10.3.10

சொல்லுவதெல்லாம் பொய்

***************

நாட்குறிப்பில் மடித்து வைக்கப்பட்டிருந்த காகிதத்தில் சிதறலாய் கிடந்த எழுத்துக்கள். இவ்வரிகளில் சன்னாசியின் கையெழுத்து மாதிரி இல்லாத சில குறிப்புகளை ஜாதகக்காரர் எழுதியிருக்கலாம் அல்லது அங்கயர்கன்னியாக கூட இருக்கலாம்.

**********************

......... ஒரு மடையனுக்கு.... இல்லை ... ஒரு மடையனின் எழுத்துக்கள் யாருக்கும் புரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உங்களுக்கு தெரியாத ஒன்றை அவன் எப்பொழுதும் உளறிய வண்ணம் உள்ளான். கேள் நண்பனே .. பொருளும் காமமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். உச்ச இன்பமும் பணமும் அவற்றின் மீச்சிறு அலகுகள். அதிகாரம் பாலுணர்வையும் பணத்தையும் கண்ணாடித்துண்டுகளாக அரைத்து ஆசையென்னும் சாட்டையில் பூசியிருக்கிறது. வாழ்வெனும் ஒளி அந்த சாட்டையின் கண்ணாடிக்கலவையில் ஒளிர்கிறது. தொடர்ந்து அது மனித பூச்சிகளை தன்பால் இழுக்கிறது. மனிதனின் பிரக்ஞையால் உருவாகும் அதிகாரம் சூழலலால் நெய்யப்பட்டிருக்கிறது. இங்கு நிலவும் சூழல் தற்செயல் அல்ல. அதன் ஒவ்வொரு கண்ணியும் துல்லிய முன்வரைவுகளால் ஆனது. நிகழ்தகவின் விளைவுகளையும் தற்செயல் தன்மையையும் ஆளுமை செய்யும் அளவுக்கு நாம் பயங்கரவாதிகள் ஆகிவிட்டிருக்கிறோம். நமது விஞ்ஞானகூடங்களில் இயற்கை செயற்கையாக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. .............................................


அதுசரி.. எதற்காக இப்படி எழுதுகிறேன்?
************

நிராதரவற்ற இவ்வேளையில் இருப்பு அர்த்தமற்றது என கொள்ளவேண்டாம் சன்னா. உற்றுநோக்கப்பட்ட ஒரு காட்சியாவது நேசம் மிக்கதாக இருக்கும். ஒருவேளை தனனைத்தானே முழுவதுமாக அழித்துவிடவும் கூடும். நிராதரவு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும். பின் எப்போதும் உன் சுயம் குற்றவுணர்வு கொள்ளத்தொடங்கலாம். எனவே, சன்னா.. தேவையற்ற கணம் என ஒன்று கூட இல்லை. எதிர்மாறாக ஒவ்வொரு கணமும் தேவையற்றதாக இருக்கலாம். சாத்தியப்பாடுகள் பற்றி நாம் பேசத்தொடங்கினால், நாழிகை கழிவதே மீதம். மூச்சிழுத்து வெளியேற்றும் ஒவ்வொரு முறையும் நீ வாழ்கிறாய். உன் உடல் முழுதும் குருதி இளஞ்சூட்டுடன் பாய்ந்தலைகிறது. நீ பசியுணர்வாய். பசியடக்கும் ஒவ்வொரு கவளமும் உன் மனக்கட்டுப்பாட்டுக்கு எதிராக செயல்படும். உன்காமம் பசித்த வேங்கை போல குகை விட்டு வெளியேறும். இரை வேண்டி காடதிர உறுமும். அழியும் வரை காத்திருக்கப்போகிறாயா. மொத்த விசும்பும் ஒவ்வொரு மரணத்தோடும் மடிகிறது. வேறொரு இருப்புக்கு வேறு விசும்பு இது. மீண்டும் கேள்.. ஒவ்வொரு மரணத்திலும் முற்றும் முழுவதுமாக அழிந்துவிடும் இயக்கமிது. உனக்கிருப்பது இறந்தவனுக்கு இல்லை. மரணத்திற்கு நீ இருக்கிறாய். உனக்கு மரணம் இருக்கிறது. இறந்தவனுக்கிருப்பது உனக்கில்லை. பின் என் உன்னதம் மற்றும் உன்னதமின்மையைப் பற்றி போகம் கொள்கிறாய். கவனம். நான் யாரென்று உனக்குத்தெரியும். நீண்ட காலவெளியின் அனுபவம் எனக்கு உண்டு. நம்பிக்கைன்மையின் பெருந்திரள் நான். புணர்ச்சி யோகம். மெல்லிய தோல் கொண்டு என் ரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. என் இருப்பு குற்றம். அது உன்னை கூசச்செய்யும். பேராபத்தின் குழந்தை நான். வேங்கையென உருவகிக்கும் இச்சை நான். என்னைக் கொல்ல உனது கற்கால ஆயுதம் போதாது. என்னைக்கொல்ல தந்திரமான ஆயுதம் தேடாதே. எளிமையாய் எதிர்நில். ஒரு வேளை அது உனக்குள்ளே இருக்கலாம். உபயோகிக்கத் தெரிந்தவனின் ஆயுதம் அடிமையென இயங்கும்.

*********************

மேகங்களின் அமைப்பை வரைமுறைப் படுத்தும் சாத்தியமின்மை தெரிந்தே வானம் பற்றிய குறிப்புகளை தொடங்குகிறேன். நிலக்காட்சியை எவ்விதத்திலும் பிரதிபலிக்காத வானம் ஒரு குட்டைநீரில் அடங்கிவிடும் என்பது வெறும் காட்சி தர்மம். புல்நுனியில் தொங்கும் ஒரு சொட்டு பனித்துளியில் நுழைந்துவிடும் மலையைப்பற்றி வானம் எப்பொழுதும் கவலை அடைவதில்லை. தன்னளவில் பெரிய வெளியை உருவாக்கி அதன் விளிம்புகளில் மேகங்களை அனுமதிக்கும் வானம் மேகத்தாலானது என சொல்வதற்கில்லை. பின் எப்படி மேகங்களின் அமைப்பை வானம் ஆளுமை கொள்ளும். இன்றைய மேகம் ஒரு ஐரோப்பிய பெண்ணாய் மருவி மிதிவண்டியை ஓட்டிக்கொண்டிருந்தது. அவள் கருநீல நிறத்தாலான பிரில் வைத்த அகன்ற பாவாடையும் பொழிவான வெண் சட்டையும் அணிந்திருந்தாள். தனது மிதிவண்டியில் முன்கூடையில் சில பூக்களை வைத்திருந்தாள். கணக்கரைவில் அவள் மீண்டும் வகையறியா மேகமானாள். பின்பு அவளைக் காணவில்லை. நான் மட்டுமே அங்கிருந்தேன். என் விளிம்பில் இனி அவள் வர வாய்ப்பில்லை. துக்கம் உள்ளது.

***************

கண்களை மூடி தன்னைத்தானே பலமுறை சுற்றினால் திசை மறக்கும் மீண்டும் கண் திறக்கும் போது. ஆனாலும் சொற்ப கணங்களில் மூளைஅடுக்குகள் மீட்டு விடுகிறது திசையறிவை. அவ்வளவு சுலபமாக அமைந்துவிட்டது இருப்பிடங்களின் தகவமைப்பு. பிரிதொருநாளின் கனவில் பெரும்பறவையொன்று என்னை தூக்கிப்பறந்தது. பதினோரு மலைகள், நான்கு பள்ளத்தாக்குகள், ஒரு பாலைவனம் மற்றும் முப்பத்துஏழு ஆறுகள் கடந்து ஒரு சிறிய கடலுக்குள் எறிந்துவிட்டுச் சென்றது என்னை. மூவுலகமும் அறிந்தது எனது நீச்சல் திறன். மேற்குலகில் வண்ணத்திப்பூச்சி வகையும் கிழக்கில் மல்லாந்த வகையும் மத்தியில் எனது மிதத்தல் வகையும் பெருமை. ஆனால் இது கடல். சமுத்திரங்கள் அனைத்தும் வரையறுக்கப்பட்டது. பாதைகள் நிரம்பியது. கடல் அப்படியல்ல. பெரும்பாலைவனம் ஒன்றின் தண்ணீர் திரிபு. திசைபற்றிய அறிவுமட்டுமே ஒரு நீச்சல்காரனின் பாதுகாப்பு. உணவு தேடும் சில சுறாக்களுக்கு என்னைப்பற்றிய அக்கறையில்லை என்பது எனக்கு பயத்தை அளித்தது. மேலும் திசையறிய ஒற்றைச் சூரியன் போதுமான பகல் அப்போது இல்லை. வெளுத்துக்கிடந்த அலையும் மீன்கள் சூரியன்படாத தகவலைச் சொல்லித்திரிந்தன. செய்வதறியாது மல்லாந்து மிதக்கத்தொடங்கினேன். நேர்பார்வையில் ஒரு கோடியே நாற்பத்து ஏழு லச்சத்து தொண்ணூற்று நான்காயிரத்து எண்ணூற்று ஐம்பத்தாறு விண்மீன்கள் தெரிந்தது. இவற்றில் எது என் திசை காட்டும். திசை பற்றிய அறிவு பார்வைக்கா புலனுக்கா. ஒரு சுறா என்மீது உமிழ்நீரை துப்பியது. தலைக்கனம் பிடித்த சுறாக்களின் மத்தியில் வாழ்வது இவ்வளவு சுலபமா என்ன. வெறும் உமிழ்நீரை தாங்கும் சக்தி மட்டும் போதுமா. கடல் நீரே அதை கழுவியும் சுத்தம் செய்கிறது. திசையறிய இச்சுறாக்கள் உதவுமா தெரியவில்லை. மீண்டும் விண்மீன்களை பார்த்தேன். அதிசயம். இடம் மாறியிருந்தன அவைகள். முதலில் இருந்ததும் இல்லாமல் இருந்தது. மூன்று லட்சம் விண்மீன்கள் காணாமல் போயிருந்தன. பதிலுக்கு மூன்றேமுக்கால் லட்சம் விண்மீன்கள் வேறு இடத்தில் தோன்றியிருந்தன. விளையாட்டு அற்புதமாய் இருந்தது. நீண்ட களைப்பிற்கு பின் ஒரு நிலைத்த தொடர்ந்து மாறாத ஒற்றை விண்மீனைக் கண்டுபிடித்தேன். திசை பற்றிய முதல் ரேகை.

**************

வண்ணத்துப்பூச்சி நீச்சல் அடித்து வெளியேறினேன்.

**********************

மித்ர..........

****************

ஒரு துயர்கொண்ட முரட்டுப்பாடல் தனதான ஒலிச்சமிக்கைகளை ஒளித்துவைக்க சதா முயல்கிறது. தன்னிடமிருந்து தெரியாமல் வெளியேறும் கூர்ப்பல் ரீங்காரங்களை அது கட்டுப்படுத்த முயன்றும் சதா தோற்கிறது. தனது ஒலிகளின் கூர்முனைகள் கேட்பவர்களின் செவிப்பறையை கிழித்துவிடுமென எல்லோரிடமும் எச்சரிக்கை விடுகிறது. அதன்பொருட்டே அக்கூரிய ஒலிகளில் ஏற்படும் ரணத்தை தானே ஏற்றுக்கொள்வதாக சமாதானம் செய்கிறது. எனக்கு அந்த துயர்கொண்ட பாடல் பார்க்கக் கிடைக்கிறது. அது என்னை நிர்வாணம் ஆக்குகிறது. வெளியெல்லாம் என்னை கூசி அலையச்செயகிறது. அது என் பெருவிருப்பமாய் வேறு இருக்கிறது. தன்னை துயர்கொண்ட பாடலாய் உருவகிக்கும் அது உண்மையில் ஒரு நீண்ட நதி. ஏற்கனவே சமைக்கப்பட்ட பாதையில் நிதானம் தவறாமல் ஓடி கடலைடையும் ஒரு அமைப்பு. ஆனாலும் அது ஒவ்வொரு முறையும் ஒரு எளிய கூலாங்கல்லில் இடறி தனது சமனை இழக்கிறது. இடறி விழும் ஒவ்வொரு முறையும் அது தன்னை துயருற்ற பாடலாக உருவகிக்கிறது. எப்பொழுதும் போல் நான் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருக்கிறேன். இம்முறை சற்று திகைப்படைந்துள்ளேன்.

*************

9.3.10

பிணக்கில் சென்ற கடவுள்

கடவுளைப்பற்றி எழுதத்தொடங்கினேன். கடலாழத்தின் அழுத்தமும் உப்புச்சுவையும் தொடுவானத்தையும் படைத்தவர் அவர். பறவைகளின் ஒளிச்சிதறல் பரவும் பெருங்காடுகளைப் படைத்தவரும் கூட. பனித்துளி சர்ப்பவிசம் மனிதர்கள் நாக்கு மூங்கிலிசை வசைச்சொல் மற்றும் எல்லாவற்றையும் படைத்தவர் அவரெனக்கொள்ளலாம்.மேலும் அவரைப்பற்றி எதைச்சொன்னாலும் பழையதாய்ப் போய்விடுகிற அவஸ்த்தை. தவிர, பசியின்மை தாகம் புல்வெளி மரணம் எதையும் விட்டுவைக்காத காமம்... எழுதுவதை நிறுத்தி எதை எழுதாமல் விட்டுவிட்டேன் என்றெண்ணியவாறு மீண்டும் வாசிக்க எழுதியதெல்லாம் ஒரு சாதாரண முத்தம் பற்றிய குறிப்புகள் என உணர்தபோது கடவுள் தோன்றி சிரித்து மறைந்தார்.

*********

தன்னைத்தனே முத்தமிட்டுக்கொள்ளும் ஒரு பிரார்த்தனை வடிவத்தை அனுமதித்த கடவுளை இன்று பெய்த மழையின் லேசான மண்வாசனையோடு நிபந்தனை ஏதுமில்லாமல் மன்னித்தேன். பிழைத்துப்போன கடவுள் முத்தவண்ண ஓங்காரத்தை இடியாக்கி எனக்கு பரிசளித்தார்.

********

மாலையொன்றின் முடிவில் எரிச்சலுடன் விடைபெற்றார் என்னிடமிருந்து கடவுள். என்னைப்போலவே அவருக்கும் வருத்தமில்லை. வருத்தமெல்லாம் முத்தமிட்டு விளையாடிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் தவறவிட்ட முத்தத்தை இருவரும் பிடிக்கச்சென்று மீண்டும் தவறவிட்டோம் என்பதாலும் உடைந்த முத்தத்தை அவரால் மட்டுமல்ல என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான்.

*********

தலைதெறிக்க ஓடிவந்த கடவுளின் தொண்டை வறட்சிக்கு நீர் கொடுத்து என்வென்று கேட்டேன். தாகமடங்கி நிதானமான அவர் என்னைப்பார்த்து சிரிக்கத் தொடங்கி நிறுத்தினார். அழத்தொடங்கி நிறுத்தினார். பேசத்தொடங்கி நிறுத்தினார். என்னசெய்வது என்று திகைத்து அதை மறைக்கத் திரும்பி நிறுத்தினார். பின்பு மெதுவாய் என்னிடம் நீ கேட்ட கேள்விக்கு என்னாலான பதிலைத் தேடிவிட்டேன். ஒரே பதில்தான். முத்தம் முத்தத்தால் மட்டுமே ஆனது என்றார். பின்பு சென்றுவிட்டார்.

***********

ஆதி சூட்சுமம் அறிந்த உனக்கு இனி நான் துளியும் தேவையில்லை என்றார் கடவுள். சற்று நேரம் அமைதியாய் இருந்து பின்பு ஆரத்தழுவி மொத்தமாய் என்னிடமிருந்து பிரிவதாய்சொல்லி புறப்பட்டார். எனக்கு வருத்தமில்லை. இன்று காலையில்தான் தெரிந்து கொண்டேன் அனைத்து முத்தங்களின் மறுபக்கங்களிலும் இருக்கும் அவரது இருப்பிடத்தை. எனக்கு தெரிந்துவிட்டதால் ஏற்பட்ட வெட்கவுணர்வால்தான் பிரிகிறார் எனத்தெரிந்து என்னவொரு குழந்தைத்தனம் என வியந்தேன். பின்பு என் நெஞ்சு நெற்றி புஜங்கள் தொட்டு என் வலது ஆட்காட்டி விரலை கேள்விக்குறி போல வளைத்து அதன்மேலோர் முத்தமிட்டுக் கொண்டேன்.

**************************************

8.3.10

பகிர்வு

மகளிர் தினம்!

எனக்கு இது ஒரு தனிப்பட்ட சிறப்பு தினம் கூட. எனது துணைவியாரின் பிறந்த தினம். அவர்களுக்கு ஒரு வாழ்த்து.

அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் ! பெண்களைக் கொண்டாடும் ஆண்களுக்கும் வாழ்த்துக்கள்!!

********

இன்றைய தினத்தையொட்டி நான் படிக்க நேரிட்ட மூன்று தினசரி செய்திகள் பற்றிய சிறு பகிர்வு. ஆந்திராவில் என்டியார் ஜூனியருக்கு ஐநூறு கோடி ரூபாய் வரதட்ச்சனை கொடுத்து கூடவே ஒரு பெண்ணையும் கொடுக்கிறார்கள். பாராளுமன்றத்தில் முப்பத்துமூனு சத இடதுக்கீடு மசோதா நிறைவேறினால் அத்தனை பெண்களுக்கு எங்கு போவது என்று எதோ ஒரு பத்திரிகை கவலைப்பட்டிருக்கிறது. சைனாவில் மனைவிகளுக்கு வீட்டு வேலைக்கு கணவன் சம்பளம் கொடுக்கவேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது. கேயாஸ் தியரியில் ஒன்றுக்கொன்று தொடர்பை ஏற்படுத்திப்பார்க்க அவசியமில்லாமல் தெளிவாக ஒற்றை காரணியாக பெண் இருக்கிறாள். அனைவர்க்கும் அனைத்திலும்! இந்த செய்திகளில் ஒன்று மாநிலம், அடுத்தது தேசம். மூன்றாவது சர்வதேசம். வாழ்க இப்பிரபஞ்சம்!

************

மீடியா வைரஸ்களின் கடுமையான தாக்குதல்களை மீண்டும் நித்த்யானந்தா மூலம் வெளிறிப்போய் அனுபவத்த நம் மகாப்பொது மக்கள் மீது ஒரு கண்ணுக்குக்கு தெரியாத மீடியா வைரஸ் பற்றி சொல்லவேண்டும். அது "பூம் டீவீ" என்கிற பெயரில் அனைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் பதிக்கப்பட்டிருக்கிறது.

************

4.3.10

இருளின் நிழல்


நண்ப
அனைத்தையும் அடக்கியதது. சிறுத்து, கூரிய பார்வை. அகன்று அகண்ட கேள்வி. மாறாத ஞாபகம் மற்றும் சமரசமற்ற பழிகொள்ளும் தன்மை. மிகமிக அழுத்தமான பாதத்தடம். எல்லாமுமாய் எதிர் நிற்கிறது யானையாய். கரியபூனைக்குட்டியாய் நிற்கும் என்முன். இருப்பதோ கவிதை என்னும் சிறிய அங்குசம்.
நண்ப
தற்கொலைக்கு அல்லது கொலைக்கு அல்லது ஒரு நீண்ட ரயில் பயணத்திற்கு அல்லது கடலோரத்தில் சிப்பிகள் பொறுக்குவதற்கு அல்லது சாலையில் கடக்கும் ஒரு நத்தையை கவனிப்பதற்கு என்று சொல்லத்தொடங்கும் முன் கவிதையிருக்கிறது பதிலீடாய் என்கிறாய். அவள் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அல்லது கவனித்துக்கொண்டிருக்கக்கூடும். அல்லது நிச்சயம் அது கண்காணிப்பாய்த்தான் இருக்கும். என்றதனால் கவிதைக்கு பதிலீடாக ஒரு புன்னகை ஒரு முகமன் அல்லது ஒரு பணிதல் போன்ற ஏதாவது ஒன்று மிகவும் நல்லது. அல்லது அவள் பாதத்தில் நீண்ட குளிர்ச்சியான முத்தம் அதனினும் நல்லது.
நண்ப
நாம் சேர்த்துண்ணும் இவ்வினிய வேளையில் ஒரு குவளை சாராயத்தின் தேவை பற்றி தெரிந்து கொண்ட அப்பறவையை நான் நேசிக்கிறேன். மண் குழைத்து உருவாக்கிய குவளையில் திரவம் நிரப்பும்சப்தத்தை எழுப்புகிறது அப்பறவை. நாம் பேசிகொள்வதற்கு இதமான இவ்வேளையை இளக்கமாக்கி சங்கீத நுட்பம் சேர்க்கிறது அவ்வொலி. அறைச்சுவர்கள் கரைய நீர்மீது மிதக்கின்றன நமது நாற்காலிகள். கடல்வெளி ஆகிறது நிலம். படகென நகர்கிறது காலம். காலத்தினூடே பறக்கும் அப்பறவையின் பெயரை விளிக்கிறேன். என்னுடன் சேர்ந்து நீயும் அழைக்கிறாய். எதிரொலியில் அப்பறவை அளிக்கும் பதில் நம் குரலாகிறது. அது கேட்டு சிரித்துக்கொள்ளும் நமது விழிகள் நுகரும் வாசனை சிதைவுகளுக்கானது.

நண்ப

எனது வார்த்தைகளுக்கு உன் உடலிலும் உனது வார்த்தைகளுக்கு எனது உடலிலும் படர்கிறது செதில்கள். வார்த்தைகள் தடித்த பொழுதில் நாம் வெள்ளிச்சாம்பல் நிறக்கடலில் அப்பறவையை மறந்து நீந்திக்கொண்டிருக்கிறோம். தனது மொத்த தாகத்திற்காகவும் நமது நிலத்தில் கொட்டப்பட்ட அக்கடலை குடித்த வெண்கழுத்தும் அடர்தாமிர நிறமும் கொண்ட அப்பறவையின் எச்சம் தழும்பாகி பதிகிறது எனது குதத்தில். சுற்றி வளர்ந்த சுவர்கள் நம்மைச் சூழ்ந்து அறையானதும் உன் கழிப்பறை குழாயில் கசிகிறது அளத்தின் நீர். தீர்க்கப்படாத நம் தாகத்தினை தூக்கிப்பரக்கு அப்பறவை பாரம் தாங்காமல் அலறும் பொழுது நான் அதை வெறுக்கத் தொடங்கினேன். எப்போதுன் நீ என்னை வழிமொழிவாய் என நம்பியபடி.

நண்ப

ஆணாகிய என்னிடம் ஆணாகிய நீ முத்தங்கள் கேட்டு நச்சரிக்கிறாய். முரட்டுத்தனமாக மறுத்தலிக்கிறேன். முத்தங்களுக்கு ஏது பால்பேதமென்கிறாய். அருவெறுப்பின் உச்சமென்கிறேன். புன்னகை புரிகிறாய். உடல் கூசுகிறது நினைத்தாலேவென்கிறேன். உன் பூத்த புன்னகை சிரிப்பாகிறது. உன் உறுதி கண்டு பயந்து விலகியோடுகிறேன் சிரிப்பொலி அடைத்த பாதைகள் விலக்கி. கனவில் நான் உனக்கு இட்ட நீண்ட முத்தத்திற்குப்பின் நான் பெண்ணானேன் நீயும் பெண்ணானாய். பெண்ணாகிய நீ பெண்ணான என்னிடம் முத்தங்கள் கேட்டு நச்சரிக்கிறாய். நாணத்துடன் மறுத்தலிக்கிறேன். பால் பேதம் அற்றவை முத்தங்கள். வேப்பமர நிழலில் அமர்ந்து நமதான இவ்வுரையாடலை கேட்டு அவர்கள் சிரித்துக்கொள்கிறார்கள் மற்றவர்களுக்கு தெரியாமல். அவர்கள் முத்தங்களின் வல்லமை அறிந்தவர்கள்.

நண்ப

அவளை எனக்கு பிடித்திருக்கிறது. சலனமற்ற உன் முகம் சலனமற்ற வார்த்தைகளை சலசலவென உதிர்கிறது. குடிநீர் நிரம்பிய பாலித்தீன் பையை சுவற்றில் எரிந்து உடைத்தாய். சுவற்றில் தெறித்த நீரின் கோலத்தில் நெளிந்தது ஒரு அமீபா. அவளுடன் இன்னொரு பெண்ணும் சில ஆண்களும் இருந்தார்கள். நீயும் நானும் கூட. கூரையற்ற அறையின் தரையில் அமர்ந்து மது அருந்தினோம். வாழ்நாளின் அவமானகரமான அன்று நான் செய்தேன். சுவற்றில் பட்டு தெறித்த மது போத்தலின் ஆடிச்சில்லுகள் என் ஞாபகக்கிழிசலின் ஓரங்களைத் தைத்தன. அமர்ந்திருந்தவர்க்கெல்லாம் ஆளுக்கொரு ரணம். ஆனந்தத்திலும் துக்கத்திலும் சில துளிகளை இழந்தது நமது விழிகள். விடியலில் நாம் அவர்களை விட்டு வெளியேறினோம் நீ அருகிலும் நான் வெகுதொலைவிலும். இன்றும் அவளை எனக்கு பிடித்திருக்கிறது. அவளுக்கு உன்னைத்தான் பிடித்திருக்கிறது என தெரிந்த பிறகும்.

நண்ப

அலுப்பு தட்டும் ஒற்றைக் கேலிக் கூத்து என் மரணம் திரும்பத் திரும்ப நிகழ்கிறது மைதூனத்தில். சொல் மொழி துளிவானம் நீர்மை எல்லாம் புதைய நிகழ்கிறது காலம். உன் பெயர் அவள். என் பெயர் அவன். அவன் பெயர் நீ. அவள் பெயர் நான். எழுத்தெல்லாம் ஸ்கலிதம் என்கிறான் கணிதன். மீதம் கிடைத்தது பூச்சியம். சமன்பாடு நிறைவடைந்ததில் பூப்படையும் காமம். கடலின் குறுக்கே பறக்கும் காகம் காவென கத்துவது யோனிதர்மம்.

நண்ப

மௌனம் வேயப்பட்ட அறையில் ஆழ்கடல் அடர்வென மனங்கொண்டு அமர்ந்திருக்கிறேன். உன் பால்வெண்மை வார்த்தைகளில் என்னை வெளியழைக்கிறாய். ஆப்பிளின் நறுமணத்தை சொல்லாக்குகிறாய். பயங்களின் இழையாய் படியும் மனத்தின் மீது செங்கல் செங்கலாய் தைரியம் கட்டுகிறதது. என் சொற்கள் வெளியேற வேண்டிய தருணத்தை நோக்கி எழுகிறது அதன் சுவர். ரோஜாவின் வண்ணத்தையொத்த உன் வார்த்தைகள் செய்கிறது எனதான நம்பிக்கைகளை மீட்க தேவையான அனைத்து மாயங்களையும். வகையறியாத அருட்பாடலைப் போல அவை உன் உதடுகளில் உச்சரிப்பு கொண்டிருக்கிறது. ஊசியிலைத் தாவரத்தில் வடியும் மழைத்துளியாய் உதிர்ந்து சிதறுகிறது எனக்கான பயங்கள். கிடையில் கதறும் ஆடுகளின் ஒர்மையை நான் அடைந்த கணத்தில் இடதுகண்ணைச் சிமிட்டி செல்கிறாய் எனது முன்தலையில் முளைத்த ஒற்றைக்கொம்பின் கூரியமுனை பார்த்து.

நண்ப

என்னிடமிருந்து விலகிச்செல்லும் என்னிடமிருந்தே தொடங்குகிற உரையாடலின் முடிவில் குரோதம் கொள்கிறாய் என்னிடமே. தன் கூட்டுக்கு செருக காக்கைத்தூக்கிச் செல்லும் வடிவமில்லாத சிறுகுச்சி போல என்னை விட்டுவிட்டு என்னை தூக்கிச்செல்கிறாய் உன் கூட்டுக்கு நான் குச்சியாய் இருக்க ஏலாதென தெரிந்தே. உன் சுவாசத்தின் ஒழுங்குமுறைகள் என் சுவாசத்திற்கு எதிரானவைஎன தெரிந்தே நானும் வுன் கூட்டுக்குச்சியாகிறேன். ஆயினும் ஒன்று கேட்க அனுமதி. என்னை நீ எடுத்துச்சென்ற பின் நீ விட்டுச்சென்ற நான் தெருமரமாய் நிற்கிறேன். அதில் உன் கூடை கட்டேன்... நகரமுடியாமல் இருக்கும் என் மீது நீ அமர்வது எனக்கு விருப்பமாய் இருக்கிறது. என்மீது என்னாலான குச்சி கொண்டு நீ கட்டும் கூட்டில் நீ வசிக்க நேர்ந்தால் என்னிடமிருக்கும் சில பழங்களையும் பறவைகள் இரண்டையும் அளித்து மகிழ்வேன்.

நண்ப

நல்லது போய்வா. நான் கேட்டது முடிவுக்கு வந்துவிட்டது. இனி நான் ஒரு நாட்காட்டி மட்டுமே. தினமும் என்னைக் கிழிக்கலாம். கசக்கி குப்பையிலோ மலச் சாக்கடையிலோ போடலாம். வழியும் எச்சிலைத் துடைக்கவோ கைஈரத்தை வழித்தேடுக்கவோ என்னை நீ பயன்படுத்தலாம். அல்லது கிழிக்காமல் விட்டு என்னை கடந்தகாலமாக்கலாம் உன் பழைய ஞாபகங்களின் வழித்துணைக்கு. காலமாவதற்கும் கடந்தகாலமாவதற்கும் என்னைப் பணிய வைத்தவுன் அன்பிற்கு பணிவிடை செய்ய நானுன் தாழ்பணிகிறேன்.

நண்ப

பதிலாக எனக்கு நீ ஒரேயொரு முத்தம் கொடு.

*****************

கள்ளக்காதல்' தொகுப்பிலிருந்து.

*********************