12.2.10

வினோதம் 2

"பாதுகாப்புணர்வு இல்லாத ஆண் பெண்ணை முழுவதுமாய் நம்பிவிடுகிறான். அதே போல, நம்பிக்கையுடைய பெண் ஆணிடம் பாதுகாப்புணர்வை அடைந்து விடுகிறாள்". - என்று சொல்லியிருந்தேன். இதில் பாதுகாப்பு உணர்வை இழந்த ஆண் என்பதை நான் எப்படி வரையறுக்கிறேன் என்றால், பொருளாதாரம் மற்றும் காமம் இவை இரண்டுமோ அல்லது இவற்றில் எதோ ஒன்றோ ஆணுக்கு தொடர்ந்து கிடைக்காவிட்டாலோ அல்லது கிடைத்துக்கொண்டிருக்கும் சூழல் மாறுகிற நேரம் வரும்போதோ ஆண் பாதுகாப்பு உணர்வை இழக்கிறான். காமம் கிடைக்க எதிர்பால் தேவை, ஆனால் எனக்குத்தெரிந்து ஆணுக்கு பொருளாதார சிக்கல் வரும்போது பெண்ணைத்தான் நம்புகிறான். அதாவது அவனது அடிமனம் அப்படித்தான் இருக்கிறது. ஒரு விட்டேத்தியான கலைஞனிலிருந்து பெரிய தொழிலதிபர்கள் வரை இப்படித்தான் போல.
இவ்வகையான பாதுகாப்பு உணர்வை இழந்த ஆண் ஒரு பெண்ணை முழுவதுமாக நம்புவது அவனிடம் இயல்பாகவே எழுகிறது. அதற்காக சமூக அடிப்படைவிதிகளைக்கூட அவன் பொருட்படுத்துவது இல்லை. ஒரு பெண்ணின் நம்பிக்கையை பெற மண்ணை கூட உண்ணத்தயாராகிறான். தனது அனைத்து தந்திரங்களையும் ஒரு கைதேர்ந்த வேடனைப்போல உபயோகிக்கிறான். இழந்த பாதுகாப்பு உணர்வை மீண்டும் பெறுவதற்காக அதே பெண்ணை கொல்லகூட வேண்டியிருக்கிறது சில நேரங்களில். இதனால் ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்து தப்பவே இப்போதைய நம் சமூக குடும்ப அமைப்புகளில் கவனமாக தன்னை இருத்திக்கொள்கிறான்.
அதே நேரம் தனக்குத் தேவையான எதை கொள்ளவும் அவன் குடும்ப அமைப்பிலிருந்து மிக சுலபமாக வெளியேறுகிறான். அவனால் முழுவதும் குடும்பம் தவிர்த்து இயங்க தேவையான அனைத்து இயங்குதளங்களையும் ஆணாதிக்க சமுதாயம் அவனுக்கு அளித்திருக்கிறது. ஒரு புள்ளி கூட மாறாமல் அவனால் தன்னுடைய குடும்ப அமைப்புக்குள் நுழையமுடியும், எந்த கணத்திலும்! (பெருங்காதல், அன்புக்காக எதையும் செய்வேன், நீ இல்லாமல் ஒரு கணம் உயிர் வாழ முடியாது .. போன்ற வசனகர்த்தாக்கள் அறியாமையில் உழலும் பேதைகள் என்பதே என் தாழ்மையான கருத்து, மேலும் இதே போல மத உணர்வுள்ளவர்களும் அவ்வாறானவர்களே).
ஆக, என்னைப்பொருத்தவரையில் ஒரு ஆண் பாதுகாப்பு உணர்வை மீண்டும் பெற ஒரு பெண்ணை நம்பி விடுகிறான். வேறு வழியில்லாமல். காமம் மற்றும் பொருளாதாரம் ஆகிய காரணங்கள் அற்று வேறுவகையான மனோவியல் காரணங்களை நான் இதில் இணைத்துக்கொள்ளவில்லை. சாதாரண பொது வாழ்வில் நடைமுறைகள் என்கிற முட்டாள்தனத்தால் விளையும் விளைவுகளையே நான் பொருட்படுத்தியுள்ளேன்.
இனி பெண்ணின் நம்பிக்கை பற்றிய என் பார்வையை அடுத்த பதிவில் சொல்ல முயல்கிறேன்.

******************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக