26.4.10
படத்தொகுப்பு
பத்து படங்கள் என்றால் எவ்வளவு முயன்றாலும் முடியவில்லை. எனவே நான் எனது சினிமா காலத்தை மூன்றாக பிரிக்கிறேன்.
எனது மிக அழகான கிராமமான வடபுதுப்பட்டி தேனி மாவட்டம் மேற்குமலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இன்று அதன் மொத்த அடையாளமும் நகரிய நசுக்களால் அழிந்து போனாலும் எனது மூளையில் அதன் பழைய வரைபடங்கள் எனக்கு பொங்குமின்ப நினைவலைகளை உருவாக்குபவை. அந்த ஊரில் எனக்கு திரைப்படம் பார்க்க கிடைத்த அரங்கம் மூன்று. சரஸ்வதி, வீரக்குமார், ஆர்த்தி. முதல் சரஸ்வதியின் முதலாளி யாரென ஞாபகம் இல்லை. மற்ற இரண்டுக்கும் முத்து நாயக்கன் முதலாளி. சரஸ்வதியை இழுத்து மூடிய பின் வீரகுமார் வந்தது. வீரக்குமார் பெயர்மாற்றம் செய்யப்பட்டு ஆர்த்தி ஆனது. ஆக ஏக காலத்தில் எங்கள் ஊரில் ஒரே டூரிங் டாக்கீஸ் தான். இவை அனைத்தும் தொண்ணூறுகளில் முடிவுக்கு வந்தன. இப்போது வடபுதுபடியில் திரையரங்கு இல்லை. பக்கத்து டவுன் தேனியிலோ வடக்கில் பெரியகுளத்திலோ பொய் படம் பார்க்க வேண்டும். போதும் தம்பட்டம். இனி படங்களின் பெயர் தொகுப்புகள்.
புரட்சிதலைவனின் இரண்டு படங்களை சொல்லி தொடங்கலாம். மலைக்கள்ளன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன். பொய்முடி இல்லாத அழகு தல புரட்சித்தல. சிவாஜியின் ராஜா மற்றும் கௌரவம். ஜெமினியின் வாழ்க்கைபடகு, வல்லவனுக்கு வல்லவன் - ஜெமினி வில்லனாக வருவார்! உத்தரவின்றி உள்ளே வாவும் சட்டம் என் கையில் எனும் படமும் நினைவில் இருக்கிறது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமனியும் ஜெகன்மொகினியும் மறக்க ஏலாதவை. மிகவும் ரசித்துப்பார்த்த எம் ஜி ஆர் படம் ஒன்று எவ்வளவு யோசித்தாலும் பெயர் வரவில்லை. அதில் வரும் வில்லன் ஒரு பின் நவ்வீனத்துவ திருடனாய் நடிப்பார். இதில் இறுதியாக வீரக்குமாரின் முதல் நாள் படமான வருவான் வடிவேலன்!
இரண்டாவது கட்டமாக சில படங்கள்: கண்களை பொத்திக்கொண்டே முழுப்படத்தையும் பார்த்தேன்.. இல்லை கேட்டேன் - நூறாவது நாள்! அதில் வரும் உருகுதே இதயமே என்கிற பாடலை நீண்ட நாட்களாய் கேட்கப்பயந்து கொண்டிருந்தேன். மூன்று முடிச்சு - க்யூட் ஸ்ரீதேவி, தாமரைநெஞ்சம்-சரோஜாதேவி, டிக் டிக் டிக், இன்று போய் நாளை வா, இணைந்த கைகள், சிவப்புமல்லி, ஒருதலை ராகம், அவள் அப்படித்தான், முள்ளும் மலரும்.
மூன்றாவது பாகம்: முதல் மரியாதை, காதலுக்கு மரியாதை, தேவர்மகன், பாட்ஷா, வாலி, கேளடி கண்மணி, புலன் விசாரணை, காதல், எங்க சின்ன ராசா
கடைசியாக நான் பாடும் பாடல்.
ஒரு வழியா எழுதிட்டேன். இவை எல்லாம் இப்போ பிடித்த படங்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறமுடியும். ஆனால் இப்படங்களைப் பார்த்த நாட்களில் இவை எனக்கு மிகுந்த மன சிலாக்கியத்தை உண்டு பண்ணியவை.
எல்லாவற்றையும் தாண்டி எனக்கு ஒரு சிறப்பு படம் உண்டு அது எந்த பட்டியலிலும் இணைக்க முடியாதது - ரத்தக் கண்ணீர்.
போதுமா பத்மா!
*****************************
24.4.10
kepela
எலி: ஏன் எங்கள் இருவரையும் ஒரே நேரத்தில் உண்ணவேண்டும்.
பாம்பு: அதானே.
நான்: பசி. வேறென்ன செய்ய.
எலி: எனக்கும் கூடத்தான் பசி. சில தானியமணிகளை தேடத்தான் வெளியே வந்தேன்.
பாம்பு: இஸ் இட்? உனக்கு பசிக்குமா என்ன? நீ நான் உண்ணும் தின்பண்டமாயிற்றே. உன்னை பார்த்துவிட்டுத்தான் பாதி சட்டையைக்கூட கழற்றாமல் கீழிறங்கினேன். அதற்குள் மயிலார் கவ்வி விட்டார்.
எலி முறைத்தது.
எலி: நானும் உயிர் கொண்டு அலைபவள்தான். எனக்கும் பசிக்கும். உன்னை விட அதிகமாக. எதையாவது விழுங்கவில்லை என்றால் கூட நாங்கள் எதையாவது கடித்துக்கொண்டிருப்போம்.
நான்: ஒ.. நீ பெண்.
எலி: பெண் என்றால் இளக்காரமா. பெண்தான் எலிஎன்றாலும்.
பாம்பு: இவள் உடம்புக்கு ஆடையுடுத்தி மறைத்தலையும் ஜந்துக்களை போல பேசுகிறாள். பசிக்காக அனைத்தையும் உண்ணும் கழிசடைகள். I never like'em.. you know.
நான்: நீ எங்கிருந்து வருகிறாய் சாரை. ஆங்கிலம் எல்லாம் தூக்குதே. சரி அது எதுக்கு எனக்கு. எனக்கு பசி.. உன் சட்டையை முழுதாக கழற்றித்தொலை.. உன் கொழுப்பு என்னை கொஞ்சம் சாந்தப்படுத்தும்.
எலி: என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.
நான்: பெண் என்பதால் உன்னை கொத்திக்குதறாமல் ஒரே விழுங்கு.. சரிதானே.
பாம்பு: அவள் என்ன கேட்டாள். நீ என்ன சொல்கிறாய்.
நான்: என்னை ஒருமையில் அழைக்காதே சாரை. என் பொறுமை கரையத்தொடங்கி விட்டது.
எலி: இதோ பார். நீ எங்களை இறக்கி விட்டதும் ஓடியிருந்தால் உன்னால் எங்களை பிடித்து இருக்கமுடியாது. காட் ப்ராமிஸ்.. நாங்கள் நிற்கிறோம் என்றால் எங்கள் நேர்மையை நீ கவனி. சொல்வதைக்கேள். எங்கள் இரண்டு பேரில் ஒருவரை விட்டு விடு.
எனக்குத்தான் எத்தனைத் தொல்லை. பசித்தால் திங்க வேண்டும். அதைவிட்டு விட்டு. இப்பொழுது என் அறத்தை பற்றிய கேள்வி எழுப்பி நொம்பலப்படுத்துதுகள். இதற்கு பேசாமல் அந்த கலாபத்தை தின்னு தொலைத்திருக்கலாம். பசி வேறு கண்ணைக்கட்டிக் கொண்டு வருகிறது. நான் ஒரு மயில். எலியையோ பாம்பையோ தின்றால் என்ன பிரச்சனை. இதை இரண்டையும் ஒரே நேரத்தில் உண்டால் யாருக்குத்தான் என்ன பிரச்சனை. சனியன் வேறு யாராவது கேட்டால் பதில் சொல்லலாம். இதுகளே வந்து கேட்டால். நரன் வடிவேலுவின் கதைபோல ஆகிப்போனதே பிழைப்பு.
எலி: என்ன மயிலாரே பலமான யோசனை. ஒரு முடிவுக்கு வாரும் சீக்கிரம். எனக்கு பசி.. பாருங்கள் உங்கள் நகங்களை திங்கத்தொடங்கிவிட்டேன். என் சைசுக்கு நீங்கள் கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும் மாரிக்காலம் வரை தாங்கும்.
என் விரல் நகங்களை பார்க்க குனிந்த சைக்கிள் கேப்பில் பாம்பார் எலியை லவட்டி விட்டார். எலிவால் துருத்திய வாயை அதக்கியவாறு life is very short for lies என்றார் பாம்பார். நான் அவரை இரண்டு கால்களிலும் வாகாக பிடித்துக்கொண்டு கொத்தி கொத்தி தின்னத்தொடங்கினேன். அதன் தலைப் பகுதியில் எப்பொழுதும் போல காதுகளை காணவில்லை. அதன் கண்களைக் கொத்துவதற்கு முன் அவற்றைப் பார்த்து சொன்னேன் vengence is lazy form of grief.
பாம்பாரின் கழுத்துக்கீழ் நெளிந்து கொண்டிருந்த எலியார் விழுந்த ஓட்டை வழி தவ்வி குதித்தோடினார் களிமண் தரையில் புழுதி பறக்க kepéla என்று கத்தியவாறு. நான் பசியாறினேன். இன்னொரு நாளைக்கு எலி சிக்காமலா போய்விடும்.
**************
kepéla. - lt means standing on opposite sides of the river."
this story is dedicated to nicole kidman.
***********************
இருப்பு என்கிற வெற்றிடம்
கவனப்பிசகொன்றை தூண்டிலில்
மாட்டி நீருள் எறிகிறான்
ஆழத்தில் அமிழும் வளையூசியில்
சிக்கிய மணல் துகளுடன்
மீண்டெழும் தூண்டிலை தரையிருத்தி
மணலுடன் வீடேகும் அவனது வாணலி
கொதிப்படைய சமைத்துண்கிறான்
ஒரு துளி பசியை பின்னான பசியற்ற
பொழுதில் துளையடைத்த ஈய
வாளியுடன் செல்கிறான்
நீர் நோக்கி மீண்டும்
இம்முறை அவனது வெற்றிடம்
நிரம்புகிறது
ஒளியூடாடும் உடலிலி மீன்கள்.
********************
19.4.10
மன்னிக்கவும்
இது பிரபலமானவர்களில் எனக்குப்பிடித்த பெண்கள். எனக்குவிருப்பமான சுற்றமும் நட்பும் பற்றி நான் குறிப்பிடப்போவதில்லை.
***************************
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன்.....மனிதன்.... மனிதம்..............மனிதா...மனி.. மனி... மனி...
மன்னிக்கவும் ரெகார்ட் கீறல் விழுந்துள்ளதால் இந்த வரியே திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கிறது. சவுண்ட் சர்விஸ் பார்ட்டி ப்ளேயரைப் போட்டுவிட்டு விட்டு ரெண்டு இட்லி கெட்டிச் சட்டினி வைத்து சாப்பிட்டு வருவதாக சொல்லி போயிருக்கிறான்.
பொறுத்திருங்கள்.
****************************
எவ்வளவு எமாற்றுகாரர்களாய் இருக்கிறார்கள் இந்த சினிமா இயக்குனர்கள் என்பதற்கு மறுபடியும் ஒரு அத்தாச்சி 'பையா'. கொஞ்ச நாளுக்கு முன்ன 'படிக்காதவன்' என்கிற ரஜினியின் மருமான் நடிச்ச படத்த ரீ- மேக்கியிருக்கார் திருவாளர் லிங்குசாமி. அதுலயும் இந்த தமன்னா பொண்ணுதான் .... ஹையோ.. ஹையோ.
******************
நான் சொல்லுவதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறில்லை:
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்
நீங்க சொன்னா சரிதானுங்க மாமோவ்வ்...........
**********************************
16.4.10
கதை
நான் யாருக்கும் பின்னூட்டம் அளிக்கவில்லைஎன்றால் யாரும் எனக்கு பின்னூட்டம் செய்யமாட்டார்கள் என்று சொல்கிறார் நேசமிதிரன். நல்லது. இன்று எனக்கு அதிகபட்ச சொடுக்காக என்பது உள்ளது. எனக்கு தெரிந்த ஐந்து பேர் பதினாறு முறை எனது வலைதளத்தை சொடுக்கினார்கள் எனக்கொள்கிறேன். நன்றி.
************************
ஒரு கதையை இனிய தங்கை அனுப்பியிருக்கிறாள்!
தந்தையும் பத்து வயது மகனும் புங்கமரத்துக்கு அடியில் அமர்திருக்கிறார்கள். அப்பா கேட்டார். மகனே மரத்தில் இருக்கும் பறவை எது. அது ஒரு காக்காய், என்கிறான் மகன். மீண்டும் அப்பா கேட்டார். மகனே மரத்தில் இருக்கும் பறவை எது. அது ஒரு காக்காய், என்கிறான் மகன். மீண்டும் அப்பா கேட்டார். மகனே மரத்தில் இருக்கும் பறவை எது. அது ஒரு காக்காய், என்கிறான் மகன். மீண்டும் அப்பா கேட்டார்.
நீ என்ன செவிடா.. அப்பா. நான் சொல்வது கேக்கவில்லையா. அல்லது நீ ஒரு குருடா.
அப்பா சொன்னார். உன் மூன்று வயதில் இதே இடத்தில் இந்த கேள்வியை நூற்றி எழுபது முறை கேட்டாய் மகனே. நான் ஒவ்வொரு முறையும் உன் முகத்தில் ஒரு இனிய முத்தமிட்டு சொன்னேன் 'அது ஒரு காக்கை' என்று.
இப்பொழுது நான் மூன்று முறை அந்த கேள்வியை கேட்டதும் நீ என்னை செவிடன்கிறாய்.
***************
பிள்ளைகளைப் பெறும் வரை நாம் பெற்றோர்களை குறை சொல்கிறோம். பிள்ளைகள் பெற்ற பின் நாம் குழந்தைகளை குறை சொல்கிறோம்.
*****************
நேசமித்திரனை இந்த பத்து பெண்களிப்பற்றிய குறிப்புகளுக்கு தொடர் பதிவை அளிக்க முதலில் அழைக்கிறேன்.
**********************