாதைகளால் ஆன இந்த புதிர்க்காடு உனக்கு அளிப்பதெல்லாம் வெறும் சமிக்கைகள் (signs) மட்டுமே.. இங்கு இருக்கும் திசைகாட்டிகள் அனைத்தும் நிலையற்றவை..  இந்த சமிக்கைகளைப் புரிந்து கொண்டு உன்னைச் சுற்றி இருக்கும் எண்ணிலடங்கா புதிர்களை விடுவித்து உன் பதின்பருவக் காட்டை கடந்து விட்டால், காட்டின் முடிவில் இருக்கும் வாழ்வெனும் பள்ளத்தாக்கில் பயணம் செய்ய ஒரு சொகுசான வாகனத்தைப் பரிசளிக்கும் உன்னிடம் இருக்கும் அடிப்படை அறிவு. அந்த வாகனத்திற்கு எரிபொருளே தேவையில்லை.  உனக்காக அது உன் இருப்பு இருக்கும் வரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் . உனக்காக மட்டுமே இல்லாமல் மற்ற அனைவருக்காகவும்..”

“பள்ளத்தாக்கு.. வாகனம்.. சொகுசு.. என்ன எழவு இதெல்லாம்.. எதுக்கு இதெல்லாம்.. அடுத்த மாசம் தலைவா ரிலீஸு.. அதப்பாக்கப் போற வழிதான் இப்போதைக்கு ஒரே பாதை..”

“வலிக்குதுடா..”

“என்னாச்சு மகி..”

“கால எடுறா.. என் கால ஏறி மிதிச்சுட்டு வர்ற..”

“அதான.. நான் சொன்னதுல பீலாகி நெஞ்சு வலிக்கிதோன்னு நெனச்சிட்டேன்..”

“அந்த மாதிரி நெஞ்சு வலி பெர்மனண்ட்றா.. நெஞ்சு வலி கூட இல்ல.. பொடனி வலி.. பின்மூளை எறிச்சல்.. பரிதாபமா இருக்கு..”

“சரி சரி பொலம்பாத.. விசயத்துக்கு வா..”

“ம்ம்.. ரஸ்யர்கள் சொன்ன மாதிரி நம்மாளுகளும் ஒரு விசயம் போர்வீரர்களுக்கு சொல்லியிருக்காங்க.. சுவாரஸ்யமான விசயம் இது.. அவங்க சொல்றாங்க: சூடான தோசைய ஓரத்துல இருந்துதான் சாப்புடனும்..”

“அதான பாத்தேன்.. நம்மாளுங்க சாப்புடறத் தவிர வேறெதுவும் சொல்லியிருக்க மாட்டாங்களே.. சண்ட போடுற நேரத்துல தோச சுட்டுத் திங்கனும்னு சொல்லியிருக்கான் பாருங்க.. பின்னினிட்டாய்ங்க.. ஹ..ஹா..ஹ..”

”மேலோட்டமா சாப்புடறதப் பத்திதான் விசயம் தேஜா.. ஆனா கேளு.. மனித வளர்ச்சிக்கு அறிவுரை சொல்றதுல உலகத்துல இரண்டு விதம் இருக்கு.. மேற்கத்தி காரங்க விசயத்தை நேரடியா போட்டு உடைப்பாங்க.. அவங்களுக்கு பிரச்சனையை அதன் விளைவை நேரடியா சொல்லிடனும்.. அது ஒரு நேரடியான கருணையிலாத அணுகுமுறை.. மிக சில நேரத்துலதான் இந்த முறை உபயோகமாய் இருக்கும்.. ஆனா நம்ம தேசத்தோடது கதை சொல்ற முறை. எதையுமே ஒரு கதை மாதிரி - உதாரணமா - குட்டிக் கதைகள், படிமங்கள், உவமானங்கள் வெச்சு எந்த ஒரு விசயத்தையும் விளக்குறது கிழக்கித்திய முறை. மனதளவுல ஒரு விசயத்த ஒரு ஒப்பீட்டோட சொல்றது மனசுல ஆழமாப் பதியும். இந்த தோச விசயமும் அப்படித்தான்.. எதிரிய வெல்லனும்னா அவன சுத்தியிருக்கிற எல்லாத்தையும் காலி செஞ்சா போதும் எதிரி தன்னால ஒன்னுமில்லாமப் போவான் என்பதுதான் இந்த தோச தத்துவம் புரியுதா.. அறிஞர் சி எஸ் லீவிஸ் சொல்ற மாதிரி மனுசன் செய்யிறதுக்கு மொத்தமே மூனு வேலைகள்தான் இருக்கு ஒன்னு செய்தே ஆக வேண்டிய வேலை (கல்வி கற்பது, மற்றவர்களிடம் இனிமையாக இருப்பது ..) இரண்டாவது செய்ய வேண்டிய வேலை (உடுப்பை உடுத்துவது அல்லது மாற்றுவது..) மூன்றாவது செய்ய விரும்புற வேலை.. அது அவங்கவங்களுக்குத் தான் தெரியும்.. இல்லையா .. இதுல நாம செய்றது எதுக்காகன்னு ஒரு கேள்வியக் கேட்டா என்ன கிடைக்கும்..

பல்பு கிடைக்கும் மகி..

ஹ்ம்.. நல்லா நக்கலடிக்க கத்துகிட்டு இருக்க.. நான் ஒரு கேள்வி கேக்குறேன்.. நீ எது செஞ்சாலும் கடமை உணர்வுல செய்யிறயா இல்ல பொறுப்புணர்வுல செய்யிறயா..

எந்த உணர்வுலயும் செய்யல.. பசிக்குது சாப்புடறேன் அவ்வளவுதான்.. கடமை , பொறுப்பு அப்பிடின்னா என்னனேன்னு தெரியல ..

நல்லதுதான்.. நான் எதிர்பார்த்தத விட நல்ல பதில்தான் சொல்லியிருக்க.. கடமை பொறுப்பு பத்தி நிறைய பேசலாம்.. நீ சொன்ன ’பசிக்குது சாப்புடறேன்’ அப்பிடிங்கறத பத்தி கொஞ்சம் சொல்றேன்.. முதல்ல உனக்கு மட்டும் பசிக்கல .. எல்லா உயிருக்கும் பசி இருக்கு இல்லையா.. அப்ப பசி என்பது இயற்கை.. பசிச்சா சாப்பிடனும்.. மனுசன் எப்படி சாப்புடறான்.. வாயிலதான்னு கடிக்காம சொல்லு.. அது கூட வேண்டாம் நீ எப்படிசாப்புடற..

வீட்டுல போடுறாய்ங்க நான் சாப்புடறேன்..

அவ்வளவுதான் தெரியுது உனக்கு .. வேற எதாவது சொல்ல முடியுமா..

அப்பா  வேலைக்கு போறார்.. அம்மா சமைக்கிறாங்க.. நான் சாப்புடறேன்..

ஏறக்குறைய சரியா சொல்ற.. சமைக்குறதும் ஒரு வேலைதான.. ஆக நீ சாப்புடறதுக்கு ரெண்டு பேரும் வேலை செய்றாங்க இல்லையா.. அம்மா ஏன் வேலை செய்றாங்கன்னு ஆராய்ந்து பாத்தோம்னா குடும்ப அமைப்பப் பத்தின மொத்த வரலாறையும் தெரிஞ்சுக்கலாம்.. அதே போல அப்பா ஏன் வேலைக்குப் போனார்னு ஆராய்ந்தோம்னா சமூகத்தோட மொத்த வரலாறையும் தெரிஞ்சுக்கலாம்..

தீந்திடும்.. இத தெரிஞ்சுகிட்டு என்ன ஆகப் போகுது மகி..

என்னைப் பொறுத்தவரைக்கும் செய்தே ஆக வேண்டிய வேலைகள்ல ஒன்னு இந்த வரலாறைத் தெரிஞ்சுக்கிறதுதான்.. ஒவ்வொருத்தரும் அனைத்துக்குமான அடிப்படையான வரலாற்று அறிவு தெரிஞ்சாத்தான் தானும் நல்லா இருந்து சமுதாயத்திற்கும் நல்லதா இருக்க முடியும்..

எந்த சமுதாயத்திற்கு மகி..

செம.. இதுவரைக்கும் பேசுனதுல இந்த கேள்விதான் கூர்மையான அறிவுப்பூர்வமான கேள்வி.. அப்ப உலகத்துல ஒன்னுக்கும் அதிகமான சமுதாயம் இருக்குன்னு உனக்கு தெரியுது இல்லையா..

அப்படி இல்ல.. வெற வேற சமுதாயம் இருக்குதான.. ஆனா என்னான்னு சொல்லத் தெரியல..
பாதகமில்ல தேஜா.. தெரிஞ்சுக்கிற ஆர்வம்தான் முக்கியம்.. எல்லாத்தையும் அறிவியல் அடிப்படையில இன்னும் சொல்லப்போனா பகுத்தறிவு அடிப்படையில சமுதாயத்தைப் புரிஞ்சுக்கிறதுதான் அவசியம்.. அனைத்துக்குமான அடிப்படை புரிதல் அப்படின்னு பொதுவா ஒரு தலைப்பை வைக்கலாம்.

 அனைத்திற்குமான அடிப்படைப் புரிதல்:

            அனைத்திற்குமான அடிப்படைப் புரிதலை தெரிந்து கொள்ள நான் அவற்றை உளவியல் ரீதியாக மூன்று பெரும் பிரிவுகளாய் பிரித்துக் கொள்கிறேன். அவை முறையே, 1. வரலாற்றின் உளவியல், 2. பொறுப்புணர்வின் உளவியல், 3. வெற்றியின் உளவியல். இந்த மூன்று தலைப்புகளின் அடிப்படையில் நாம் பல்வேறு அடிப்படை விசயங்களை சுருக்கமாக அறிந்து கொண்டால், முடிவுரையில் நான் முதலில் சொன்ன மகிழ்ச்சி, வாழ்க்கை, காலம் மற்றும் தூரம் ஆகிய பதங்களுக்கு இடையில் இருக்கும் தொடர்பு மற்றும் தொடர்பின்மை பற்றிய விளக்கங்களை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். ஒவ்வொரு தலைப்புக்கு கீழும் எவற்றைப் பற்றிச் சொல்லப் போகிறேன் என்றும் மிகச் சுருக்கமாக கூறி விடுகிறேன். பின்னால் விரிவாகப் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

சாமி நீ சாதரணமாவே பேசு..

இல்ல தேஜா.. நான் அதிகபட்சமா எளிமையாத்தான் பேசுறேன்.. இந்த மாதிரி சில நேரத்துல சோன்னாத்தான் இன்னும் தெளிவான கேள்விகள நீ கேக்க உதவும்.. முதல் விசயம் வரலாறு.. இதுதான் எல்லா புரிதலுக்கும் அடிப்படை.. வரலாறுன்னா என்ன, எதுக்குகாக வரலாறு, முக்கியமா எது சரியான வரலாறு.. ஆகியவற்றை தெரிஞ்சுக்கிறது தான்..

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே..

ஹி..ஹி.. ஆனா அதுதாண்டா முக்கியமான உண்மையும் கூட.. மிகச் சரியான வரலாற்றை தெரிஞ்சுக்குற ஒரு மனிதர் சரியான அறிவு ஜீவியா மாறக்கூடும்.. இரண்டாவதா பொறுப்புணர்வு..  நாம  வாழுற பூமி.. அதோட அதிசயத்திலும் அதிசயமான இருப்பு.. உயிரினம் பற்றிய வரலாறு மனித வரலாறு பத்தி பாப்போம்.. கடைசியா வெற்றி.. வெற்றினா என்ன அதுக்கான மனித தேவை என்ன.. உண்மையில வெற்றி ஒரு மனிதனுக்கு என்னவிதமா உதவுது அப்பிடின்னு பாக்கலாம்.. இதத் தவிர உடல் (புணர்ச்சி), மொழி (தகவல் தொடர்பு), திருமணம் (தனி மற்றும் பொது), பணம், விளம்பரம், ஜாதி, தீவிரவாதம், உணர்வெழுச்சி (Emotion)  உலகப் பேரழிவு ஆயுதங்கள் (MDW), பார்வைக் கோணம் அப்படின்னு சில தனித்தனி தலைப்புகள்ல இன்னும் கொஞ்சம் அடிப்படை விசயங்களை புரிஞ்சுக்கலாம்..

ஙேன்னு இருக்கு..

                                                                                       தொடரும்.

17.5.10

புதியதளம்

எனது பதிவு தள பெயரை மாற்றியுள்ளேன். தொடர்ந்து எனது பதிவுகளை வாசிக்க கீழே குறிப்பிட்டுள்ள இணைப்பை பயன்படுத்தியோ அல்லது நேரடியாக தளப்பெயரை தட்டச்சு செய்தோ எனது தளத்திற்கு வருகை தருமாறு வேண்டுகிறேன். நன்றி.

http://theethumnanrum.blogspot.com/

***********************************************************************************

5.5.10

அற்றவை நிரம்பிய தேகம்

கற்றவை கரையும் கானுறை ஞானம்
சற்றவை மறைய களிபெறும் மோனம்
மற்றவை தேடிடா மதிவானின் போதம்
அற்றவை நிறைந்திட்ட அந்தியின் நாதம்

முற்றவை விலகிடா முற்றத்து வானம்
சிற்றவை அடங்கிடா கருமுகிழ் தானம்
கூற்றவை முற்றிடா குறுந்தமிழ் பானம்
கொற்றவை என்றொரு காடேகும் மௌனம் - திக்

கற்றவை நிரம்பிய விசும்பிடை வாசம்
பெற்றவை யாவிலும் தண்பனி வீசும்
உற்றவை பற்றிய ஊனுயிர் தாகம் - அமிழ்து
மற்றவை நிரம்பிய கலயமுன் தேகம்.

*******************

1.5.10

சித்திரைப் பௌர்ணமி
சித்திரைப் பௌர்ணமி. இம்மாதம் எனது மொபைல் கேமராவில் எடுத்தது. ஒவ்வொரு வருடமும் சித்திரையில் பௌர்ணமியை பார்ப்பது எனக்கு பிரார்த்தனை. இம்முறை கடுமையான வேலைப்பளுவுன் இடையில் கிடைத்த நேரத்தில் எடுத்தது. இடம் திருச்சி பொன்மலை அருகில்.
இந்த படம் தொடர்பாகவும் கவிதை எழுத நண்பர்களை அழைக்கிறேன்.
...................................

ஒளிரும் மரம்

கால்பரீட்சை ஒரு பாவச்செயல்.
அரைப்பரீட்சை ஒரு பெருங்குற்றம்.
முழுப்பரீச்சை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்
.

மாணவர்களின் கற்பனைக்கு ஒரு தலைவணக்கம். இதை ஒரு மாணவனின் தமிழ் புத்தகத்தில் பார்த்தேன்! தீண்டாமை என்னும் வார்த்தயை பென்சிலால் அழித்து மேலே எழுதியிருக்கிறான். பார்த்தது நாலைந்து வருடமிருக்கும். முதல் தடவை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பும் சிரிப்பும் இன்னும் மாறவில்லை. ஒரு அசட்டு சிரிப்பும் வெட்கமுமாய் அந்த புத்தகத்தை வாங்கி பைக்குள் திணித்துக்கொண்டான் அந்த ஆறாவது வகுப்புக்கு போகப்போகும் மாணவன். இந்த வருடமும் பரிட்சை முடிந்து கோடை விடுமுறையை அனுபவிக்க தொடங்கிவிட்டார்கள் மாணவக்கண்மணிகள். என்னனென்ன செய்வார்கள் என்று பார்த்தால் பெரும் பரிதாபமே மிஞ்சுகிறது. அவர்களின் அறுபது சதநேரத்தை தொலைகாட்சி கொன்றுவிடும். முட்டாள்தனத்தின் உச்சமான சம்மர் கோச்சிங் சில பல நூறுகளைக் கொல்லும். எல்லோருக்கும் வாய்க்காது இன்பச்சுற்றுலா. உறவினர் வீட்டுக்கோ கிராமத்து சூழலுக்கோ செல்லும் பழக்கம் அருகி விட்டது. என் பையன்கள் ஒரு நாளைக்கு ஐந்தாறு முறையாவது போரடிக்குது என்கிற வார்த்தையை பிரயோகிக்கிறார்கள். மனம் பயந்து தவிக்கிறது. அவர்கள் விரும்பும் ஒவ்வொரு பொழுதுபோக்கு முறையும் பெரும் செலவின வகைகளாய் இருக்கிறது. மக்கள் அவற்றைப்பற்றி பெரிதாக அக்கறைப்படவும் செய்வதில்லை. செலவு குறைவான உருப்படியான பொழுதுபோக்குகளை பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள். குழந்தைகளின் வயதுக்கு தக்கவாறு. நான் பரிதுரைக்கும் ஒரே பொழுதுபோக்கு நம் தொன்மைக்கதைகளை சொல்லியும் நடித்துக்காட்டும் பழக்கத்தை உருவாக்குவதும். நடனம் நல்லதுதான். ஆனால் சினிமா பாடல்களுக்கு அல்ல.


******************
இடிமின்னல்களுடன் கலைகட்டுகிறது கோடைமழை. இப்படி வெயிலில் பெய்யும் மழைக்கு காத்திரமான மண்வாசனையுண்டு. மேலும் இதன் மாலை நேர மேகம் அற்புதத்திலும் அற்புதமானவை. அநேக நேரங்களில் வெள்ளிச்சாம்பல் வண்ணத்தில் மின்னிப்பரவும். அதன் பின்புலத்தில் வெட்டும் மின்னல் நமக்கு கடவுளை காட்டும் அளவு வெளிச்சம் அளிக்கும். நின்று பெய்யும் மழையும் அதன் சத்தமும் மாலை மின்னலும் நம் பால்யத்தின் மிக நுணுக்கமான சுருள்களை விரிக்க வல்லவை.

*****************************

மின்மினிப்பூச்சிகளின் ஒளி திரவத்தை மரங்களில் செலுத்துவதின் மூலம் ஒளிரும் மரங்களை உருவாக்கலாம் என்றும் தெருவிளக்கு கம்பங்களை அகற்றி தெருவிளக்கு மரங்கள் ஏற்படுத்தலாமென்கிற சாத்தியப்பாடுகளை திட்ட வரைவில் நிரூபித்த திருச்சியை சேர்ந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தெருவெல்லாம் ஒளிரும் மரம் என்கிற அற்புத படிமத்தை கவிதையாக்க சிவகுமாரை அழைக்கிறேன். குட்டையாய் இல்லாமல் நீண்ட கவிதையாய் வந்தால் நன்று. மற்றவர்களும் முயலலாம்.

***********************