27.1.10

சொல்லுவதெல்லாம் பொய் 6

***************
08.03.1992

00.08

எனக்கு நேராதது உனக்கு வாய்த்தது. காதல். என்னைவிட ஐந்து வயது மூத்தவன் என்றாலும் அவன் எனக்கு நண்பனாய் அறிமுகமானான். காமுகன், பெண் என்றால் வழியிலிருக்கும் கிணற்றைத்தாண்டிவிடுவான். அதே போல நின்றிருந்த ஒரு மாட்டுவண்டியை ஏறித் தாண்டியபோது விழுந்து காலை முறித்துக்கொண்ட நாளில் நான் அவனை முதலில் பார்த்தேன். காலொடிந்தது அவனுக்கு உறைக்கவில்லை காணச்செல்லும் பெண்ணை தவறவிடக்கூடாது. முடியாமல் போனது அவளைப்பார்க்க. மூன்று மாதங்கள் தினமும் ஒரு தடவை அப்பெண்ணை தவறவிட்டது பற்றி பேசிவிடுவான். தொண்ணூற்று ஏழாம் நாள் அதே பெண்ணை மீண்டும் பார்த்தபின்தான் அந்த பேச்சு நின்றது. அவனை நீ காதலித்தாய். உனக்கு தெரியாதுடா அவன்தான் இனி எல்லாம் என்றாய். புரியவில்லை. எனக்கும் நீ சொல்லும்போது கோவம் எதுவும் வரவில்லை என்பது ஆச்சர்யம்தான். எனது பத்து வருட நண்பனை நீ காதலிக்கிறாய். இது விதியின்றி வேறு என்ன. அவனிடம் சொல்லிவிட்டாயா. இல்லை ஆனால் அவனுக்கு தெரியும். உன் குரலில் இருந்த உறுதி எனக்கு லேசான பயத்தை அளித்ததை நான் உன்னிடம் மறைத்துவிட்டேன். அப்பெடிஎன்றால் ஏன்அவன் என்னிடம் சொல்லவில்லை. எனக்கு கடுமையான கோபம் வந்தது. மனதை படிப்பதில் நீ கில்லாடி. அவனை கோபித்து ஒரு பிரயோசனமும் இல்லை என்கிறாய். நான் மலைத்துப்போய் நிற்கிறேன். என்னை நோக்கிய அவனது எண்ணம் என்னால் உருவாக்கப்பட்டது, என்கிறாய். வயலில் தண்ணீர் பாயச்சுபவன் தனக்கு தேவையான வரப்பில் நீர் திருப்பி விடுவதைப்போல அவனை, அவன் எண்ணபாய்ச்சலை என்விழி நோக்கி திருப்பி விட்டேன் அவனறியாமல் என்கிறாய். மூன்று மாதங்களாய் அவனும் ஒரு வினோத பிராணி போலவே செயல்படுவது இதற்காகத்தானோ. சிறை சென்று வந்ததால் ஏற்பட்ட குளறுபடி என்றே எண்ணிஇருந்தேன். வெறும் பணத்திற்காக அவன் அந்த திருட்டை செய்திருப்பான் என்று எனக்கும் நம்பிக்கையில்லை. எதோ ஒன்று அவனை ஈர்த்திருக்கிறது. கிருபா வின் கும்பலில் எதற்காக தன்னை இணைத்துக்கொண்டான் என்று அவனாலேயே சொல்லமுடியவில்லை என்பது எனக்கு நினைவில் வருகிறது. குடிப்பதை நிறுத்தியிருந்தான். புகைப்பதையும் கூட. அவன் வாய் நாற்றத்தை குறைக்க மருந்துகள் எடுத்துக்கொள்கிறான். நாட்டு வைத்தியத்தை தவிர எதற்கும் போகாதவன் மணிக்குமார் டாக்டரிடம் தன்னுடல் சோதனையை செய்துகொள்கிறான். இத்தனை வருடங்கள் நீ அவனை பார்க்கும் போதும் சாதரணமாய் தான் இருந்திருக்கிறாய். திடீரென்று என்ன அவன் மீது காதல். திருமணம் வேண்டாமென்று உறுதியடன் இருந்த நீ எங்கே. எல்லாவற்றிலும் மகத்தான ஆச்சர்யம் அப்பாவும் அம்மாவும் ஒப்புக்கொண்டது. உனக்கும் ராமனுக்கும் திருமணம். அவன் நமது ஜாதி என்பதுமட்டும்தானா அவர்களுக்கு காரணம். ஏராளமிருக்கிறது மறுப்பதற்கு. அவர்களால் முடியாது என்று நீ ஒற்றை வார்த்தையில் உறுதி செய்கிறாய். டிஷோசாவுக்கு பெரும் மகிழ்ச்சி. என்னமா நடக்கிறது

09.07.1994
00.09

டிசொசாவுக்கு அடிபடவில்லை. நல்லவேளை. விடிந்தால் திருமணம். ராமன் ஒரு முறை-கடைசிமுறை என்று சொன்னான்-குடிப்பதற்கு விருப்பம் தெரிவித்தான். நான் வாங்கிவர வெளியேறும்போது டிசோசா குறுக்கிட்டாள். நகருக்குள் எதோ வாங்க வேண்டுமாம். லச்சுமி திரையரங்கம் அருகில் பெட்ரோல் போட திரும்பியபோது ஆட்டோ ஒன்று பின்புறம் இடித்தது. அவன் தாயை திட்டியவாறு வண்டியை கீழே விட்டேன். டிசோசா தடுமாறி விழாமல் குதித்து நின்றிருந்தாள்.
எனக்கு நெற்றியில் ரத்தம். இடது கால் முழுவதும் வலி. வாயிலிருந்தும் ரத்தம். டிசோசா பொறுமையாய் வாயை துடைத்து விட்டு. வாயை திறந்து காட்டு என்றாள். தொண்டைக்குழியை பார்த்து விட்டு, ஈறுலதான் அடி போல வேற எங்கடா என்கிறாள். எதுக்கு இப்படி அசிங்கமா பேசுற என்கிறாள். எனக்கு எதையும் கேட்க முடியவில்லை. வலி. அதே ஆட்டோ காரனை அழைத்து அவளை ஏற்றி விட்டுவிட்டு மோகனம் நர்சிங் ஹோமுக்கு போனேன். இடது கணுக்காலில் மேல் சின்ன விரிசல் எலும்பில் உண்டாயிருந்தது. கட்டிப்போட்டு இரண்டு தையல்களை நெற்றியில் போட்டு, படுக்கையில் படுக்க வைத்துவிட்டார்கள். புது மாப்பிளை ராமனுக்கு என்னால் சரக்கு வாங்கித்தர முடியவில்லை. வருத்தமாய் இருந்தது. ஆனால் கிருபா அவனுக்கு வாங்கி கொடுத்து குடிக்கச்சொள்ளியும் ராமன் குடிக்கவில்லை. உன்னிடம் கேட்டு நானும் நீயும் ஒரு நாள் குடிக்க வேண்டுமடா என்று மணக்கோலத்துடன் மருத்துவ அறையில் வந்து சொன்னான். என்ன சொல்றான் என்று கேட்கிறாய். அவனை நீயும் ஒருமையில் அழைக்கத்தொடங்கியிருக்கிறாய். திருமணத்திற்கு முன் அவனை நீ பன்மையில் அழைப்பாய். நாளைக்கு வர்றோம் என்றுவிட்டு வாடா போகலாம் என்று அவனை அழைத்துச்செல்கிறாய். குட்டி ஆட்டுக்கு இலைதளை காட்டி அழைத்துப்போகும் இடைச்சியை போல. அவனும் ஆடு போலவே பின்தொடர்கிறான். அன்றே தனசேகரனும் அவன் மனைவியை அழைத்துக்கொண்டு என்னைப்பார்க்க வந்திருந்தான். மூன்று வருடங்களுக்கு முன் அவளை முழுதாகப்பார்த்தது. இப்பொழுது அவள் தொலைபேசி நிலையத்திற்கு வேலைக்கு போவதில்லையாம். குழந்தையை பார்க்க நேரம் போதவில்லை என்றான். பெண் குழந்தை. அவளின் முகம் எனக்கு மிகப்பரிச்சயமான ஒன்றாய் இருந்து. வெளியேறும்போது தனசேகரனை முன்னால் போகவிட்டு என்னை திரும்ப பார்த்து சிரித்தாள். எனக்கு அந்த சிரிப்பு அவஷ்த்தையை அளித்தது. அந்த அவஷ்த்தையை நான் சிரிப்பாய் மாற்றி மோகனம் மருத்துவமனையின் நர்ஸ் நந்துவிடம் அளித்தேன். மறுநாள் அவள் எனக்கு அளித்த தேநீர் உப்புகரித்தத்து.

*************************

2 கருத்துகள்:

  1. அந்த புன்னகையை வாங்கிகொள்ளும் பக்குவம் அந்த nurse கிட்ட இல்ல .உப்பு டீயும் சில சமயம் ருசிக்கும்..
    sambavangalai evvaru korkka poreengannu waiting...

    பதிலளிநீக்கு
  2. read again padma. I tried to tell other one. try it again and tell what you think.

    பதிலளிநீக்கு