கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5.5.10

அற்றவை நிரம்பிய தேகம்

கற்றவை கரையும் கானுறை ஞானம்
சற்றவை மறைய களிபெறும் மோனம்
மற்றவை தேடிடா மதிவானின் போதம்
அற்றவை நிறைந்திட்ட அந்தியின் நாதம்

முற்றவை விலகிடா முற்றத்து வானம்
சிற்றவை அடங்கிடா கருமுகிழ் தானம்
கூற்றவை முற்றிடா குறுந்தமிழ் பானம்
கொற்றவை என்றொரு காடேகும் மௌனம் - திக்

கற்றவை நிரம்பிய விசும்பிடை வாசம்
பெற்றவை யாவிலும் தண்பனி வீசும்
உற்றவை பற்றிய ஊனுயிர் தாகம் - அமிழ்து
மற்றவை நிரம்பிய கலயமுன் தேகம்.

*******************

24.4.10

இருப்பு என்கிற வெற்றிடம்


கவனப்பிசகொன்றை தூண்டிலில்
மாட்டி நீருள் எறிகிறான்
ஆழத்தில் அமிழும் வளையூசியில்
சிக்கிய மணல் துகளுடன்
மீண்டெழும் தூண்டிலை தரையிருத்தி
மணலுடன் வீடேகும் அவனது வாணலி
கொதிப்படைய சமைத்துண்கிறான்
ஒரு துளி பசியை பின்னான பசியற்ற
பொழுதில் துளையடைத்த ஈய
வாளியுடன் செல்கிறான்
நீர் நோக்கி மீண்டும்
இம்முறை அவனது வெற்றிடம்
நிரம்புகிறது
ஒளியூடாடும் உடலிலி மீன்கள்.
********************

16.4.10

you know onething.. I am out of Music.


அந்த இசைக்கருவியின் தந்திக்கம்பி
ஒலியிலிருந்து விலகியோடுகிறேன்
அதிர்ந்தடங்கும் கம்பியினுள் குவிந்தடங்கும்
ஒலிப்புள்ளியாய் சூனியம் சேர்க்கிறது கணம்
எளிய வழியை உன் விழியில் வைத்திருக்கிறாய்
பொறுமையாய் உள்நுழைய எதுவாய் இருக்கிறதுன்
இதயம். நண்ப...
இசைக்கருவியின் அமைப்பியல் பருண்மை
இலகுவாக்குகிறது இசையை அது
நீ இல்லாத தருணங்களை இசைக்கிறது
குழந்தையொன்றின் கேவல் போல
மேலும் அது என்னில் காதலை தளிர்க்கிறது
நான் ஓவியம் வரைகிறேன். அனைவரும்
என்னை இசைக்கலைஞன் எனவே விளிக்கிறார்கள்
நான் சென்றுவிடவே விரும்புகிறேன்
நீ இல்லாத இடத்தில் எனக்கு
அல்லது இசைக்கு அல்லது அந்த
இசைக்கருவிக்கு இடமில்லை நான்
செல்லுகிறேன் உன்னிடமிருந்து
உன்னிடத்திற்கு விழி முன்னாள் இதை
நிகழ்த்தும் யாரோ ஒருவனின் இசையை
மரண நரம்பென்கிறேன்
எளிய இசையை ஆயுதமாக்கும் மாயக்காரனின்
விருப்பம் எனதுயிர் என்றால்
அதை உனக்கு தானமாக்குகிறேன்
எனவே..

27.2.10

குளம்

தாழ்வாரத்தில் தேங்கும் ஒளிக்குளம் நிலவு கொடுத்தது. எடுத்து முகத்தில் அப்பிக்கொள். வழிகிறது வாசமாய் உன் இனிய சொற்கள். தேகம்கொல் காமம் பிசைந்த சோற்றுப்பருக்கைகளை உருட்டியளிக்கிறாய் நீளும் என் உள்ளங்கையில். வயிற்றிலில்லை பசிஎன்னும் சொல். எல்லாமே வெண்மையாய் தெரிய கறுத்துச்சிறுக்கிறது எனதான அகம். புறம் பேசுகிறது நிலா.

**************

சூரியனின் நீர் நிறைந்த பகலொன்றில் கனப்பு மிக்க நிலத்தில் உன் காலடி தடம். பற்றி செல்கையில் நிறைவடைகிறது தொடுவானம்.

****************

பலவருடங்களுக்கு முன் எழுதிப்பார்த்த காதல் வரிகள்!

*********************

13.2.10

வெயில் பாலத்தின் குறுக்கில்நீளும் நினைவுக்கத்தி - 2

நீண்ட நாட்களுக்கு பின்சில பருத்திச்செடிகளைப்
பார்த்தேன். வரைமுறையற்ற
காடைமுட்டை அளவில் வெடிக்க
தொடங்கியிருந்தன வெயிலின் வாசனையிலிருந்த
பருத்திப்பூக்கள்.

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு
கடலைப் பார்த்தேன். பொங்கும் அலையடங்கி
பருத்தி வண்ண நுரைபெருக்கியது கடல். கை
நிறைய அள்ளி முகர்ந்தேன் தேனடை வாசனை.

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு
சூர்ய அஸ்தமனத்தை பார்த்தேன். ஒழுங்கான
வட்டத்தில் நின்று கடலையும் பருத்தியையும்'
சிவப்பாக்கிகொண்டிருந்த குருதிக்குழம்பு
கைகளில் கசிய
கடல் நீரில் கழுவினேன்
பருத்தியில் துடைத்துக்கொண்டேன் கைகளை.

நீண்ட நாட்களுக்கு பின் நான் நடந்த
தரையில் சிறிது காந்தமணலைப்பார்தேன். காந்தமானேன்.
காகிதத்தில் பிடித்த மணலை பிரித்தேன்
வீடாகியிருந்தது மனம் போல .

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு மரணம்
பார்த்தேன். காந்த வீட்டிலிருந்து வெளியேறி
கடலில் காலைக்கழுவி
ஒரு பருத்திப்பூவை அதன் மேல் வைத்து
அமைதியாய் நின்றிருந்தேன்
நீண்ட நாட்களுக்கு பின்.

*************

6.2.10

வெயில்பாலத்தின் குறுக்கில் நீளும் நினைவுக்கத்தி - 1

**

ஏனென்றால் அவன் தன்னை
அழைத்துக்கொள்கிறான் தன்னைத்தானே.
தன்னைத்தானே அழைத்துக்கொள்வதற்காக
தன்னை ஆயத்தப்படுத்துகிறான் தினமும்
சிலமணித்துளிகள் அவன் ஆடி முன்பாக
ஒத்திகை செய்துகொள்கிறான். பிறகு இன்று
தீர்மானிக்கிறான். கடற்கரை மணலை அள்ளி
வாயிலிட்டு கண்ணீர் வர இருமித்துப்புகிறான். பின்
அறைக்கு வந்து லாவகமாய் முப்பத்துஏழு
மாத்திரைகளை விழுங்குகிறான்.

**
இரவு முடிந்து பகலில் தெருவோர அரச
மரத்தில் தலைகீழாய் தொங்கிக்கொண்டிருக்கும்
காதலை தாருருண்டை அப்பிய அம்பால்
எய்து பறிக்கிறான். இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டு
ஆகபெரும் அடிமை பாவத்துடன் அவன்

வீட்டினுள் நுழைகிறது காதல்.

**

காதல் இருக்கும் வீட்டிற்குள் வேறாரும்
நுழையக்கூடுமோ காமமென்ற ஆமைதவிர.
அவன் தன்னைத்தானே அழைத்துக்கொள்கிறான்
வீட்டினுள் நுழைகிறது காமமும் காதலும்
வெட்டப்பட்ட அரசமரம் வெற்றிடத்தில் முளைக்கிறது .
**************

1.2.10

என்றொரு ஆதிப்பெண் 5

*******************************


காமா..

ஒவ்வொரு துளியும் தீயென்னும் அச்சக்காடு
ககனத்தில் ஓங்கிய பெருவிருட்சம்
சாக்காடு எனும் முத்தத் திமிங்கலம்
தசை அறுந்து வடியும் குருதிச்சுவை
நாணம் விழுங்கும் வளையறுக்கும் வாள்
ஓங்காரம் ஒன்றின் ஒலிவடிவம்
நீ

திசைக்கொன்றாய் கூந்தல் நுனிகள்
அவற்றிலிருந்து வெளியேறும் நீர்ப்பறவை
மரகுறுக்கின் வரிகொள் வடிவம்
நிறமிழக்கும் யாழிசைக்குறிப்பு
நீ

தாவரங்கள் பரிமாறும் மகரந்த வாசம்
பலி கொள்ளும் அரவத்தின் கூர்நாக்கு
திறந்தவுடன் நிறைந்துவிடும் அகல்விளக்கு
சுயம் கொல்லும் காமத்தின் உடலுறுப்பு
நீ

தெருவோரம் தேங்கும் மழைநீர்புழுவின்
அழுகிய இருப்பு
நான்..

நிலவொளியில் ஊளையிடும் ஓநாயின்
வாயொழுகும் உமிழ்நீர் சுவை
அது.

முடிக்கத்தெரியா கவிதை நீ

முடிக்கமுடியா வெற்றிடம் நான்

கவிதை அது.

*******************************

இக்கவிதை முடிவுக்கு வருகிறது.

**********************************

23.1.10

காதற்புள்.




******************************
நண்ப...
ஒரு துரோகத்தின் விலை
காதலைத் தவிர என்னவாய் இருக்க
முடியும்
திரும்பவியலாத நீள் பயணத்தின்
முடிவை அறிய அந்த சிறு
துரோகம் போதுமானதாய்
இருக்கும்போது
கால் இடறும் பளபளப்பும்
ஒழுங்குமற்றதொரு கல்லை
எடுத்து எதிர்வரும் எனது
சட்டைப்பைக்குள் வைக்கும் காதலை
நான் துரோகத்திற்கு விற்றுவிடுவது
எந்தவிதத்தில் நியாயமில்லாமல் போகும்

நண்ப..
நதியொன்றின் குறுக்கில்
நிரப்பப்படும் கருங்கற்களை
காதல் என்று சொல்லாமல்
என்ன செய்வது
கற்களினிடை நுண்ணிய துவாரங்களில்
கசிந்து வெளியேறும் நீரை
நீ துரோகமென்று விளிக்கும்போது

நண்ப...
மாலைக்கருக்கலில்
கூரிய அலகில் இரைகவ்வி
பறக்கும் பசும் புள்ளின் எச்சம்
விடியக் காலை கருக்கலில்
தலைமீது விழுவது காதலின்
துரோகமென்கிறேன் ..
நீ
துரோகத்தின் காதலென்கிறாய்.

*********************

21.1.10

இரவில் தோன்றும் கடல் தேவதை.

**********************
முதல் ஜாமம்

வயதேறியதொரு கனவின் விளிம்பில்
பிறந்த கதை சொல்லலானாள் கடல் தேவதை
சிவப்படங்கிய தொடுவானத்தின்
கிடைமட்டத்தில் செய்வதறியாது
கிடந்த ஆழியின் ஆழத்தில்
ஒரு துளி தன்
உப்புத்தன்மை இழந்தது
நிறபிரிகையின் ஏழாம் நிறத்தில்
ஆழி ஒளிர்ந்த கணம்
ஏற்பட்டதொரு சூன்ய அழுத்தத்தில்
பருண்மை கொண்டாள் அவள்
அண்ட சராசரங்கள் நடுங்கியொலித்ததாக
மேற்கு மலை நத்தையொன்று
கூறித்திரிந்தது யாரும் அறியாதது
வெயில் பட்டு உதிர்ந்த செதில்களின் நடுவே
ஈரங்காயாமல் உறங்கிக்கிடந்தவளை
என் அறைக்கு கொண்டு வந்தேன்
தடித்த கனவின் முடிவில்
அவளை யாளி என அழைக்கத்தொடங்கினேன்

இரண்டாம் ஜாமம்

ஆதிக்கனியறியாத யாளியின்
நிர்வாணம் வெட்கமின்றி இருந்தது
ஒளியறியாத வேர்த்தண்டின் வெளிறிய
வண்ணத்தில் மிளிர்கிறது அவளது தோள்
வெளிச்சப்புள்ளிகளாய் கண்கள்
சிறகுகளற்ற அகன்ற முதுகின் வெகுகீழே
நெகிழ்ந்த பிருஷ்டம் பற்றி இறுக்குகிறேன்
இயல்பென உடை அகற்றுகிறாள்
என்னுடம்பிலிருந்து கிளம்பி பரவுகிறது
வெட்கம்
சட்டென்று உப்பரித்த நீராய் மாறி
அறைமுழுதும் நிரம்பி அனைத்தையும்
மூழ்கச்செய்கிறாள் நிதானமாக
எல்லா நீரையும் குடித்து அறையை
சுத்தம் செய்கிறேன்
தரையில் கிடந்த யாளி
வெட்கத்துடன் என்னுடயை
இழுத்து போர்த்திக்கொள்கிறாள்
பின்பு நாட்குறிப்பில் பெருமுலைத்திருக்குமரி
பூப்பெய்தினாள் என குறித்துக்கொண்டேன்

மூன்றாம் ஜாமம்

வெளிச்சத்தின் சூழில்
பிறந்த இருளில்
தன் பெயர் பெறுகிறது ஜாமம்
நிலாவின் பாதரசம் குடித்து
அரற்றத் தொடங்கினேன்
யாளி.. யாளி..
குரலில் அம்பெய்திருன்தான் மாரன்
சுயம் துடித்துக்கொண்டிருந்த
சமயலறைச்சாம்பலில்
திளைத்துக்கொண்டிருந்தாள்
பூனையுருவில் யாளி
அவளது விழிகள் கங்கு பொறிந்தன
விரல் நகங்களை சுவற்றில்
சுரண்டும் ஒலியில் உள்ளழைக்கிறாள்
சமயலறைக்குள்ளான பயணம்
நீள்கிறது யுகங்களாய் ...
ஒரு காற்புள்ளியின் பிறகு
தெறித்துச் சிதறிய சமையலறைக் கத்திகளில்
தோய்ந்திருக்கிறது யாளியின்
நிணம்

நான்காம் ஜாமம்

சகலமும் துறந்து
எச்சிலொழுக உறங்குகிறாள் யாளி
ஆகப்பெரிய பிச்சைப்பாத்திரத்துடன்
தேவதையின் நிதம்பக்கனி பெற
விண்மணிப்பாதங்கலடியில் அமர்ந்திருக்கிறேன்
ஈரத்த்தவுட்டின் வாசனை கசிகிறது
அவளது உடலில் நீள்கிறது ஜாமம்
பாசாங்கற்ற காத்திருப்பின் இடையில்
கூந்தலுக்குள் மறைந்திருக்கும்
யாளியின் முகத்தில் எப்பொழுதும்
இல்லாதவொரு ஒழுக்கம்
ஜாமத்திற்கான பெரும் இருளை
ஒழுங்கற்ற சிறுவில்லைகளாக சிதறச்செய்கிறது
பிச்சைப்பாத்திரம் வெறுமையாய் இருக்கும்
பொழுதுகள் சகிக்கமாட்டாமல்
நான் விழுங்கிய ஒவ்வொரு வில்லையும்
பேரிரைச்சலுடன் கரைகிறது
யாளி
அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கின்றாள்

ஐந்தாம் ஜாமம்

ஜாமம் முழுவதும்
வனமூங்கில் உடையும் சப்தத்துடன்
இழுபடுகிற தேரென
ஆகிப்போனது யாளியின் பருண்மை
கூந்தலே வடம்
குழந்தையின் குரூரத்துடன்
என்மீதேறி உருள்கிறாள் யாளி
விசும்பெங்கும் உப்பின் வாடை
கருக்கலில்
அறை முழுதும் கடந்து
பூக்கள் கலைந்த பீடத்தில்
நிலை கொள்கிறாள் யாளி ...
வண்டல் இழுபடும் நதிக்கரையில் நின்று
பிரபஞ்சமும் கேட்கட்டுமென கூவுகிறேன்
யாளியுடனான ஒவ்வொரு புணர்வும்
ஒரு தேரோட்டம்

ஆறாம் ஜாமம்

யாளியின் புதிர்கூந்தலில்
இரவு முழுதும் தரவியலாத
முத்தமொன்றை பிடுங்கி
சதுப்பேறிய அறை நிலத்தில்
நட்டு வைக்கிறேன்
வளரத்தொடங்கிய விருட்சத்திலிருந்து
பறித்த ஆயிரம் வார்த்தைகளை
தின்று
மீன்குஞ்சுகளை பிரசவிக்கிறாள் யாளி
காற்றைக் குடித்து அறைவெளியில்
நீந்தித் திரிகின்றன அவையாவும்
களி கொள்கிறதவற்றின் வேகம்
அதி ஜாமத்தின் முடிவில்
மலடு நீங்கி பொழிவுற்றன யாளியின் உதடுகள்
இடைவிடாமல் திறந்து மூடும்
கதவிடுக்கில் சிக்கித் தவிக்கிறது
எனதான ஆணவம்

ஏழாம் ஜாமம்

சொற்களை விலை கொடுத்து
கடவுளும் அறியாத வகையில்
காலத்தால் ஆன அறையொன்றை வனைந்து
உள்வைத்து பூட்டுகிறேன்
யாளி ... மீன்களை அக்குளில்
பொதித்தவாறு வெளிவிட வேண்டி இறைஞ்சுகிறாள்
உயிர் போகுமென அறியாமல்
அனைத்தும்
கனவென்று அறியப்படும் சாபத்திலிருந்து
ஒரு புல்லை உருவி
உள்ளங்கையில் வைத்து
தினமும் தொழத்தொடங்குகிறேன்
யாளி வளர்க.....
ஆழி வளர்க....
யாளியான ஆழி வளர்க...
ஆழியான யாளி வளர்க..

எட்டாவதும் கடைசியுமான ஜாமம்

பூரண வெளிச்சம்
துயருற்றுப்பொங்குகிறது ஆழியின் சாபம்
சமையலறையிலிருந்து
வெளியேறிப் பறக்கும் யாளியின்
முதுகில் முளைத்திருக்கிறது
நீண்ட மின்னெலென சிறகு.

*************************************************

ரவி திகம்பனின் நினைவாக - 'கள்ளக்காதல்' - கவிதை தொகுப்பிலிருந்து .

**************************************************

15.1.10

என்றொரு ஆதிப்பெண் 4

****************

காமா...

இலைத்துளியின் மேலேயும்

தடாகநீரின் ஆழத்திலும் ஒரேநேரத்தில்

பறக்கும் ஆகாய பறவை நீ

நீரில்விழும் எச்சத்துளியில் களைந்து

மேலேறிப்பரவும் சிறுவட்ட அலைவிரிசல் நான்

களைப்புற்று முகமமிழ்ந்துறுஞ்சும்

வேட்டை மிருகத்தின் தாகம் அது.

காமா..

உயிரெடுத்து வலைப்பின்னும்

உறுபசி சிலந்தியின் இரைக்கான காத்திருப்பு நீ..

இலையிலிருந்து உருண்டுவிழுந்து

வலையின் மீது தொங்கும் சிறுபனித்துளி நான்..

மழைநின்றகருவானில் குளிர்நிலவின் எரிதல் அது.

காமா..

அசந்தர்ப்பங்களின் மீது வன்மத்துடன்

காலம் செய்யும் முத்தத்தெறிப்பு நீ..

முடிவுறா சந்தர்ப்பங்களை தவறவிடும்

ஒழுங்கீனச் சோம்பல் நான்...

மன்னிப்பை உண்டு கொழுக்கும் கடல்பிராணி அது..

காமா..

முத்தம் நீ..

அம்முத்து நான்..

அமுதம் அது.

**********

4.1.10

நிலம்

விழாக்கால நெரிசலாய் திமிர்கிறது

மூளைசெதில்களில் பிரவகிக்கும் உனக்கான

கற்பனைச்சுரபி. வழிகிறது ரணத்தின் நிணம்.

தூர நாயின் ஓலம் மரணத்தையொத்தது அல்ல

மாறாக அன்பின் அலறலது. தேவையின்

அடிப்படைகூச்சலும் கூட. பொருண்மையற்ற

நுண்ணிய தர்க்கத்தால் பிரியநேரும்

துயரத்தை என் பாதத்தில் உணர்த்துகிறாய்

சிதைவுறும் பண்பாட்டு கழிவுகளில் பற்றியெரிந்து

பிரகாசிக்கிறாய். உற்சாகக்கூப்பாட்டில்

சிவக்கிறதுன் குதம். நீர்கசியும் ஒரு முகடோ

அல்லது

பள்ளத்தாக்கின் நுனியோ போதுமானதாய்

வீழ்ந்துகிடக்கிறாய் சிறுகுழந்தையின்

விழிவெளுப்பாய். இயல்பின் இயல்பாய்

மரணம் நோக்கிய சுவாசத்துடன் விரியும்

உன்னுள் மதம்

கொண்ட விலங்கின் வன்மை புதைக்கப்படுகிறது.

உணவுக்கு

என் விதைகள் போதுமானதாய் இல்லையென

புனையபபடும் பாடத்திட்டத்தில் உன்

காலம் மெல்லிய கம்பியில் நடந்து

வித்தை காட்டும் சிறுமியின் கால்களில்

இருக்கும் செருப்பு போன்ற விநோதமும்

பயங்கரமும் கூடியது.

உன் இயக்கவியல்

தந்திரத்திலும் அதன் சமன்பாடுகளின் துல்லியத்திலும்

இற்று விழும் சவங்கள் விழிகளை

திறந்தே வைத்திருக்கின்றன பசிய

முதலையின் வாய்போல. காக்கைகளின்

உணவிற்கு குறைவற்ற

நிலத்தில் எந்நேரமும் என் தலைக்குள்

சுடுகாட்டு வாசம்.

எனக்கு உன்னைப்பற்றிய அக்கறைஎதுவும்

இல்லைஎன்பதற்காகவே சட்டைப்பையில்

சிறிது வண்டல் போட்டு ஒரு பிள்ளைப்பூச்சியை

வளர்க்கிறேன். நீ தருவதைவிட அதிக

குறுகுறுப்பை தருகிறது என் நெஞ்சில்.

சமயங்களில் அது வயிற்றுப்பகுதிக்கு தப்புகிறது

அச்சமயங்களில் நெஞ்சை விட வயிறு நிறைய

சிதைவுகளுக்கு ஆளாகிறது. அதற்கு உணவு

தயாரிப்பதினாலேயே உன் நினைவை

என்னால் கடந்துவிட முடிகிறது. மேலும்

நிலையான நீண்ட காலம் பற்றிய

நம்பிக்கை எனக்கில்லை என்கிற என்

கூடுதல் பலவீனத்தையும் நீயறிவாய்.

முழங்காலும் நெஞ்சும் உன்மீதுவிழ இருகைகள்

அறைந்து தொழுவதும் பிரவகிக்கும் கண்ணீரின்

மூலம் நெகிழும் என்மனதை சிருமதுவூற்றி

எரிப்பதும் உனக்கு பொருட்டல்ல என்பது மட்டுமே

உன்னதத்தின் கூட்டுச்சதி. மரணத்தின்

சங்கேதமாகிப்போன

உன்பற்றிய நினைவை அழிக்கவல்ல ஆயுதம்தேடி

நானலையத்தேவையான சிறகுகளை வைத்திருக்கும்

தேவதைகள் நிலமே நிலமே என கூவியூற்றுகிறார்கள்

கிரகணங்களின் திரவத்தை

நான் குடித்துக்கொண்டிருக்கிறேன்.

**********************************

23.12.09

என்றொரு ஆதிப்பெண் 3

காமா..

நிதானம் இழக்கும் முன் ஒரு

புன்னகையை யாசிக்கும் தோள்நிமிர்

தகப்பன் நான். ஒருபோதும் அடங்காத குழழால்

காற்றை கலங்கடிக்கும் சிறுமியின்

குரூரம் நீ. கானகத்தீயில் வெந்துகருகும்

மூங்கில்களின் கவுச்சிவாசம் அது.

காமா..

என்பாதமறியா கானகம் நுழைகிறது

என்னுள் பிளவுண்ட கண்கள் வழியாக

நெருக்கிய காற்றை காணவில்லை என

கதறிவீழும் அருவியை உன்மத்தம்

ததும்ப குடித்து தீர்க்கிறேன். நீரின்

திசையில் நீளும் நாணலின் வேரை

பிடுங்க ஏலாத பேரச்சம் ஒன்றின்

இருள்மறைவில் காட்டுப் பூனையின்

கங்குவிழிகளாய் ஒளிர்கிறது அது..

காமா..

ஒற்றைப்புள்ளி நீ

அதன் இருள் நான்

காமா..

யார்கையிலும் கிட்டிவிடும் அந்தர அம்பு அது.

**************

18.12.09

என்றொரு ஆதிப்பெண் 2


காமா..

சில பலாப்பழங்களின்
நிறங்கள் ஒரு எலுமிச்சையின் நிறமாய்
ஒத்திருப்பதை பற்றியும் ஒரு
காக்கையின் நிறமில்லாமல்
இருப்பதைப்பற்றியும் யோசிக்க
ஏலாதவான் நான்.

ஒற்றை எலுமிச்சையுடன்
குன்றேரும் என்முன் கண்மறைவில்
வெளிச்ச சாகசம் புரியும் நிலவுப்பாதை
முழுவதும் காற்று சொரியும் வாசனை நீ.

இம்முறை பத்மவியூகத்தில் எனக்கு
அளிக்கப்பட்டிருப்பது அரசிவேட்டை
எப்பொழுதும்போலவே வெளியேறதெரியாதவன்
நானொருவனே. வனப்பூக்களின் வாசனையில்
துளிர்க்கும் அரசியை காணப்புகும்
உள்ளுணர்வு அது.

காமா..

பின்னிரவின் களைப்பில்
பாறையிடுக்குகளில் நான் சாய்கையில்
வூதாக்கதிர்களின் துணை கொண்டு
என் கண் பிளக்கிறாள் அரசி

****************


16.12.09

என்றொரு ஆதிப்பெண் - 1


காமா ....
மழைநீரின் ருசியறியா மணல்வனம்
நீ. பெருவெப்பத்தின் தகிப்பறியா நீரூற்று
நான். திசையறியா வெள்ளத்தின் உடைபொருள்
அது. ஒரு சங்கீதக்காரனின் வெயில்நாளின் மழையுடை
நீ. அடரிரவின் ஒளி உடைக்கும் தவளைச்சத்தம்
நான். திறந்தவுடன் கொட்டிவிடும் பெருமழை
அது. காய்ந்த நிலவில் மகரந்தம் தேடும் ஈக்களின் வாசம்
நீ. இரைக்கெனவூளையிடும் ஓநாயின் வேட்கை
நான். கொள்கலன் அற்று நிரம்பிவழியும் பேரமுதம்
அது.

காமா .....
சருகொலியின் பயப்பரப்பு நீ. சயனத்தில்
ககனத்தீ நான். அமைவிடத்தின் அடியாழம்
அது. ஸ்தூலத்தின் நெடுமருவி நீ. பொழிவிழந்த
காட்டெருதின் வகையறியா பெருங்கூவல்
நான். ஜாமத்தில் திரண்டிருக்கும் பொழிவெளுச்சம்
அது. தூமத்தின் கலி ஏற்றும் மாறன் நீ. மண்புழுதிக்காட்டில்
கலி கொள்ளும் தூறன் நான். விசும்பெல்லாம்
எழுந்தடங்கும் ஊழியோசை அது.

*******


11.12.09

தடம்



மெல்லிய காற்று
ஈரப்பதம் கூடிய வெயில்
நின்றுபோன மழையின் வாசம்
மணற்ப்புழுதியின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது
உயிரார்வம்..

புயல்
பெரும்மழை
காட்டாற்றின் வெள்ளம்
உடைந்து மிதக்கும் கிளையின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது
உயிரலறல்..

நிலம்
மேகமற்ற வானம்
பெயர் தேவையில்லாத நகரம்
வெடித்து சிதறிய கட்டிடத்தின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது

உயிர்ப்பதறல்..

கடல்
நீர்ப்பரப்பு
பெருவனத்தீ கண்டம்
பேரறத்தின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது

உயிர்ப்பயம்..

பிரபஞ்சம் சொல்லவொன்னாதவொரு
நுண்ணிய கோள்
நீலம்
பெருங்காமத்தின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது

உயிர்க்காதல்...

பெண்
ஆண்
உயிரற்ரதன் பொருள்
வெளியற்றதின் உள்
கற்பிதங்களின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது

உயிர்..

**********




உரையாடல் போட்டிக்காக மற்றொரு கவிதை இது.

5.12.09

மிமிக்கிரி



ஆசையெல்லாம் பெரியதொன்றும்
இல்லை. ஒரு கவிதை
எழுத முயற்சிப்பதை தவிர
அதற்கு முன்னால்
உலகத்தின் அத்துனை
நாழிதல்களையும்
கிழித்து ப்ருஷ்ட்டம் துடைக்க
வேண்டியிருக்கிறது. நாய்களைப்போல
காலைத்தூக்கி
வாகனங்களின் மீது
மூத்திரம் பெய்ய வேண்டியிருக்கிறது
ஒருகாதலிக்கும்
பல காதலிக்கும் இடையேயான
பயணத்தினால்
ஏற்படும் முதுகுவலிக்கு
சிகிச்சை செய்ய
வரும் கிழவியை
கொன்று புதைக்க வேண்டியிருக்கிறது
காலையில் எழுந்து
மலங்கழிக்க
முதல்நாள் இரவே
தூங்கவேண்டியிருக்கிறது
அலுமினியதட்டை ஏந்தி
தாயின் முதுகில் தொங்கும்
குழந்தையை
முகம் சுழித்து விரட்டவேண்டியிருக்கிறது
அரசியல் குறித்தான சொற்பொழியவும்
பெண்கவிகளின் பருண்மை
குறித்தான
கற்பனைகளை கைவிடவும்
சிரமப்படவேண்டியிருக்கிறது
ஒரு ஒற்றனைப்போல் மிமிக்கிரி
செய்யவேண்டியிருக்கிறது.
*****

24.11.09

உடல்மூடுதல்


புள்ளியைத்தேடி விரிகிறதென் கோடு
அம்பு நோக்கி பறக்கும் பறவையென
நிச்சலமாய் உடல் திறந்து கிடக்கிறாய்
சதுரம்
செவ்வகம்
முக்கோணம் போன்ற எதுவுமற்ற
கோளவடிவில்
எதை செய்து என்னை நிறுவுவது
உன்பொருட்டும்
என்பொருட்டும் அல்ல
புணர்ச்சி என்றபின் ?
மதிப்பிழந்த மரணத்திற்கு பின்?
நூற்றின் வாள்களுடன் போரிடும்
என்னை ஒற்றை கேடயத்தில்
கொன்றபின்?
துணியுடுத்தி உடல்மூடுகிறேன்
என்னைவெல்ல
உன்னைவெல்ல
இதைவிட ஏதேனும் வழியுண்டோ
லயம் இழந்த பாடல்
சிதறும் இவ்வேளையில் !
***
வசுமித்ர -வுக்காக.
***

20.11.09

அறிவியல் புனைவிலிருந்து வெளியேறும் நான்

முப்பரிமாணங்களின் எதிர்திசையில்
காலமென்கிற நான்காம் பரிமாணத்தின்
மத்தியில் ஒரு பெரிய ஓட்டை
விழுந்தது. முக்கடவுள்களில் முதலானவள்
அதை சூன்யம் என்றாள். இரண்டாமவள்
பொருட்களின் எதிர்மறை என்கிறாள்
மூன்றாமவள் வெளிஏறுதலின் ரகஸ்யம்
என்கிறாள். பின் மூவரும் அவ்வோட்டை
பற்றி ஒரு சமன்பாட்டை நிறுவ
முனைந்தார்கள். யுகம் கழிந்தது.
மூத்தவள் அல்ஜீப்ராவை கண்டுபிடித்தாள்
இரண்டாமவள் தங்கசுரங்கமொன்றின்
வரைபடத்தை நீட்டினாள். மூன்றாமவள்
இரும்புகோட்டையால் அவ்வோட்டையை
மூடி சாவியை காட்டினாள்
நான்
அல்ஜீப்ராவாகவும்
ரகஷ்ய சுரங்கத்தின் வரைபடமாகவும்
கோட்டைவாசலின் சாவியாகவும் ஆகிவிட்ட
காலத்தின் ஓட்டை பற்றி
ஒரு அக்கறையமில்லை எனக்கூறி
விழித்துக்கொண்டேன்.

17.11.09

சுகவாசி

தெரியாததை பற்றி
ஒரு போதும் எழுதுவதில்லை
தெரிந்ததை பற்றி எழுதாதவை போலவே
ஆயிரங்களின் வருடங்களில்
சிதைவுகளால் உருவாக்கப்பட்ட
நமதான சமூகத்தை யாருக்கு சொல்ல
ஏனென்றால் நான் ஒரு முழுச்சோம்பேறி
அற்புதமான சுகவாசி. கவலை கொண்டு
என் மணித்துளிகளை கொல்ல
உரிமையில்லை எனக்கு. இந்த
சமூகம் அடைந்து விட்ட மலட்டுத்தன்மை
என்னை என்ன செய்துவிடும். இதை
நான் யாரிடம் சொல்ல வேண்டும்
அல்லது யாரிடம் சொல்லாமல் இருக்க
வேண்டும். மலட்டுத்தன்மையை யார் உணர
முடியும் எல்லா ஆண்களிடமும் விந்து
பெருகும் போதும் எல்லா பெண்களும்
அண்டத்தை பொழியும்
போதும். மொழிகளும் நிறங்களும்
மனிதர்களை தீர்மானிக்கிற
ஆதிப்பழக்கத்தின் மீதான எனது
உமிழ்வு என்ன செய்து விட
போகிறது. நான் பாசாங்கு செய்கிறேன்
சந்தோசமான மனிதனாக
சமூகத்தின் வரையறைக்குள் என்னை
பொருத்திககொண்டதற்காக
பெருமைபடுபவனாக. ஆணென
சொல்லிக்கொள்பவனாக. என்
பாசாங்கு எவ்வளவு தூய்மையானது
வன்முறையை அது வெறுக்கிறது ஒரு
நடனப்பெண்ணை வெறுக்குமளவிற்கு
அடிநாதமாய் அதனுள் இருக்கும்
குரூரதன்மையை
எளிதாய் உதறி தள்ளுகிறது. ஒரு நடன
மாது
அவள் புகைப்பதையும் மதுவுண்பதையும்
நான் எவ்வாறு வெறுக்க முடியும். எனது
விழிகள் அவற்றை எவ்வளவு தாகத்துடன்
உறிஞ்சி விழுங்குகிறது பல்வழி
நீர்கசிய. எனது விருப்ப மஜ்ஜைகள் உற்பத்தி
செய்கிற குருதி கேளிக்கைகளுக்கானது
எல்லோரிடத்திலும் ஒரே நிறத்திலிருக்கும்
அக்குருதியை அரசியலுக்கு குடிக்க தருவது
எவ்விதத்தில் பொருத்தமானது. எனது
குருதி எனக்குமட்டுமேயானது
முடிவு
ஆரம்பம்
அல்லது இவையிரண்டுமேயான
உங்கள் சுயத்தில் அதன் ஒரு துளியை
உருளவிடுகிறேன். அது நிற்குமிடத்தில்
இவ்வுலகம் நின்று போக கடவது
சுகவாசி சொன்ன சொல்
பலிக்கும்.

******* உரையாடல் - கவிதை போட்டிக்காக.

11.11.09

நான்குவழிசாலை

**

எல்லாம் போய்விட்ட பின்பும்

ஒன்று உள்ளதாய் சொல்கிறாய்

நம்பிக்கை என்றதன் பெரேன்கிறாய்

அனைவர்க்கும் தெரியும் இந்த பொய்

சாலையை குறுக்கிடும் ஆமை

பொறுமையற்றது என்றால் நம்பவா முடிகிறது.

**

விடுதியொன்றின் கறைபடிந்த

கழிப்பறையில் உரித்து கொண்டிருக்கும்

சுவரில் கருஞ்சிவப்பு பொட்டை பார்த்தேன்

நீர் வரும் குழாயின் மீதொரு கருப்பு பொட்டு

நாள்பட்டு சுருங்கதொடங்கியிருந்தது

நங்கூர வடிவில் மற்றொன்று

ஆறு விழிகளுடன் நான் குளிப்பதை

ரசித்துகொண்டிருந்தன அவைகள்.

**

பெண்கள் எல்லாவற்றிற்கும் மாற்றை

தம் கைப்பையில் வைத்திருக்கக்கூடும்

ஆண்கள் எல்லாவற்றிற்கும் மாற்றாய்

பெண்களை வைத்திருக்கிறார்கள்

**

கடலற்ற அலையொன்று எந்நேரமும்

பொங்குகிறது வாய்க்கால் வழி

வழிந்தோடுகிறது காலம்.

**