22.2.10

வினோதம் 3

நண்பன் வசுபாரதி 'ஊதாரித்தனமான நண்பன்' என்கிற வார்த்தையை பிரயோகித்திருக்கிறான். சுவாரஷ்யமான கூற்று. அதை பற்றி நான் கொஞ்சம் எழுதுகிறேன். அதற்கு முன்னாள், பத்மாவின் பின்னூட்டத்தில் முட்டாள்தனம் என்று யோசிக்கத்தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார். இதைப்பற்றியும் நான் சொல்லவேண்டி இருக்கிறது. என்னவென்றால், முட்டாள் தனம் என்று நான் சொல்வது அறிவாளித்தனத்துக்கு எதிர்பதமாக. அறிவு எவ்வாறு ஒரு தன்மையோ அதுபோலவே முட்டாள் ஒரு தன்மை. சரியாக நான் சொல்ல வந்தது வெகுளித்தனம் அல்லது அப்பாவித்தனம். இது இரண்டும் சேர்ந்ததுதான் முட்டாள்தனம். இங்கு என்னைப்பொருத்தவரையில் அறிவாளிகளை விட முட்டாள்களே சிறந்தவர்களாகவும் மேன்மை மற்றும் மென்மையான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருக்கிறார்கள். வாழ்வதற்கு தேவையான அடிப்படை அறிவை கொண்டவர் எவரும் அறிவாளிதான். அப்படியானால் இங்கு முட்டாள்கள் யாரும் இல்லை, சமயோசிதமாக பணத்தை எவ்வழியிலும் சேர்க்கத தெரிந்தவர்களைத்தான் இங்கு நாம் அறிவாளிகள் என்கிறோம். முட்டாள்கள் பிழைக்கத்தெரியாதவர்கள். பெரும்பாலும் 'பாவம் அவன்' என்கிற விகுதியோடுதான் அவர்கள் அடையாளப்படுத்தப படுகிறார்கள். இந்த வகையில்தான் என்னை அல்லது என் செயல் பாடுகளை நான் முட்டாள்தனம் என்று விளித்துக் கொள்கிறேன். இது கண்டிப்பாக அவையடக்கம் அல்ல.
இரண்டாவதாய் வசுபாரதியின் ஊதாரித்தனம் என்கிற பதம். ஊதாரித்தனம் என்பது பொதுவாய் கண்டமாதிரி செலவுசெய்தல், பணத்தை சேமிக்காதிருத்தல் போன்ற பொருளாதார பிரச்சனைகளின் அடிப்படையிலான சொல். வசு இதனடிப்படையில் சொல்லியிருந்தால் அது எனக்கு உடன்பாடு கிடையாது. எனக்கும் ஊதாரித்தனம் பிடிக்கும். அனால் அதற்காக ஒரு மனிதன் அடுத்தவரை சார்ந்திருக்கக்கூடாது என்பதுதான் சரி. அதற்காக ஒரு சிறு அளவிலான திட்டமிடல் வாழ்க்கையில் மிகத்தேவையானது. திட்டமிடல் என்ற சொல்லே கொஞ்சம் பொறுப்புணர்வு சார்ந்ததுதான். அவ்வகையான பொறுப்புணர்வையே நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டேன். எனக்கு தெரிந்து அதிகப்படியான குடும்பங்களில் குழந்தைகள் வளர்த்த பின்னும் பெற்றோரை சார்ந்துதான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது பெற்றோர்கள் பெற்றதனாலேயே தரவும் வேண்டும் என்கிற எண்ணத்தில் வளர்கிறார்கள். குழந்தைகளை நாம் குற்றம் சொல்ல முடியாது. நமது வளர்ப்பு முறையே அவ்வாறாகத்தான் உள்ளது.
என்னைப்பொறுத்தவரை, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கைகளை வளர்க்க உதவ வேண்டும். நம்பிக்கைஎன்றால், அவர்களது வாழ்நாளில் எந்ததினத்திலும் அவர்கள் தனித்து கைவிடப்பட்ட நிலையில் - கையறு நிலையில் - தள்ளப்பட்டாலும் மீண்டும் வாழ்க்கையை முதலிலிருந்து உற்சாகமாக தொடங்கும் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும், அந்த நாள் அவர்களது அறுபதாவது வயதில் ஏற்பட்டாலும் சரி. எளிமையாக சொல்லவேண்டுமானால், ஒருவர் நடுத்தெருவுக்கு (!) வந்தாலும் வாழ்கையை சுவாரஷ்யமாக எதிர்கொள்ளும் திராணியை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அளிக்கவேண்டும். அதைத்தான் பெற்றோர்களுக்கான பொறுப்புணர்வு என்று நான் சொல்லுகிறேன்.
இங்கு நிலைமை அப்படி இல்லை. எந்த பள்ளியின் பாடத்திட்டமும் நம்பிக்கையை முன்னிறுத்துவது இல்லை. குடும்ப நபர்களும் அவ்வாறே. தமிழ்ச்செல்வன் சொன்னது போல இந்த இந்திய தேசமே 'பெயிலாய்ப் போனவர்களின்' தேசம் என்பது தெரியாமல் நாம் பாடப்புத்தகப் பொதிகளை குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கிறோம். நமது தேசத்தின் மொத்த வளர்ச்சியில் பள்ளித்தேர்வுகளில் தோல்வியுற்றவர்களின் பங்கு அறுபது சதத்திற்கு குறையாது என்பது கண்கூடு.
இதனடிப்படையில்தான் நான் ஆண் மற்றும் பெண் மனக்கூறுகளால் ஆன குடும்ப அமைப்பில் ஆண்களைப் பற்றியும் பெண்களைப்பற்றியும் நான் புரிந்து வைத்திருப்பவற்றை பற்றி சொல்ல முயற்சிக்கிறேன்.
...................................... தொடரும்.
********************

2 கருத்துகள்: