9.3.10

பிணக்கில் சென்ற கடவுள்

கடவுளைப்பற்றி எழுதத்தொடங்கினேன். கடலாழத்தின் அழுத்தமும் உப்புச்சுவையும் தொடுவானத்தையும் படைத்தவர் அவர். பறவைகளின் ஒளிச்சிதறல் பரவும் பெருங்காடுகளைப் படைத்தவரும் கூட. பனித்துளி சர்ப்பவிசம் மனிதர்கள் நாக்கு மூங்கிலிசை வசைச்சொல் மற்றும் எல்லாவற்றையும் படைத்தவர் அவரெனக்கொள்ளலாம்.மேலும் அவரைப்பற்றி எதைச்சொன்னாலும் பழையதாய்ப் போய்விடுகிற அவஸ்த்தை. தவிர, பசியின்மை தாகம் புல்வெளி மரணம் எதையும் விட்டுவைக்காத காமம்... எழுதுவதை நிறுத்தி எதை எழுதாமல் விட்டுவிட்டேன் என்றெண்ணியவாறு மீண்டும் வாசிக்க எழுதியதெல்லாம் ஒரு சாதாரண முத்தம் பற்றிய குறிப்புகள் என உணர்தபோது கடவுள் தோன்றி சிரித்து மறைந்தார்.

*********

தன்னைத்தனே முத்தமிட்டுக்கொள்ளும் ஒரு பிரார்த்தனை வடிவத்தை அனுமதித்த கடவுளை இன்று பெய்த மழையின் லேசான மண்வாசனையோடு நிபந்தனை ஏதுமில்லாமல் மன்னித்தேன். பிழைத்துப்போன கடவுள் முத்தவண்ண ஓங்காரத்தை இடியாக்கி எனக்கு பரிசளித்தார்.

********

மாலையொன்றின் முடிவில் எரிச்சலுடன் விடைபெற்றார் என்னிடமிருந்து கடவுள். என்னைப்போலவே அவருக்கும் வருத்தமில்லை. வருத்தமெல்லாம் முத்தமிட்டு விளையாடிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் தவறவிட்ட முத்தத்தை இருவரும் பிடிக்கச்சென்று மீண்டும் தவறவிட்டோம் என்பதாலும் உடைந்த முத்தத்தை அவரால் மட்டுமல்ல என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான்.

*********

தலைதெறிக்க ஓடிவந்த கடவுளின் தொண்டை வறட்சிக்கு நீர் கொடுத்து என்வென்று கேட்டேன். தாகமடங்கி நிதானமான அவர் என்னைப்பார்த்து சிரிக்கத் தொடங்கி நிறுத்தினார். அழத்தொடங்கி நிறுத்தினார். பேசத்தொடங்கி நிறுத்தினார். என்னசெய்வது என்று திகைத்து அதை மறைக்கத் திரும்பி நிறுத்தினார். பின்பு மெதுவாய் என்னிடம் நீ கேட்ட கேள்விக்கு என்னாலான பதிலைத் தேடிவிட்டேன். ஒரே பதில்தான். முத்தம் முத்தத்தால் மட்டுமே ஆனது என்றார். பின்பு சென்றுவிட்டார்.

***********

ஆதி சூட்சுமம் அறிந்த உனக்கு இனி நான் துளியும் தேவையில்லை என்றார் கடவுள். சற்று நேரம் அமைதியாய் இருந்து பின்பு ஆரத்தழுவி மொத்தமாய் என்னிடமிருந்து பிரிவதாய்சொல்லி புறப்பட்டார். எனக்கு வருத்தமில்லை. இன்று காலையில்தான் தெரிந்து கொண்டேன் அனைத்து முத்தங்களின் மறுபக்கங்களிலும் இருக்கும் அவரது இருப்பிடத்தை. எனக்கு தெரிந்துவிட்டதால் ஏற்பட்ட வெட்கவுணர்வால்தான் பிரிகிறார் எனத்தெரிந்து என்னவொரு குழந்தைத்தனம் என வியந்தேன். பின்பு என் நெஞ்சு நெற்றி புஜங்கள் தொட்டு என் வலது ஆட்காட்டி விரலை கேள்விக்குறி போல வளைத்து அதன்மேலோர் முத்தமிட்டுக் கொண்டேன்.

**************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக