நீண்ட நாட்களுக்கு பின்சில பருத்திச்செடிகளைப்
பார்த்தேன். வரைமுறையற்ற
காடைமுட்டை அளவில் வெடிக்க
தொடங்கியிருந்தன வெயிலின் வாசனையிலிருந்த
பருத்திப்பூக்கள்.
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு
கடலைப் பார்த்தேன். பொங்கும் அலையடங்கி
பருத்தி வண்ண நுரைபெருக்கியது கடல். கை
நிறைய அள்ளி முகர்ந்தேன் தேனடை வாசனை.
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு
சூர்ய அஸ்தமனத்தை பார்த்தேன். ஒழுங்கான
வட்டத்தில் நின்று கடலையும் பருத்தியையும்'
சிவப்பாக்கிகொண்டிருந்த குருதிக்குழம்பு
கைகளில் கசிய
கடல் நீரில் கழுவினேன்
பருத்தியில் துடைத்துக்கொண்டேன் கைகளை.
நீண்ட நாட்களுக்கு பின் நான் நடந்த
தரையில் சிறிது காந்தமணலைப்பார்தேன். காந்தமானேன்.
காகிதத்தில் பிடித்த மணலை பிரித்தேன்
வீடாகியிருந்தது மனம் போல .
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு மரணம்
பார்த்தேன். காந்த வீட்டிலிருந்து வெளியேறி
கடலில் காலைக்கழுவி
ஒரு பருத்திப்பூவை அதன் மேல் வைத்து
அமைதியாய் நின்றிருந்தேன்
நீண்ட நாட்களுக்கு பின்.
*************
அட்டகாசம் .வேறென்ன சொல்லுவது..நிஜத்தை காணும் நேரம் நினைவலைகளிலிருந்து மீள வேண்டியதாய் உள்ளது
பதிலளிநீக்குபருத்தி சிரிக்க வெடித்துக் கிளம்புது நினைவுகள். நினைவோடையில் நல்ல உயிரோட்டம் காண்கிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஆதிரன்!