ஓரியண்ட்டலிசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓரியண்ட்டலிசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.12.09

ஓரியண்ட்டலிசம் 2


என்னை பொறுத்தவரையில் ஒரியேன்ட்டலிசம் என்பதன் ஆணிவேர் காலனியாக்கத்திலிருந்து தொடங்குறது. ஒரு நிலப்பரப்பு அதன் மொத்த வளங்களுடன் சேர்த்து அதன் பூர்வ குடிமக்களையும் வேறொரு நிலப்பகுதியின் அரசியல் குழு பல்வேறு வழிமுறைகளின் மூலம் அதிகாரம் செலுத்துவது என்பதை காலனி படுத்துவது என்று நாம் அறிவோம். அதற்கான உலகின் மிகச்சிறந்த உதாரணம் இந்தியா. இவ்வாறாக பல்வேறு காலனி நாடுகள் அரசியல் ரீதியாக அடிமைப்பட்டு அதன் பூர்வ மக்களின் பல்வேறுவகைப்பட்ட போராட்டங்களின் மூலமாக சுய அரசியல் ஆட்சி அமைப்புகளை உருவாகிய பின்பான காலத்தினை நாம் பின் காலனீய சூழல் எனலாம். காலனியம் மற்றும் பின்னைய காலனியம் ஆகியவைகள் நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் ஓரியென்டலிசம் அந்த நாணயத்தின் மறுபக்கம் எனக்கொள்ளலாம். இந்த நிகழ்வுப்போக்கில் பின்னைய காலனி நாடுகளின் மக்களும் அவர்களின் கலாசார அடையாளங்களும்தான் பலியாடுகள். உதாரணமாக அகதியாக்கம் என்பது இரு நிலைகளில் உணரலாம், ஒன்று சொந்த மண்ணை விட்டு வெளி நிலப்பரப்பில் அகதியாக்கப்படுவது, இரண்டு சொந்த நிலத்திலேயே அகதியாக்கப்படுவது. ( இதில் மூன்றாம் வகை ஒன்று உண்டு - ஒரு மனிதன் தனக்குத்தானே அகதி ஆகிப்போவது - இதை அந்நியமாதல் என்கிறோம். அந்நியமாதல் மிகப்பெரிய தனி கதை). ஒரு நிலப்பரப்பும் அதன் மக்களும் சொத்துக்களும் அரசியல் ரீதியாக அகதிகள் ஆக்கப்படுவது என்பது காலனிய நிலைமை. ஒரு மனிதன் உலகின் ஆகச்சிறந்த மோசமான நிலையை அவன் அகதியாக்கப்ப்படும்போது வந்தடைகிறான். அந்த வகையான மோசமான சூழலை ஒரு நாடு காலனிச்சூழலில் வந்தடைகிறது. அத்தகைய சூழலில் அந்நாடு தாய்மைநாட்டின் (இந்தியாவுக்கு பிரிட்டன் தாய்மைநாடு - சுதந்திரத்துக்கு முன் ) கலாச்சாரம் மற்றும் அரசியல் விவகாரங்களை திணிக்கப்படபட்டும் தனதான சுய அரசியல் மற்றும் பண்பாட்டு கலாச்சாரங்களை வலுக்கட்டாயமாக மறக்கடிக்கப்பட்டும் சிதைவுக்குள்ளாகிறது. இந்த இரண்டு வகையான செயல்பாடுகள் ஏக காலத்தில் நடைமுறைப்படுத்த படுகிறது. புதிதாக திருமணமான பதினைந்து வயதுப்பெண்ணின் புகுந்த வீட்டு சூழலில் ஏற்படும் மனசிதைவுகளுக்கு நிகராக அத்தகைய ஒரு நாட்டின் மொத்த இயங்கியலும் ஒரு குழப்பமான சூழலில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும். இச்சூழலில் ஆராய்கிறேன் என்று பெருமைகொள்ளும் பேர்வழிகள் தாய்மை நாட்டிலிருந்து புறப்பட்டு காலனி நாடுகளுக்குள் நுழைந்து காலனி நாடுகளின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றவைகளின் அமைப்பை அவதானித்து பதிவு செய்கிறார்கள். இந்த புள்ளிதான் ஓரியென்டலிசம் மற்றும் பின்னைய காலனிய பிரசச்சனைப்பாடுகளின் ஆரம்பம். இந்த கட்டுரைக்காக இவ்வகையான ஆராய்ச்சியாளர்களை குசும்பினிகள் என்று வைத்துக்கொள்ளலாம். இனி இக்குசும்பினிகள் எவ்வாறு தனது வேலைகளை செய்தார்கள் என்று சுருக்கமாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.


*****


தொடரும்.

29.11.09

ஓரியென்டலிசம்

Orientalism is the imitation or depiction of aspects of Eastern cultures in the West by writers, designers and artists. An "Orientalist" may be a person engaged in these activities, but it is also the traditional term for any scholar of Oriental studies.

பொதுவாக ஓரியேன்டலிசம் மேற்சொன்னவாறு விக்கிபீடியாவில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இனக்குழுக்களின் கலாச்சாரங்களை வேறொருவர் அவதானித்து இப்படித்தான் இவர்களின் கலாசாரம், வாழ்வுமுறை, பழக்கவழக்கங்கள் இருக்கிறது என்று பதிவு செய்வதை மற்றவர்கள் படித்து அவ்வகையான இனக்குழுக்களின் கலாச்சாரங்களை புரிந்துகொள்வது ஓரியேன்டலிசம். ஒரு இனக்குழுவின் அகத்தை புறமாக பார்த்து அவர்களின் இருப்பை யூகம் செய்து அதை பதிவு செய்வது என்ன தீமை வந்துவிடப்போகிறது.. நல்ல விசயம்தானே அது என்று நினைத்தால் நாம் தவறாக சிந்திக்கிறோம் என்று பொருள். இது கடந்த சில பதிமன் ஆண்டுகளாக பெரும் அரசியல் பரப்பாக நிகழ்ந்துவருகிறது. இந்த தொடர் பதிவில் ஓரியேன்டலிசம் பற்றிய எனது புரிதல்களை அவ்வப்போது எழுதி எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாமென நினைக்கிறேன். ஓரியேன்டலிசம் என்றவுடன் நமக்கு தவிர்க்க முடியாத பெயர் எட்வர்ட் செய்த். அவரின் ஓரியேன்டலிசம் என்கிற புத்தகம் ஆசியாவை பற்றிய - முக்கியமாக - முஸ்லிம்களை பற்றிய மேற்கத்திய புரிதல்கள் எவ்விதம் பரப்பபட்டது என்று எடுத்துக்காட்டுகிறது. மற்றவர்கள் பற்றி அதிகுறிப்பாய் விளிம்புநிலை மக்களை பற்றிய மேட்டுக்குடி கருத்தாக்கம் எவ்வாறு அவர்களை அடிமைத்தனம் படுத்துகிறது என்பதை ஆராயும் பார்வை இதில் உள்ளது. நான் இந்தியாவில் இருக்கும் இத்தகைய சூழல் பற்றி மட்டும் எனக்கு கிடைக்கும் தகவல்கள் மற்றும் படிப்பவைகளின் அடிப்படையில் தொடர்ந்து எழுதலாமென்று நினைக்கிறேன். ஓரியேன்டலிசம் ஒரு விலாசமான அரசியல் மற்றும் பண்பாட்டு சூழல். அதை பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இதை படிப்பவர்கள் (!) ஏதாவது தவறுகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக தெரிவியுங்கள்.


தொடரும்...