நண்ப
அனைத்தையும் அடக்கியதது. சிறுத்து, கூரிய பார்வை. அகன்று அகண்ட கேள்வி. மாறாத ஞாபகம் மற்றும் சமரசமற்ற பழிகொள்ளும் தன்மை. மிகமிக அழுத்தமான பாதத்தடம். எல்லாமுமாய் எதிர் நிற்கிறது யானையாய். கரியபூனைக்குட்டியாய் நிற்கும் என்முன். இருப்பதோ கவிதை என்னும் சிறிய அங்குசம்.
நண்ப
தற்கொலைக்கு அல்லது கொலைக்கு அல்லது ஒரு நீண்ட ரயில் பயணத்திற்கு அல்லது கடலோரத்தில் சிப்பிகள் பொறுக்குவதற்கு அல்லது சாலையில் கடக்கும் ஒரு நத்தையை கவனிப்பதற்கு என்று சொல்லத்தொடங்கும் முன் கவிதையிருக்கிறது பதிலீடாய் என்கிறாய். அவள் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அல்லது கவனித்துக்கொண்டிருக்கக்கூடும். அல்லது நிச்சயம் அது கண்காணிப்பாய்த்தான் இருக்கும். என்றதனால் கவிதைக்கு பதிலீடாக ஒரு புன்னகை ஒரு முகமன் அல்லது ஒரு பணிதல் போன்ற ஏதாவது ஒன்று மிகவும் நல்லது. அல்லது அவள் பாதத்தில் நீண்ட குளிர்ச்சியான முத்தம் அதனினும் நல்லது.
நண்ப
நாம் சேர்த்துண்ணும் இவ்வினிய வேளையில் ஒரு குவளை சாராயத்தின் தேவை பற்றி தெரிந்து கொண்ட அப்பறவையை நான் நேசிக்கிறேன். மண் குழைத்து உருவாக்கிய குவளையில் திரவம் நிரப்பும்சப்தத்தை எழுப்புகிறது அப்பறவை. நாம் பேசிகொள்வதற்கு இதமான இவ்வேளையை இளக்கமாக்கி சங்கீத நுட்பம் சேர்க்கிறது அவ்வொலி. அறைச்சுவர்கள் கரைய நீர்மீது மிதக்கின்றன நமது நாற்காலிகள். கடல்வெளி ஆகிறது நிலம். படகென நகர்கிறது காலம். காலத்தினூடே பறக்கும் அப்பறவையின் பெயரை விளிக்கிறேன். என்னுடன் சேர்ந்து நீயும் அழைக்கிறாய். எதிரொலியில் அப்பறவை அளிக்கும் பதில் நம் குரலாகிறது. அது கேட்டு சிரித்துக்கொள்ளும் நமது விழிகள் நுகரும் வாசனை சிதைவுகளுக்கானது.
நண்ப
எனது வார்த்தைகளுக்கு உன் உடலிலும் உனது வார்த்தைகளுக்கு எனது உடலிலும் படர்கிறது செதில்கள். வார்த்தைகள் தடித்த பொழுதில் நாம் வெள்ளிச்சாம்பல் நிறக்கடலில் அப்பறவையை மறந்து நீந்திக்கொண்டிருக்கிறோம். தனது மொத்த தாகத்திற்காகவும் நமது நிலத்தில் கொட்டப்பட்ட அக்கடலை குடித்த வெண்கழுத்தும் அடர்தாமிர நிறமும் கொண்ட அப்பறவையின் எச்சம் தழும்பாகி பதிகிறது எனது குதத்தில். சுற்றி வளர்ந்த சுவர்கள் நம்மைச் சூழ்ந்து அறையானதும் உன் கழிப்பறை குழாயில் கசிகிறது அளத்தின் நீர். தீர்க்கப்படாத நம் தாகத்தினை தூக்கிப்பரக்கு அப்பறவை பாரம் தாங்காமல் அலறும் பொழுது நான் அதை வெறுக்கத் தொடங்கினேன். எப்போதுன் நீ என்னை வழிமொழிவாய் என நம்பியபடி.
நண்ப
ஆணாகிய என்னிடம் ஆணாகிய நீ முத்தங்கள் கேட்டு நச்சரிக்கிறாய். முரட்டுத்தனமாக மறுத்தலிக்கிறேன். முத்தங்களுக்கு ஏது பால்பேதமென்கிறாய். அருவெறுப்பின் உச்சமென்கிறேன். புன்னகை புரிகிறாய். உடல் கூசுகிறது நினைத்தாலேவென்கிறேன். உன் பூத்த புன்னகை சிரிப்பாகிறது. உன் உறுதி கண்டு பயந்து விலகியோடுகிறேன் சிரிப்பொலி அடைத்த பாதைகள் விலக்கி. கனவில் நான் உனக்கு இட்ட நீண்ட முத்தத்திற்குப்பின் நான் பெண்ணானேன் நீயும் பெண்ணானாய். பெண்ணாகிய நீ பெண்ணான என்னிடம் முத்தங்கள் கேட்டு நச்சரிக்கிறாய். நாணத்துடன் மறுத்தலிக்கிறேன். பால் பேதம் அற்றவை முத்தங்கள். வேப்பமர நிழலில் அமர்ந்து நமதான இவ்வுரையாடலை கேட்டு அவர்கள் சிரித்துக்கொள்கிறார்கள் மற்றவர்களுக்கு தெரியாமல். அவர்கள் முத்தங்களின் வல்லமை அறிந்தவர்கள்.
நண்ப
அவளை எனக்கு பிடித்திருக்கிறது. சலனமற்ற உன் முகம் சலனமற்ற வார்த்தைகளை சலசலவென உதிர்கிறது. குடிநீர் நிரம்பிய பாலித்தீன் பையை சுவற்றில் எரிந்து உடைத்தாய். சுவற்றில் தெறித்த நீரின் கோலத்தில் நெளிந்தது ஒரு அமீபா. அவளுடன் இன்னொரு பெண்ணும் சில ஆண்களும் இருந்தார்கள். நீயும் நானும் கூட. கூரையற்ற அறையின் தரையில் அமர்ந்து மது அருந்தினோம். வாழ்நாளின் அவமானகரமான அன்று நான் செய்தேன். சுவற்றில் பட்டு தெறித்த மது போத்தலின் ஆடிச்சில்லுகள் என் ஞாபகக்கிழிசலின் ஓரங்களைத் தைத்தன. அமர்ந்திருந்தவர்க்கெல்லாம் ஆளுக்கொரு ரணம். ஆனந்தத்திலும் துக்கத்திலும் சில துளிகளை இழந்தது நமது விழிகள். விடியலில் நாம் அவர்களை விட்டு வெளியேறினோம் நீ அருகிலும் நான் வெகுதொலைவிலும். இன்றும் அவளை எனக்கு பிடித்திருக்கிறது. அவளுக்கு உன்னைத்தான் பிடித்திருக்கிறது என தெரிந்த பிறகும்.
நண்ப
அலுப்பு தட்டும் ஒற்றைக் கேலிக் கூத்து என் மரணம் திரும்பத் திரும்ப நிகழ்கிறது மைதூனத்தில். சொல் மொழி துளிவானம் நீர்மை எல்லாம் புதைய நிகழ்கிறது காலம். உன் பெயர் அவள். என் பெயர் அவன். அவன் பெயர் நீ. அவள் பெயர் நான். எழுத்தெல்லாம் ஸ்கலிதம் என்கிறான் கணிதன். மீதம் கிடைத்தது பூச்சியம். சமன்பாடு நிறைவடைந்ததில் பூப்படையும் காமம். கடலின் குறுக்கே பறக்கும் காகம் காவென கத்துவது யோனிதர்மம்.
நண்ப
மௌனம் வேயப்பட்ட அறையில் ஆழ்கடல் அடர்வென மனங்கொண்டு அமர்ந்திருக்கிறேன். உன் பால்வெண்மை வார்த்தைகளில் என்னை வெளியழைக்கிறாய். ஆப்பிளின் நறுமணத்தை சொல்லாக்குகிறாய். பயங்களின் இழையாய் படியும் மனத்தின் மீது செங்கல் செங்கலாய் தைரியம் கட்டுகிறதது. என் சொற்கள் வெளியேற வேண்டிய தருணத்தை நோக்கி எழுகிறது அதன் சுவர். ரோஜாவின் வண்ணத்தையொத்த உன் வார்த்தைகள் செய்கிறது எனதான நம்பிக்கைகளை மீட்க தேவையான அனைத்து மாயங்களையும். வகையறியாத அருட்பாடலைப் போல அவை உன் உதடுகளில் உச்சரிப்பு கொண்டிருக்கிறது. ஊசியிலைத் தாவரத்தில் வடியும் மழைத்துளியாய் உதிர்ந்து சிதறுகிறது எனக்கான பயங்கள். கிடையில் கதறும் ஆடுகளின் ஒர்மையை நான் அடைந்த கணத்தில் இடதுகண்ணைச் சிமிட்டி செல்கிறாய் எனது முன்தலையில் முளைத்த ஒற்றைக்கொம்பின் கூரியமுனை பார்த்து.
நண்ப
என்னிடமிருந்து விலகிச்செல்லும் என்னிடமிருந்தே தொடங்குகிற உரையாடலின் முடிவில் குரோதம் கொள்கிறாய் என்னிடமே. தன் கூட்டுக்கு செருக காக்கைத்தூக்கிச் செல்லும் வடிவமில்லாத சிறுகுச்சி போல என்னை விட்டுவிட்டு என்னை தூக்கிச்செல்கிறாய் உன் கூட்டுக்கு நான் குச்சியாய் இருக்க ஏலாதென தெரிந்தே. உன் சுவாசத்தின் ஒழுங்குமுறைகள் என் சுவாசத்திற்கு எதிரானவைஎன தெரிந்தே நானும் வுன் கூட்டுக்குச்சியாகிறேன். ஆயினும் ஒன்று கேட்க அனுமதி. என்னை நீ எடுத்துச்சென்ற பின் நீ விட்டுச்சென்ற நான் தெருமரமாய் நிற்கிறேன். அதில் உன் கூடை கட்டேன்... நகரமுடியாமல் இருக்கும் என் மீது நீ அமர்வது எனக்கு விருப்பமாய் இருக்கிறது. என்மீது என்னாலான குச்சி கொண்டு நீ கட்டும் கூட்டில் நீ வசிக்க நேர்ந்தால் என்னிடமிருக்கும் சில பழங்களையும் பறவைகள் இரண்டையும் அளித்து மகிழ்வேன்.
நண்ப
நல்லது போய்வா. நான் கேட்டது முடிவுக்கு வந்துவிட்டது. இனி நான் ஒரு நாட்காட்டி மட்டுமே. தினமும் என்னைக் கிழிக்கலாம். கசக்கி குப்பையிலோ மலச் சாக்கடையிலோ போடலாம். வழியும் எச்சிலைத் துடைக்கவோ கைஈரத்தை வழித்தேடுக்கவோ என்னை நீ பயன்படுத்தலாம். அல்லது கிழிக்காமல் விட்டு என்னை கடந்தகாலமாக்கலாம் உன் பழைய ஞாபகங்களின் வழித்துணைக்கு. காலமாவதற்கும் கடந்தகாலமாவதற்கும் என்னைப் பணிய வைத்தவுன் அன்பிற்கு பணிவிடை செய்ய நானுன் தாழ்பணிகிறேன்.
நண்ப
பதிலாக எனக்கு நீ ஒரேயொரு முத்தம் கொடு.
*****************
கள்ளக்காதல்' தொகுப்பிலிருந்து.
*********************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக