19.2.10

சுயம்

நான் யார். தெரியவில்லை என்று ஒதுங்கி போகாமல் ஏதாவது சொல்லவேண்டும். இது எனக்கு சுயவிருப்பமாக (பர்சனல் அர்ஜ்) உள்ளது. இது ஆன்மீகத்தேடல்தொடர்பான கேள்வி இல்லை. இந்த சமூகச்சூழலில் என் மனம் என்னவிதமாக உருவாக்கி இருக்கிறது என்பது பற்றிய ஒரு சுய விமர்சனம். என் மனநிலை (ஸ்டேட் ஆப் மைன்ட்) என்பதை நான் எவ்வாறு அமைத்துக்கொண்டுள்ளேன் என்கிறது பற்றிய எனது எளிய வாக்குமூலம். இது யாருக்காக என்பதை இறுதியில் சொல்கிறேன்.

நல்லது - கெட்டது :

என்று எதுவும் இல்லை. மனிதர்களின் பழக்கங்கள் அவரவர் சூழ்நிலைகளுக்கு ஒப்ப நல்லவை கெட்டவை என தீர்மானிக்கப்படுகின்றன. புகை, மது, பெண் ( பெண்களுக்கு ஆண்) ஆகியவை பொதுமைப்படுத்தப்பட்ட கெட்டபழக்கங்களாக உள்ளன. இதை நான் திண்ணமாக மறுக்கிறேன். பொய் சொல்லுதல், பொறாமைப்படுதல், திருடுதல், பழிசுமத்துதல், பிறன்மனை விழைதல் போன்ற இன்னும் பலவிதமான பழக்கங்கள் மனிதர்களின் வளர்ப்புச்சூழலில் உருவாகும் மனவியல் பக்குவம் என்பது என் எண்ணம்.

ஆண் - பெண் :

என்பவர்கள் உடல் அடிப்படையில் வேறுபட்டவர்கள். மன அடிப்படையில் வேறுபாடு அற்றவர்கள். மீண்டும் இதற்கு வளர்ப்புச்சூழல் காரணியை நம்புகிறேன். இது அடிப்படை. மாறாக, நான் பல சந்தர்ப்பங்களில் ஆணாக இருப்பதற்காக குற்றவுணர்வு அடைந்திருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை ஆண் என்பவன் ஒரு மொன்னையான இயற்கை அமைப்பு. ஒற்றைபுரிதல் ஆணின் மன இயல்பு. பெண் பலவித (மல்டிப்பில்) புரிதன்மை அமைப்பு. ஆண் பனைமரம் என்றால் பெண் வாழைமரம். வேறு வேறு வகை. வேறு வேறு இருப்பு. மூளைச்செயல்பாடுகள் மட்டும் ஒன்று.


கடவுள் :

இல்லை. கடவுள் என்கிற கருத்தாக்கம் மட்டுமே இருக்கிறது. கருத்துக்களை நான் ஒருபோதும் நம்புவதில்லை. சில கூட்டு மனங்களின் நம்பிக்கைகள் சில நேரம் பலிக்கிறபோது நிகழ்தகவின் குழந்தையான 'தற்செயலையே' நான் கடவுளென தீர்மானிக்கிறேன்.


நட்பு:

எனக்கு நட்பில் பால்பேதமில்லை. ஒருவரை பிடித்திருந்தால் அவர் எப்படிப்பட்டவராய் இருந்தாலும் நண்பர்தான். கொலைகாரர், திருடர், புரம்சொல்லுபவர், பாலியல் தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள் என அவர்கள் எவ்வாறு இருந்தாலும் எனக்கு கவலையில்லை. யாரையும் எனக்கு கேவலமாக நினைக்கத்தோன்றாது. பிடிக்கவில்லை என்றால் சுத்தமகாக ஒதுங்கிவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். எனக்கு உலகத்தில் அனைவரையும் பிடிக்கும் அரசியல்வாதிகளைத்தவிர.


அரசியல்: கட்சிகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பையும் இதுவரையில் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. இனிமேலும் இல்லை.


கலாச்சாரம்-பண்பாடு: எதுவும் இல்லை. திராவிடன் என்பதில் லேசான பெருமிதமுண்டு.


மதம்: புத்தம் தேவையாக இருக்கிறது. சமணம் விருப்பமாக இருக்கிறது. இசையும் நடனமுமாய் இருந்தால் மகிழ்ச்சி.


மரணம்: என்பது முற்றுப்புள்ளி. எளிய, உறுதியான மருத்துவச்செயலிழப்பு (டெத் இஸ் கிளினிக்கல்). ஆன்மாவையும் மறுபிறப்பையும் திண்ணமாக மறுக்கிறேன்.


அறம்: சுதந்திரம். என் அறம் சுதந்திரம். நான் ஏற்படுத்திக்கொள்ளும் ஒவ்வொரு கருத்தும் என்னால் சுதந்திரம் என்கிற சிக்கிமுக்கியில் உரசிப்பார்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டவை.


இந்த சுருக்கமான மற்றும் முட்டாள்தனமான வாக்குமூலம் எதற்கு: எனது மன - சிந்தனைப்போக்கு மேற்கண்டவைகளின் அடிப்படையில்தான் இயங்குகிறது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வதன் மூலம் எனது இரண்டு மகன்களுக்கும் (அவர்களைப்போலவே ஆன ஆண் சிறுவர்களுக்கும் ) தெளிவுபடுத்தவே. எதிர்வரும் கடுமையான, காழ்ப்புணர்வும், பொறுப்பற்ற தனிமனித மற்றும் சமுதாயச்சூழலும் நிறைந்த காலத்தில் ஆண்களென அவர்கள் நுழைகிறார்கள். அவர்களுக்கு நான், ஆணாகிய நான் எவற்றை சொல்லி அனுப்புவேன் ? எதையும் சொல்ல வேண்டுமாவென்றும தெரியவில்லை. எல்லாக்குழந்தைகளைப்போலவே அவர்கள் ஊடக கற்பிதங்களையும், திரைப்பட நாயகர்களின் பிரதிமைகளையும் , மோசமான பாடத்திட்டங்களின் மத்தியிலும் வளர்கிறார்கள். சகோதர்களுக்குள்ளே குரோதம் பேணுகிறார்கள். பயமாய் இருக்கிறது. என் பொறுப்புணர்வின் மேல் கடும் கேள்வி எழுகிறது. வெறும் பொருளாதரத்தை சேமித்து வைத்தால் சரியாகிவிடுமா?


உணவுக்காவும் இருப்பிடத்திற்காவும் பாதுகாப்பிற்காவும் நிறம் மாறும் ஒரு எளிய பச்சோந்தி போல வாழும் எனக்கு நிறைய எழுதத்தோன்றுகிறது. மனஅழுத்தம். பிறகு எழுதுகிறேன்.
*********************

4 கருத்துகள்:

  1. """இந்த சுருக்கமான மற்றும் முட்டாள்தனமான வாக்குமூலம் எதற்கு:"""


    இந்த வரிகள் எதற்கு? நம் சிந்தனைப்போக்கில் நாம் தெளிவாய் இருந்தால் அது முட்டாள் தனமே இல்லை .அது ஏன் போக்கு என்றால் போகும் போக்கில் மாறிக்கொள்ளும் .மாறுதல் இயற்கை தானே .நாம் என்ன சொல்லித்தருவது குழந்தைகளுக்கு?அவர்களே கற்றுக்கொள்வார்கள் .இது கால மாற்றம் .பிரியம் என்ற ஒன்றை மட்டும் அவர்களை உணரச் செய்தால் போதும் இல்லையா?அந்த பிரியத்திலும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்....அவர்கள் எப்படி பட்டவர்களாய் இருந்தாலும் ஏற்றுகொள்ள பெற்றோர் உள்ளார்கள் என்ற நினைவு அவர்கள் மனதில் பதிந்தால் போதாதா ?
    உங்கள் முட்டாள் தனமான என்ற வார்த்தையை நான் ஒப்புகொள்ள மாட்டேன் .

    பதிலளிநீக்கு
  2. நாம் நாமாக இருப்பதற்கு வேலிகளை பிறர் வழங்குகின்றனர். இத்தனை வரையறைகளை எப்படி நிகழ்காலத்தில் பொருத்திப் பார்த்து வாழ்வது மகி...சுதந்திரம் மற்றும் பிற...எல்லாமே மற்றவர்களின் பொருட்டு அமையும்போது சுயத்தை வைத்து என்ன செய்ய முடியும் சுயம் என்பதும் தன்னளவில் சார்புதானே..எல்லாவற்றையும் கேள்விகளாக்கும் மனம் மட்டுமே நமக்கு வாய்த்திருக்கிறதே தவிர அனுபவிக்க அல்ல, அந்த அனுபவமும் பிறர் வழங்கியதே...குழந்தைகளைப் பற்றி கவலைப் பட்டிருக்கிறீர்கள்..ஒரு பொறுப்புள்ள தந்தையாய் இருப்பதை விட அவர்களுக்கு நீங்கள் ஊதாரித்தனமான நண்பனாய் இருக்கலாம் என்பதே என் எண்ணம், பொறுப்பு எப்பொழுதும் சர்வாதிகாரத்திலேயே நிலைகொள்கிறது, ஊதாரித்தனம்தான் இப்பொழுது நிதானமாய் உள்ளது, மிக எளிதாய் வாழ்ந்துவிடலாம், வழிகாட்ட தத்துவங்களும் மனிதர்களும் பிறந்துகொண்டே இருக்கிறார்கள்..இருக்கின்றன..நம்மை பிறர் வசம் ஒப்படைக்க தயங்குவது நாமேதான்..சார்பு எப்பொழுதும் சார்பே.

    ................என் அன்பு
    மகி.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு