4.1.10

சொல்லுவதெல்லாம் பொய் 1

*******************


கவனமாய் கேள் விவேகி. இது நான் சொல்லப்போகும் கதைகளின் கூட்டம். குழப்பம் விளைவிக்கும் இக்கதைகளின் காலம் முன்னுக்கு பின் முரணானது. இதன் சம்பவங்கள் நேரடியானவை என நீங்கள் நம்பினால் நீங்கள் எமாற்றப்படுகிறீர்கள். நான் எனும் சன்னா தனக்குள் நிகழ்ந்த கற்கால சிந்தனைகள் இவை. விளையாட்டுச்சீட்டுகளை கலைக்கத்தொடங்குகிறேன். விவேகி வா. இது நமக்கான சமர். கவனமாய் இரு.




********




சன்னாசியின் நாட்குறிப்பு


00.00

15.07.1998 இரவு பத்து இருபதுக்கு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகத்தில் தடாலென விழுந்தேன். பத்து வினாடிகளுக்கு அம்மா அப்பா நீ என யாரும் நினைவுக்கு வரவில்லை. நமது கஷ்டமெல்லாம் முழுவதுமாக தோன்றி மறைந்தது. மறுநாள் மாமனானது அறிந்தேன். அப்பா எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பார். எதையும் நிம்மதியாக அனுபவிக்க முடியவில்லை பார்த்தாயா. ஒரு வாரம் ஒரு வருடம் போல் உள்ளது. உன் திருமணத்துக்கு முதல் நாள் இரவும் இதுபோல நான் வண்டியிலிருந்து விழுந்தது ஞாபகத்திற்கு வருகிறது. எவ்வளவு வேடிக்கை. இப்பொழுதெல்லாம் எனக்குக் கீழிருப்பவர்களிடம் கூட நேராக பார்த்து பேச முடியவில்லை. யாராவது ஜோக் அடித்தாலும் சிரிக்க எனக்கு தகுதி இருக்கிறதா என்று யோசிக்கிறேன். என் மூளை செயல் இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது. என்ன நடந்தாலும் என் மனம் தோல்வியை மட்டும் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. பசித்தாலும் நிறைய உண்ண மறுக்கிறது. இப்போதைக்கு என் இடதுகை எழுத மறுக்கிறது. அங்கயற்கண்ணி கை சரியாகட்டும் நிறைய எழுதுகிறேன்.

*******

26.02.1991 செயவ்வாய் இரவு.

00.01
அருவருக்க தக்க ஈனப்பிறவி என உலகில் ஏதேனும் உள்ளதா. தெரியவில்லை. ஒரு பட்டியலைப் பார்க்கலாம்: குஷ்டம் கண்ட உள்ளாடை கிழிந்த தெருவில் கிடக்கும் நீக்ரோ பிச்சைக்காரி, சொறிநாய், மலம் உண்ணும் பன்றி, பீழை தெறிக்கும் கழுதை, முருங்கைபிசின் போல வடியும் புண்களுடன் அம்மை கண்ட வேசி மற்றும் என்னால் கற்பனை செய்யவியலாத அவரவர்களுக்கு தக்க விதமாய் கற்பனை செய்யப்படும் பிம்பங்கள். இவைகளெல்லாம் தன்னளவில் புனிதமாகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் நியாயப்படுத்த கூடியதாகவும் அதே சமயத்தில் இயற்கையின் பேராதிக்ககூறின் ஒரு அழகாகவும் இருக்கிறது. எனில், அருவருக்கத்தகுந்த ஈனப்பிறவி என ஏதேனும் உண்மையில் இருக்கிறதா என்றால், இருக்கிறது மேலும் அதை இரண்டு வகையாக பிரிக்க முடியும். முதலாவதாக அருவருக்கத்தகுந்த ஈனப்பிறவி என எண்ணுகிற உணர்வு, ஒரு மனதின் வாழ்வு நீளத்தில் - மனிதனின் வாழ்வு நீளம் அல்ல - இவ்வுணர்வுக்கு பல்வேறு படிநிலைகள் உள்ளன. அவற்றின் அதிர்வுகளை அவ்வந்த மனமே தீர்மானிக்கும். தீர்மானிக்க வேண்டும். தீர்மானித்துக்கொள்ளும். இரண்டாவதாக, தன்னிலையையே அருவருக்கத்தகுந்த ஈனப்பிறவி என்று உணர்கிற தருணம். இது ஒரு வகையான அகவய நிகழ்வுப்போக்கு. தன்னைத்தானே அருவருக்கத்தகுந்த ஈனப்பிறவி என்று உணர்கிற தருணம் என்பது அந்த மனத்தின் படிக்கற்கள் போல. அதன் எடைக்கு தகுந்து அதன் வாழ்வுதிசை மாறும். இவ்வகையான உணர்வின் முதல் அறிமுகத்தின் போது ஏற்படும் மன உடைப்புகளை அம்மனம் புறக்கனிக்குமேயானால் பின் எப்போதும் அதேவகையான நிலையில் அம்மனம் இயங்கக்கூடும். என் மனம் என்னை அருவருக்கத்தகுந்த ஈனப்பிறவியாக உணர்ந்த கணம் இன்று எனக்கு வாய்த்தது. அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி நான் என்ன முடிவு செய்ய வேண்டும் என்று டிசோசாவிடம் கேட்கலாமென்று முடிவு செய்தேன்.

********

09.05.1991 புதன் இரவு.

00.02
மற்ற பெண்களைப்போலவே அவளும் ஒரு ஆணுக்கு மனைவியாய் இருந்தாள். அவள் மனவெளியைப்போன்றே அவள் உலகமும் மிகச்சிறியது. நகரின் ஒரு கட்டணதொலைபேசி நிலையத்தில் அவளது வலது ஆள்காட்டி விரலும் வலது காதுமடலும் கருத்துப்போகுமளவுக்கு வேலை செய்தாள். அவளது கணவன் நூற்பாலை ஒன்றில் வரைமுறையற்ற நேரங்களில் வேலை செய்தான். அந்த நூற்பாலையின் முதலாளி இனிய இரவொன்றில் தனது வீட்டு முற்றத்தில் அமர்ந்து பக்கார்டி ரம்மும் முந்திரிக்கொட்டையும் சாபிடப்பிடிக்காமல் ஏற்பட்ட சிறு மனக்கிளர்வினால் தன் ஆலையில் தொழிலாளர்களின் பணிக்காலம் முறைப்படுத்தப்படவேண்டும் என்கிற முடிவை வந்தடைந்தான். மறுநாள் முதல் பதினைந்து நாட்களுக்கு அவளின் கணவன் இரவுப்பணி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டான். சில சந்தர்ப்பங்களில் அவள் மனவெளியில் எங்கோ கிடந்த கல்லைப்புரட்டியத்தில் அவள் கணவனின் நெருங்கிய நண்பனாகிய நான் அந்த பதினைந்து இரவுகளில் அவளை இருபத்தியேழு முறை புணர்ந்தேன். காத்திரமான அவளது கருப்பு உடல் என்னால் குழைவாக்கப்பட்டதாக ஒரு சில இரவுகளிலேயே நம்பத்தொடங்கியிருந்தேன். அவள் உடம்பின் ஒவ்வொரு புள்ளியும் என்னால் புரிந்துகொள்ளத்தக்கதாய் இருந்தது. ஆனால் அவளின் மன வெளி எனக்கு சற்றும் விளங்காதவை. அவளின் ஞாபகத்தொகுப்பில் சில வீடுகள் இந்த நகரின் கிழக்கில் இருக்கும் மூன்று வீதிகளின் வரைவு விளக்கமும் திரையரங்குகளின் வழிப்பாதையும் காமதேனு தொலைபேசி நிலையமும் ராஜாராம் தையல்கடையும் கணவனின் தோல் வாசனையும் அம்மாவின் கூந்தலும் அப்பாவினால் ஏற்பட்ட காயத்தழும்பும் குழப்பமான பல்வேறு வகையான தொடர் எண்களும் அவள் பாட்டி வைத்து கொடுக்கும் மாங்காய் பச்சடி இனிப்பும் இன்னும் என்னால் விளங்கமுடியாத விஷயங்களாலும் நிரம்பிக்கிடந்தன. மற்ற எல்லாப்பெண்களைப்போலவே அவளும் மற்ற எல்லா வேலைகளையும் செய்தாள். நகரில் அவளுக்கென்று சொல்லப்பட்ட வீட்டில் அவள் தனதான குடும்பத்தை நிர்வகித்தாள். ஒவ்வொரு இரவும் நான் கொண்டு சென்ற அரைக்கிலோ இனிப்பு பதார்த்தத்தை சில நிமிடங்களில் தின்று தீர்த்துவிடுவாள். பதினைந்தாவது இரவில் இனிப்பை தின்றவாறு சொன்னாள்: மொத நாளே சொல்லலாம்னு நெனச்சேன்.. நீ எப்பிடிப்பட்ட வாத்தியார்னு எனக்கு தெரியாது.. ஆனா நீ சரியான ஆம்பள.. உடனே நான் கேட்டேன், அப்படி எத்தன ஆம்பளைகள உனக்கு தெரியும்..' பின்எப்போதும் அவள் என்னை அனுமதிக்கவேயில்லை. அவளின் கணவன் எப்போதும் போல என் நண்பனாகவே இருந்தான்.

****************

தொடரும்..

***************

1 கருத்து:

  1. ஆதிரன் அருமையான தொடக்கம்.நாவல் சிறப்பாக வர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு