நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.4.10

சொல்லுவதெல்லாம் பொய் 11

கொட்டைப்பாக்கு வண்ணத்தில் எண்ணெய் தடவியது போல பளபளப்புடன் ஒரு ஏறும்புண்ணி சிறு புதரிலிருந்து வெளியேறி நிதானமாக நெருஞ்சிகளுக்குள் நடந்து சற்று பெரிய புதருக்குள் நுழைவதுவரை மார்கழர் அந்த புங்கன் பின்னால் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார். ஒற்றையடிப் பாதை சற்று சிதைவுற்றிப்பதாக பட்டது. மனிதர்கள் அதிகம் உபயோகப்படுத்தாத நிலம். நல்ல கரும்பாறையொன்றின் மீது ஏறி நின்று பார்த்தேன். பெரும் நிலவெளி. குன்றுகளால் நிரம்பியிருந்தது. மார்கழர் இல்லா விட்டால் திரும்பவும் அவர் வீடு காணமுடியாது. எதற்கு கட்டுப்பட்டு இருக்கிறேன். நான் ஏன் என் போக்கில் போகமுடியவில்லை. இந்த மூன்று நாளாய் இந்தக்கேள்விக்கு என்னால் பதில் காண முடியவில்லை. பின் தலையின் உள்ளுக்குள் ஒருவகையான சூட்டை கிளப்பிக்கொண்டே இருக்கிறது. உண்மையில் நான் என் திருமணத்துக்கு பயந்துதான் வெளியேறினேனா. அல்லிக்கன்னி ஞாபகம் எழும்பியது. மார்கழி அகலில் அவளைப் பார்த்தபோது நிலைமறந்த ஞாபகம். தங்கவார்ப்பு. பின் ஏன் வெளியேறினேன். ஒரு கணம் முடிவுசெய்து மேற்கு நோக்கிய பயணத்தை தொடங்க என்ன விகல்பம்.

போகலாம் சென்னி. மர்கழர் தோள் தொட்டார். அப்பாறை மீது அவர் ஏறியது எனக்கு மெல்லிய வியப்பளித்தது. அது சற்று முரடானது. உறுதியான ஊசிமுனைக் கற்களை நிரப்பியிருந்தது. என் எண்ணத்தை புரிந்து கொண்டது போல அவர் சொன்னார். பழக்கம் இளைஞா.. என் வாழ் நாளில் நாள் தொடர்ந்து பயின்று வரும் விசயங்களில் இதுவும் ஒன்று. தொடந்த பயிற்சி. இதுதான் துல்லியத்திற்கு திறவுகோல். துல்லியம் வாய்க்கப்பெற்றால் என்ன நேரும் தெரியுமா. நான் உடனடியாக பதில் சொல்லவில்லை. அறிந்த கேள்வி. தெரிந்த பதில். ஆனாலும் உடனடியாக ஏதும் சொல்லவில்லை. தொடர் பயிற்சி என்பதன் குழந்தை துல்லியம். இந்த எளிய அறிவுத்தேட்டம்தான் அனைத்திற்கும் முதல் அடி. சொல் சென்னி, துல்லியம் பெற்றவன் என்ன ஆவான். இலக்கை அடைவான் என்றேன். நன்று சொன்னாய். ஆம் துல்லியம் பெற்றவன் இலக்கு அடைவான். ஆனால் சென்னி நான் சொல்லுகிறேன். இன்று எனது முதல் பாடம் என இதைக்கொள். சென்னி, துல்லியம் பெற்றவன் இலக்கை வெறுப்பான். எனக்கு புரியவில்லை என்றாலும் எதோ ஒரு ஆர்வம் அந்த வாக்கியத்துக்குள் என்னை செலுத்தியது. பிறகு எதற்கு பயிற்சி. இலக்கை அடையத்தான். அதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். இலக்கை அடைய இலக்கின் மேல் விருப்பமோ வெறுப்போ அடையத்தேவயில்லை. அடையப்படவே இலக்குகள் உருவாகின்றது. அவ்வளவுதான். விருப்பமில்லாத இலக்கை அடைந்ந்து என்ன பயன். அந்த விருப்பத்தை பயிற்சி மட்டுப்படுத்தும். என் வினாவிற்கு இதுவல்ல பதில். இரண்டு வாக்கியங்களுக்குள் இருக்கும் தொடர்பை கண்டுகொள்வதுதான் ஒரு சாத்திரக்காரனின் ஆதாரத்தேவை.

முதல் ஜாமத்தின் மத்தியில் வெளிச்சம் மிகவும் குறைவுற்றிருந்தது. பறவைகள் கூடையும் கீச்சொலிகள். மிகத்தூரத்தில் ஒரு பிளிறல் கேட்டது. விடியலில் வீடு திரும்புவோமா என்றேன். இல்லை. நாம் வீடு வர இன்னும் பதிமூன்று நாட்களாகும். இன்றிலிருந்து பதிமூன்றாம் நாள் உனக்கான முதல் பௌர்ணமி. சித்திரையின் திங்கள் உன் குடுப்பினை. வளர் பிறை பதினைந்தும் நாம் பயணத்தில் இருப்போம். தேயும் பிறை பதினைந்தும் நாம் வானம் பார்ப்போம். நட சென்னி. முழு இரவும் நட. பகல் முழுதும் உறங்கு. உணவு. சேகரிப்போம். உணவு சேகரிக்கும் வித்தை மூச்சுவிடுவதுபோல இயல்பாய் கைவரச் செய்கிறேன். நிதானமாய் நட. உறுதியையும் விடாமல்.

***************************

கணமற்றதொரு கணம்: குறுமுனி பாடுராம்ப்பா.. பெரிய தாடிப்பா... தரையில கெடக்குது.. பாடுராம்ப்பா. உம்பாட்டன் கிட்ட போய் பாடு குள்ளா.. அப்பன் அதட்டியதும் அடங்கியது பாட்டு.

************************

1.4.10

சொல்லுவதெல்லாம் பொய் 10


வீடு வந்துவிட்டாயா. மார்கழர் கேட்ட கேள்வி எனக்கு பிடிபடவில்லை. எரிமீனின் தினவு தீரவில்லை இளைஞா.. உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறது. உன் பூர்வம் அப்படி. அபூர்வத்தின் கிரகச்செர்க்கை. வா என்னுடன், பேசலாம் நாம். மறுத்துப்பேச தோன்றவில்லை. ஆனாலும் பயம் தாண்டிய மனத்தூண்டல் எனக்குள் அலைக்கழித்தது. அவர் தொடர்ந்து பேசத்தொடங்கினார். இன்றிலிருந்து மூன்றாம் பௌர்ணமி வரை நீ என்னுடன் தங்கு. உனக்குச்சேரவேண்டியத்தை அதற்குள் நான் கொடுத்துவிடுகிறேன். உன் மனக்குழப்பம் எனக்கு புரிகிறது என்பதை சொல்லத்தான் வேண்டுமா. நீ அவ்வளவு எளியவனும் இல்லை. எத்தனை நாள் ஆயிற்று. நான் அவரை பார்த்தேன். மெலிந்த தேகம். உடலுறுதி குழையத்தொடங்கியிருந்தது. நீண்ட கேசம். நரையில்லை. முகம் திருத்தமாக சவரம் செய்யப்பட்டிருந்தது. நாசிக்கு இடப்புறம் கருமிளகு அளவில் ஒரு மரு இருந்தது. நாசிக்குக் கீழிருந்த முடிக்கற்றைக்கு அது ஒரு சிறிய தலைப்பாகை போலிருந்தது. இடைக்கச்சு மட்டுமிருந்தது. உடலில் எந்த திரவியப்பூச்சும் இல்லை. உயரமான உடம்பில் நீண்டிருந்த கைகளும் கால்களும் ஆலமரவிழுதுகளை நினைவூட்டின. நிதானமான நடை என்றாலும் ஒவ்வொரு எட்டும் இரண்டரை அடிக்கு மேல் போயின. நான் அவரை பின்தொடர சற்று வேகம் காட்டவேண்டியதை தெரியாமல் இருக்க அவ்வப்போது ஒரு செருமலை வெளியேற்றினேன். சொல் எப்படி வந்தாய் மாந்தைக்கு. அதற்குமுன் உன்னை எப்படி விளிப்பது.
இந்த குரல் ஒரு கட்டளைப்போல் என்னுள் இறங்கியது. உடல் நடுக்கத்தை உடனடியாக சீராக்கியது. ஒருவித இளைப்பாறல் மனநிலையை ஏற்படுத்தியது போன்றதொரு சூழலில் நான் சொல்லத்தொடங்கினேன். எல்லாவற்றையும்.

கணமற்றதொரு கணம். வாசப்படியில் உக்காராதே என்றால் கேட்க மாட்டாயா. எத்தனைமுறை சொல்வது.

சென்னி என்று என்னை விளிப்பர். எனக்கு பூழிநாடு. அய்யன் எருது காப்போன். அம்மை திருமேனி. பால்காரி. கீழ்மலை ஒட்டிய தயாபுரி கிராமம் என்னை வளர்த்தது. கூடவே வளர்ந்தது மூவேழு எருதுகள். மணம் பேசினார்கள். பிடிக்கவில்லை. கிளம்பிவிட்டேன். மர்கழரின் சிரிப்பொலி கேட்டு நிறுத்தினேன். பங்குனி முதல்நாளில் உச்சியில் வெளியேறினாயாக்கும்.. சிரிப்பில் ஏலனமில்லை. துயரமிருந்தது. அவள் பெயர் என்ன. யார் பெயர். உன்னை மணம் முடிக்கப்போகும் பெண். நான் அவளை மணம் முடிக்கப்போவதில்லை. யாரை. மேருநடையாரின் புதல்வி அல்லிக்கன்னியை. ஹா..ம்ம் .. இது வெகுநீண்ட கதைதான். கேள் இன்று முதல் மூன்று திங்களுக்கு நான் உன் குரு. ஆனால் என்னக்கு நீ மட்டும்தான் மோட்சம். எனது வேள்விக்கு பதில்நீ. உவகை பொங்குகிறது. உன் விதி உன்னை வழிநடத்தும். என் பாரம் இறங்கியதும் நான் சென்று விடுவேன். இனி தூக்கிச்சுமப்பது உன் வினைப்பயன். பயம் கொல்லாதே. போகப்போக விளக்குகிறேன். அவளைப்பார்த்தாயா. இல்லை. ஆனால் அவள் உன்னைப்பார்த்தாள். இல்லை, அவள் என்னைப் பார்த்ததில்லை. இளைஞா.. சென்னி..என்றே இனி அழைக்கிறேன். நான் சொன்னது நல்லினியை. கன்னியை சிலகாலம் நீ மற. அவளை உன்னை கண்டடைவாள் ஒரு சிறு புயல் போல.

நான் மர்கழன். கூடல் என் ஊர். கூடலூர்கிழார் என்கிற கவிஞன். தொழில் வான சாஸ்த்திரம். என் கணிப்பில் இறந்தவந்தான் இன்று சிதையேறிய அத்துவன். எனது வாழ்த்து மீறி வினை வெற்றிகொண்டது அவனை. என் கணிப்பின் மிச்சம் நான் எவரிடத்திலும் சொல்லவியலாது. இவ்வுலகத்தில் அது எனக்கும் நான் சொன்னபின் நல்லினிக்கும் மட்டுமே ஆன ரகஸ்யம். ரகஷ்யத்தின் மூலப்புள்ளி நீ. சென்னி, இன்றிரவு என் இருப்பிடத்தில் வந்து ஆழ்ந்த உறக்கம் கொள். ஏனென்றால் நாளை முதல் மூன்றாம் பௌர்ணமி வரை உனக்கு இரவு தூக்கம் கிடையாது. வானத்தைக்கற்றுகொள்ள இரவுதான் மிகச்சரியான காலம்.

வான சாத்திரம் என் வித்தை. அதைத்தான் நான் உன்னுள் இறக்கப்போகிறேன்.

******************

தொடரும்..

***************

31.3.10

சொல்லுவதெல்லாம் பொய் 9

கணம் ஒன்றின் சாத்தியப்பாடுகள் என்னென்ன.

அநேக நேரங்களில் ஜாதககாரனாகவும் பூர்வத்தில் கதைசொல்லியாகவும் இருக்கும் அவன் இன்றயதினத்தில் பங்குனி உத்திரமாம் பௌர்ணமியில் பால் பொழியும் நிலா பார்க்க மிதிவண்டியில் சாலை கடக்கும்போது வகையறியாத வாகனத்தில் அடிபட்டு சாலையோரம் வீசப்பட்டான். அவனுக்கு நினைவு தப்பும் கணத்துக்கு முன்: அப்பா.. பேய்களுக்கு தப்புவித்து கைப்பிடித்து குளம் கடத்தி வீடு சேர்த்துவிடு என்னை.. என்கிற பின்னி மோஸசின் கவிதை வரிகளும் சில துளிகள் கண்ணீரும் உணர்ந்தான். குருதி அவன் சிரசில் வழிய அவன் கோமாவில் எழுந்தான்.

********************************

நான் மாந்தரநாட்டுக்கு நுழைந்தபோது பங்குனி இருபத்தியோராம் நாள். மன்னன் அத்துவன் உடம்பில் பொட்டு புண்ணில்லாமல் மூக்குப்பீளை நோய் தாக்கி மாண்ட தினத்தில் என் வருகை இருந்தது. மேழ ஓரை கார்த்திகை நாளில் பங்குனி பதினைந்து தினத்துள் உச்சமைடையும் உத்தர மீன். அந்த உத்தரம் கீழ் சாய எதிர்மேல் எழும் பின் எட்டாம் மீன் மூலம். மூலம் எழ முன் எட்டாம் மீன் மிருகசீரி துறை தாழும். அக்கணத்தில் எரிந்து கருகும் பெருமீன் ஒன்று கிழக்கோ வடக்கோ நகராது நிலத்தில் பெருவெளிச்சம் காட்டி வீழும். வீழ்த்த ஏழாம் நாள் அத்துவன் மரணிக்க, நான் நகர் நுழைந்தேன்.

மன்னனின் ஈமத்தில் கலக்க நேரிட்டது ஊழ்சாபம். குடநீரும் குடிப்பூவும் கொண்டுசெல்லும் வரிசையில் நான் என்னை நுழைத்துக்கொண்டேன். தீப்பந்தங்கள் வெளிச்சம் காட்ட இரண்டு பெரும் வேப்பமரங்களின் நடுவில் அவர்கள் கூடியிருந்தார்கள். அரண்மனை வாசிகள். தோற்றம் பொழிவு கலைந்திருந்தது. தீப்பந்த வெளிச்சம் எழுசூரியனின் மெல்லிய வண்ணத்தில் அடர் இருளில் பரவியிருந்தது. ஒரு சிறு பெண்டிற்கூட்டம் மரத்தடியில் ஒரு பொழிவான பெண்ணை சுற்றி நின்றிருந்தது. அவளது பொழிவு அவளது இருப்பிலேயே தெரிந்தது. மஞ்சள் துகிலில் அவளுடம்பு சுற்றப்பட்டிருந்தது. சூரியனிடம் பெறும் வெளிச்சத்தை பிரதிபலிக்கும் மஞ்சள் திங்கள். முகம் காணமுடியவில்லை எனக்கு. ஆண்களின் கூட்டம் சற்று பரபரப்பானது. தொலைவில் இருந்த குரும்பனையுயர சுவர்களில் சீரான இடைவெளியில் தீப்பந்தங்களுடன் ஆட்கள் நின்றிருந்தார்கள். இருட்டுக்குள்ளிருந்து ஒரு காத்திரமான சங்கொலி எழுந்தது. கட்டிலில் கிடந்த அத்துவன் உடலைச்சுற்றி அவர்கள் நின்றார்கள். தோள் அகன்ற கருத்த வீரனொருவன் இடைக்கச்சையில் தொங்கிய வாளை உருவி மிகப்பணிவான உடலசைவுகளுடன் அந்த உடம்பின் மார்பில் குறுக்காக நீண்ட ஒரு கிழிப்பை செய்தான். இடது மார்பிலிருந்து வலது வயிற்றிக்கு கீழ் வரை தோல் பிளந்தது. குருதிக்கசிவு இல்லாத அந்த பிளவில் வெண்மையான உட்தோல் தெரியவும் சுற்றியிருந்தவர்கள் முகத்தில் ஒருவித சிலிர்ப்பு தோன்றியதாகப் பட்டது எனக்கு. பின் சடங்குகள் விரைவாக நடந்தேறின. நான் இருளும் வெளிச்சமும் ஒன்று கூடும் கணத்தில் நல்லினியின் முகத்தைப்பார்த்தேன். நல்லினி. அத்துவனின் மனைவி. பட்டத்து அரசி. மாந்தர நாடு அவள் வசம். பிள்ளைப் பேரற்றவள்.

கணமற்றதொரு கணம். குளத்திற்குள்ளிருந்து வெளியேறும் குறுமுனிச்சூலி அப்பாவின் அதட்டலுக்கு அடங்கிப்போனது.

உழிஞை கொண்டுவாடா என்றதட்டும் குரல் என்னை நோக்கி வந்தது. அவள் என் கையிலிருந்த பூக்களை வாங்கி மன்னனின் உடம்பு நோக்கி நடந்தாள். அவள் பார்வை என் விழியை தொட்டு மீண்டது. துலக்கமில்லை. துக்கமில்லை. வெற்றுப்பார்வை. புதரிருளில் ஒதுங்கினேன். தொடைக்குக் கீழ் கெண்டை சதை நடுங்கியது. அரை நாழிகையில் தீப்பந்தத்துடன் அருகில் வந்து நல்ல வெளிச்சத்தில் என் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு கடுமையான சிரிப்பை மற்றவர் அறியாமல் உதிர்த்த கூடலூர்கிழாரை முதன்முதலில் பார்த்தேன். மொத்த உடம்பும் நடுங்குவதை உணர்ந்தேன்.

***************************

தொடரும்.

29.3.10

சொல்லுவதெல்லாம் பொய் 8

அந்தரச் சொல்லொன்றில் மெல்லிய நூல்கட்டி தொங்கவிடுகிறேன் என்னை. குன்டூசல் போல குறிப்பிட்ட இடைவெளியில் சோர்வுறாமல் இடமும் வலமுமாய் ஆடும் என்னை குறிவைக்கின்றன உனது நிதானமும் துரோகமும். கடக்கிறது காலம் 'கலுக்.. கலுக்' என்கிற மெல்லொலியில். தப்பப்போவது இல்லை இம்முறை இரண்டு குறிகளும். இடப்பக்கம் நான் வர உன் நிதானம் என்னை வீழ்த்தும். வலப்பக்கம் நான்வர உன் துரோகம் என்னை வீழ்த்தும். என்னால் செய்யமுடிந்ததெல்லாம் என்னை இரட்டை இலக்காக உன் முன் நிறுத்தியதுதான். இரண்டு இலக்குகள். இரண்டு வீழ்ச்சிகள். ஒரே நேரத்தில். அச்சம்.

குறுக்குச் சுவர்மீது குறிப்பிட்ட வீசை எடைகொண்டு பொன்வண்ண வரிகொண்ட வெளிர்சாம்பல் நிறப்பூனை எதிரெதிர் திசையில் நடக்க எனது ஒவ்வொரு விழியும் தனித்தனியாக அவற்றை பின்தொடர்வதை அறிகிறாய் வெயிலொழுகும் பகல் ஒன்றின் மத்தியில். சமநிலை இழந்த என் கால்நடை பிறழ்ந்து கீழிறங்கி செல்லுகிறேன் தனிமை வழி. மௌனம்.

நீர் வராக்குழாயடியில் அதே பகலில் வெற்றுப்பானையுடன் நிற்கும் தாவணிப்பெண்ணின் வியர்வைக் கோடுகள் போல திசையறியாது வழுக்கியோடுகிறது என்னுள் உனதான கூர் அவதானிப்புகள். கூரைமீதேறி நிற்கிறேன். வழியும் சொட்டுகள் ஈர்க்குச்சி முனைகளில் நிதானமாக சேகரமாகின்றன. ஊறும் அரவத்தின் அதிர்வு போதும் சொட்டுகள் உதிர. விழுகிற ஒவ்வொரு துளியும் வெற்றுப்பானையில் நிரம்பினால் சாந்தமடைவேன் என்கிற உன்னிடம் சமர் ஒன்றுமில்லை. அமைதி.

****************************************************

மழைபெயர்ப்பு. ஒரு நிராதரவான வேளையில் நீ என்னை கொல்ல உத்தேசித்திருப்பதாக ஒற்றனின் கூற்றை கருமேக நடுவில் சமிக்கையாக நான் கண்ட பொழுது வீழ்கிறது மழை.

கொலை என்பது ஒரு எளிமைகூடிய வீகரமான தாதுப்பொருள் என்பதையோ அது எல்லாவற்றிற்குமான ரசாயன மாற்றத்தின் மூலப்பொருள் என்பதையோ அறியாத என் அறியாமையை கழுவித்துடைக்கிறது இந்த மழை.

அகன்றுவிட்ட அறியாமையின் முதல்தாகம் குருதிஎன்பதை உன் விபூதியும் வவ்வால்கழிவும் கலந்த சுகந்தம் எனக்குணர்த்துவதை மறைக்காமல் என்முகபாவத்தை மணலள்ளி பூசுகையில் மீண்டும் கழுவி வெளியேற்றுகிறது மழை.

வாய் நிறைய குருதிவழியும் ஓநாயின் படமொன்றை ஒற்றனின் சட்டைப்பையில் திணித்து கழுத்தறுத்து கொல்கிறேன் அவனை உன் பார்வைக்கு படும்படிக்கு. வழிந்தோடும் திசையனைத்தையும் என் இருப்பின் பாதைகளாக மாற்றுகிறது எனை நோக்கி நீ வர, தோதாக மழை.

வா. இம்மழை என்னுள் வெளியேற்றும் வெக்கையை எனைக்கொன்று அடக்கு. பின்னும் வா. என்னுடல் தின்ன. என் சாபத்தால் உன் தாகம் தீர்க்க விடாது தொடரும் இந்த மழை.

******************************

மதுவுண்ண தொடங்கி விட்டான் கலிபுத்தன். கோரைப்பற்கள் உதடு தாண்டி நீள்வதை சிரிப்பின் அடையாளமென்கிறான். சுய போதனையில் துப்பும் எச்சிலில் உடையும் ஆடியில் ஆயிரமாயிரம் பிக்குகள் சிரித்து நெளிகிறார்கள். உடல் கூசி விஹாரம் நுழைந்து யசோதரையை கொல்கிறான் மீண்டுமொருமுறை. தலைக்குமேல் கைகளை தூக்கி கும்பிடும் அவனது விலாவில் முளைத்த வேனல் கட்டியில் குவிகிறது உயிர். ரணம் குணமாகும் மருந்தென காரணம் கண்டடைகிறான். இந்த எளிய புத்தன் மதுவுண்ண தொடங்கிவிட்டான் மீண்டும். கலிபுத்தன்.

பாவம் சரணம் கச்சாமி....

போதம் சரணம் கச்சாமி...

மரணம் சரணம் கச்சாமி...

*******************************

10.3.10

சொல்லுவதெல்லாம் பொய்

***************

நாட்குறிப்பில் மடித்து வைக்கப்பட்டிருந்த காகிதத்தில் சிதறலாய் கிடந்த எழுத்துக்கள். இவ்வரிகளில் சன்னாசியின் கையெழுத்து மாதிரி இல்லாத சில குறிப்புகளை ஜாதகக்காரர் எழுதியிருக்கலாம் அல்லது அங்கயர்கன்னியாக கூட இருக்கலாம்.

**********************

......... ஒரு மடையனுக்கு.... இல்லை ... ஒரு மடையனின் எழுத்துக்கள் யாருக்கும் புரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உங்களுக்கு தெரியாத ஒன்றை அவன் எப்பொழுதும் உளறிய வண்ணம் உள்ளான். கேள் நண்பனே .. பொருளும் காமமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். உச்ச இன்பமும் பணமும் அவற்றின் மீச்சிறு அலகுகள். அதிகாரம் பாலுணர்வையும் பணத்தையும் கண்ணாடித்துண்டுகளாக அரைத்து ஆசையென்னும் சாட்டையில் பூசியிருக்கிறது. வாழ்வெனும் ஒளி அந்த சாட்டையின் கண்ணாடிக்கலவையில் ஒளிர்கிறது. தொடர்ந்து அது மனித பூச்சிகளை தன்பால் இழுக்கிறது. மனிதனின் பிரக்ஞையால் உருவாகும் அதிகாரம் சூழலலால் நெய்யப்பட்டிருக்கிறது. இங்கு நிலவும் சூழல் தற்செயல் அல்ல. அதன் ஒவ்வொரு கண்ணியும் துல்லிய முன்வரைவுகளால் ஆனது. நிகழ்தகவின் விளைவுகளையும் தற்செயல் தன்மையையும் ஆளுமை செய்யும் அளவுக்கு நாம் பயங்கரவாதிகள் ஆகிவிட்டிருக்கிறோம். நமது விஞ்ஞானகூடங்களில் இயற்கை செயற்கையாக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. .............................................


அதுசரி.. எதற்காக இப்படி எழுதுகிறேன்?
************

நிராதரவற்ற இவ்வேளையில் இருப்பு அர்த்தமற்றது என கொள்ளவேண்டாம் சன்னா. உற்றுநோக்கப்பட்ட ஒரு காட்சியாவது நேசம் மிக்கதாக இருக்கும். ஒருவேளை தனனைத்தானே முழுவதுமாக அழித்துவிடவும் கூடும். நிராதரவு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும். பின் எப்போதும் உன் சுயம் குற்றவுணர்வு கொள்ளத்தொடங்கலாம். எனவே, சன்னா.. தேவையற்ற கணம் என ஒன்று கூட இல்லை. எதிர்மாறாக ஒவ்வொரு கணமும் தேவையற்றதாக இருக்கலாம். சாத்தியப்பாடுகள் பற்றி நாம் பேசத்தொடங்கினால், நாழிகை கழிவதே மீதம். மூச்சிழுத்து வெளியேற்றும் ஒவ்வொரு முறையும் நீ வாழ்கிறாய். உன் உடல் முழுதும் குருதி இளஞ்சூட்டுடன் பாய்ந்தலைகிறது. நீ பசியுணர்வாய். பசியடக்கும் ஒவ்வொரு கவளமும் உன் மனக்கட்டுப்பாட்டுக்கு எதிராக செயல்படும். உன்காமம் பசித்த வேங்கை போல குகை விட்டு வெளியேறும். இரை வேண்டி காடதிர உறுமும். அழியும் வரை காத்திருக்கப்போகிறாயா. மொத்த விசும்பும் ஒவ்வொரு மரணத்தோடும் மடிகிறது. வேறொரு இருப்புக்கு வேறு விசும்பு இது. மீண்டும் கேள்.. ஒவ்வொரு மரணத்திலும் முற்றும் முழுவதுமாக அழிந்துவிடும் இயக்கமிது. உனக்கிருப்பது இறந்தவனுக்கு இல்லை. மரணத்திற்கு நீ இருக்கிறாய். உனக்கு மரணம் இருக்கிறது. இறந்தவனுக்கிருப்பது உனக்கில்லை. பின் என் உன்னதம் மற்றும் உன்னதமின்மையைப் பற்றி போகம் கொள்கிறாய். கவனம். நான் யாரென்று உனக்குத்தெரியும். நீண்ட காலவெளியின் அனுபவம் எனக்கு உண்டு. நம்பிக்கைன்மையின் பெருந்திரள் நான். புணர்ச்சி யோகம். மெல்லிய தோல் கொண்டு என் ரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. என் இருப்பு குற்றம். அது உன்னை கூசச்செய்யும். பேராபத்தின் குழந்தை நான். வேங்கையென உருவகிக்கும் இச்சை நான். என்னைக் கொல்ல உனது கற்கால ஆயுதம் போதாது. என்னைக்கொல்ல தந்திரமான ஆயுதம் தேடாதே. எளிமையாய் எதிர்நில். ஒரு வேளை அது உனக்குள்ளே இருக்கலாம். உபயோகிக்கத் தெரிந்தவனின் ஆயுதம் அடிமையென இயங்கும்.

*********************

மேகங்களின் அமைப்பை வரைமுறைப் படுத்தும் சாத்தியமின்மை தெரிந்தே வானம் பற்றிய குறிப்புகளை தொடங்குகிறேன். நிலக்காட்சியை எவ்விதத்திலும் பிரதிபலிக்காத வானம் ஒரு குட்டைநீரில் அடங்கிவிடும் என்பது வெறும் காட்சி தர்மம். புல்நுனியில் தொங்கும் ஒரு சொட்டு பனித்துளியில் நுழைந்துவிடும் மலையைப்பற்றி வானம் எப்பொழுதும் கவலை அடைவதில்லை. தன்னளவில் பெரிய வெளியை உருவாக்கி அதன் விளிம்புகளில் மேகங்களை அனுமதிக்கும் வானம் மேகத்தாலானது என சொல்வதற்கில்லை. பின் எப்படி மேகங்களின் அமைப்பை வானம் ஆளுமை கொள்ளும். இன்றைய மேகம் ஒரு ஐரோப்பிய பெண்ணாய் மருவி மிதிவண்டியை ஓட்டிக்கொண்டிருந்தது. அவள் கருநீல நிறத்தாலான பிரில் வைத்த அகன்ற பாவாடையும் பொழிவான வெண் சட்டையும் அணிந்திருந்தாள். தனது மிதிவண்டியில் முன்கூடையில் சில பூக்களை வைத்திருந்தாள். கணக்கரைவில் அவள் மீண்டும் வகையறியா மேகமானாள். பின்பு அவளைக் காணவில்லை. நான் மட்டுமே அங்கிருந்தேன். என் விளிம்பில் இனி அவள் வர வாய்ப்பில்லை. துக்கம் உள்ளது.

***************

கண்களை மூடி தன்னைத்தானே பலமுறை சுற்றினால் திசை மறக்கும் மீண்டும் கண் திறக்கும் போது. ஆனாலும் சொற்ப கணங்களில் மூளைஅடுக்குகள் மீட்டு விடுகிறது திசையறிவை. அவ்வளவு சுலபமாக அமைந்துவிட்டது இருப்பிடங்களின் தகவமைப்பு. பிரிதொருநாளின் கனவில் பெரும்பறவையொன்று என்னை தூக்கிப்பறந்தது. பதினோரு மலைகள், நான்கு பள்ளத்தாக்குகள், ஒரு பாலைவனம் மற்றும் முப்பத்துஏழு ஆறுகள் கடந்து ஒரு சிறிய கடலுக்குள் எறிந்துவிட்டுச் சென்றது என்னை. மூவுலகமும் அறிந்தது எனது நீச்சல் திறன். மேற்குலகில் வண்ணத்திப்பூச்சி வகையும் கிழக்கில் மல்லாந்த வகையும் மத்தியில் எனது மிதத்தல் வகையும் பெருமை. ஆனால் இது கடல். சமுத்திரங்கள் அனைத்தும் வரையறுக்கப்பட்டது. பாதைகள் நிரம்பியது. கடல் அப்படியல்ல. பெரும்பாலைவனம் ஒன்றின் தண்ணீர் திரிபு. திசைபற்றிய அறிவுமட்டுமே ஒரு நீச்சல்காரனின் பாதுகாப்பு. உணவு தேடும் சில சுறாக்களுக்கு என்னைப்பற்றிய அக்கறையில்லை என்பது எனக்கு பயத்தை அளித்தது. மேலும் திசையறிய ஒற்றைச் சூரியன் போதுமான பகல் அப்போது இல்லை. வெளுத்துக்கிடந்த அலையும் மீன்கள் சூரியன்படாத தகவலைச் சொல்லித்திரிந்தன. செய்வதறியாது மல்லாந்து மிதக்கத்தொடங்கினேன். நேர்பார்வையில் ஒரு கோடியே நாற்பத்து ஏழு லச்சத்து தொண்ணூற்று நான்காயிரத்து எண்ணூற்று ஐம்பத்தாறு விண்மீன்கள் தெரிந்தது. இவற்றில் எது என் திசை காட்டும். திசை பற்றிய அறிவு பார்வைக்கா புலனுக்கா. ஒரு சுறா என்மீது உமிழ்நீரை துப்பியது. தலைக்கனம் பிடித்த சுறாக்களின் மத்தியில் வாழ்வது இவ்வளவு சுலபமா என்ன. வெறும் உமிழ்நீரை தாங்கும் சக்தி மட்டும் போதுமா. கடல் நீரே அதை கழுவியும் சுத்தம் செய்கிறது. திசையறிய இச்சுறாக்கள் உதவுமா தெரியவில்லை. மீண்டும் விண்மீன்களை பார்த்தேன். அதிசயம். இடம் மாறியிருந்தன அவைகள். முதலில் இருந்ததும் இல்லாமல் இருந்தது. மூன்று லட்சம் விண்மீன்கள் காணாமல் போயிருந்தன. பதிலுக்கு மூன்றேமுக்கால் லட்சம் விண்மீன்கள் வேறு இடத்தில் தோன்றியிருந்தன. விளையாட்டு அற்புதமாய் இருந்தது. நீண்ட களைப்பிற்கு பின் ஒரு நிலைத்த தொடர்ந்து மாறாத ஒற்றை விண்மீனைக் கண்டுபிடித்தேன். திசை பற்றிய முதல் ரேகை.

**************

வண்ணத்துப்பூச்சி நீச்சல் அடித்து வெளியேறினேன்.

**********************

27.1.10

சொல்லுவதெல்லாம் பொய் 6

***************
08.03.1992

00.08

எனக்கு நேராதது உனக்கு வாய்த்தது. காதல். என்னைவிட ஐந்து வயது மூத்தவன் என்றாலும் அவன் எனக்கு நண்பனாய் அறிமுகமானான். காமுகன், பெண் என்றால் வழியிலிருக்கும் கிணற்றைத்தாண்டிவிடுவான். அதே போல நின்றிருந்த ஒரு மாட்டுவண்டியை ஏறித் தாண்டியபோது விழுந்து காலை முறித்துக்கொண்ட நாளில் நான் அவனை முதலில் பார்த்தேன். காலொடிந்தது அவனுக்கு உறைக்கவில்லை காணச்செல்லும் பெண்ணை தவறவிடக்கூடாது. முடியாமல் போனது அவளைப்பார்க்க. மூன்று மாதங்கள் தினமும் ஒரு தடவை அப்பெண்ணை தவறவிட்டது பற்றி பேசிவிடுவான். தொண்ணூற்று ஏழாம் நாள் அதே பெண்ணை மீண்டும் பார்த்தபின்தான் அந்த பேச்சு நின்றது. அவனை நீ காதலித்தாய். உனக்கு தெரியாதுடா அவன்தான் இனி எல்லாம் என்றாய். புரியவில்லை. எனக்கும் நீ சொல்லும்போது கோவம் எதுவும் வரவில்லை என்பது ஆச்சர்யம்தான். எனது பத்து வருட நண்பனை நீ காதலிக்கிறாய். இது விதியின்றி வேறு என்ன. அவனிடம் சொல்லிவிட்டாயா. இல்லை ஆனால் அவனுக்கு தெரியும். உன் குரலில் இருந்த உறுதி எனக்கு லேசான பயத்தை அளித்ததை நான் உன்னிடம் மறைத்துவிட்டேன். அப்பெடிஎன்றால் ஏன்அவன் என்னிடம் சொல்லவில்லை. எனக்கு கடுமையான கோபம் வந்தது. மனதை படிப்பதில் நீ கில்லாடி. அவனை கோபித்து ஒரு பிரயோசனமும் இல்லை என்கிறாய். நான் மலைத்துப்போய் நிற்கிறேன். என்னை நோக்கிய அவனது எண்ணம் என்னால் உருவாக்கப்பட்டது, என்கிறாய். வயலில் தண்ணீர் பாயச்சுபவன் தனக்கு தேவையான வரப்பில் நீர் திருப்பி விடுவதைப்போல அவனை, அவன் எண்ணபாய்ச்சலை என்விழி நோக்கி திருப்பி விட்டேன் அவனறியாமல் என்கிறாய். மூன்று மாதங்களாய் அவனும் ஒரு வினோத பிராணி போலவே செயல்படுவது இதற்காகத்தானோ. சிறை சென்று வந்ததால் ஏற்பட்ட குளறுபடி என்றே எண்ணிஇருந்தேன். வெறும் பணத்திற்காக அவன் அந்த திருட்டை செய்திருப்பான் என்று எனக்கும் நம்பிக்கையில்லை. எதோ ஒன்று அவனை ஈர்த்திருக்கிறது. கிருபா வின் கும்பலில் எதற்காக தன்னை இணைத்துக்கொண்டான் என்று அவனாலேயே சொல்லமுடியவில்லை என்பது எனக்கு நினைவில் வருகிறது. குடிப்பதை நிறுத்தியிருந்தான். புகைப்பதையும் கூட. அவன் வாய் நாற்றத்தை குறைக்க மருந்துகள் எடுத்துக்கொள்கிறான். நாட்டு வைத்தியத்தை தவிர எதற்கும் போகாதவன் மணிக்குமார் டாக்டரிடம் தன்னுடல் சோதனையை செய்துகொள்கிறான். இத்தனை வருடங்கள் நீ அவனை பார்க்கும் போதும் சாதரணமாய் தான் இருந்திருக்கிறாய். திடீரென்று என்ன அவன் மீது காதல். திருமணம் வேண்டாமென்று உறுதியடன் இருந்த நீ எங்கே. எல்லாவற்றிலும் மகத்தான ஆச்சர்யம் அப்பாவும் அம்மாவும் ஒப்புக்கொண்டது. உனக்கும் ராமனுக்கும் திருமணம். அவன் நமது ஜாதி என்பதுமட்டும்தானா அவர்களுக்கு காரணம். ஏராளமிருக்கிறது மறுப்பதற்கு. அவர்களால் முடியாது என்று நீ ஒற்றை வார்த்தையில் உறுதி செய்கிறாய். டிஷோசாவுக்கு பெரும் மகிழ்ச்சி. என்னமா நடக்கிறது

09.07.1994
00.09

டிசொசாவுக்கு அடிபடவில்லை. நல்லவேளை. விடிந்தால் திருமணம். ராமன் ஒரு முறை-கடைசிமுறை என்று சொன்னான்-குடிப்பதற்கு விருப்பம் தெரிவித்தான். நான் வாங்கிவர வெளியேறும்போது டிசோசா குறுக்கிட்டாள். நகருக்குள் எதோ வாங்க வேண்டுமாம். லச்சுமி திரையரங்கம் அருகில் பெட்ரோல் போட திரும்பியபோது ஆட்டோ ஒன்று பின்புறம் இடித்தது. அவன் தாயை திட்டியவாறு வண்டியை கீழே விட்டேன். டிசோசா தடுமாறி விழாமல் குதித்து நின்றிருந்தாள்.
எனக்கு நெற்றியில் ரத்தம். இடது கால் முழுவதும் வலி. வாயிலிருந்தும் ரத்தம். டிசோசா பொறுமையாய் வாயை துடைத்து விட்டு. வாயை திறந்து காட்டு என்றாள். தொண்டைக்குழியை பார்த்து விட்டு, ஈறுலதான் அடி போல வேற எங்கடா என்கிறாள். எதுக்கு இப்படி அசிங்கமா பேசுற என்கிறாள். எனக்கு எதையும் கேட்க முடியவில்லை. வலி. அதே ஆட்டோ காரனை அழைத்து அவளை ஏற்றி விட்டுவிட்டு மோகனம் நர்சிங் ஹோமுக்கு போனேன். இடது கணுக்காலில் மேல் சின்ன விரிசல் எலும்பில் உண்டாயிருந்தது. கட்டிப்போட்டு இரண்டு தையல்களை நெற்றியில் போட்டு, படுக்கையில் படுக்க வைத்துவிட்டார்கள். புது மாப்பிளை ராமனுக்கு என்னால் சரக்கு வாங்கித்தர முடியவில்லை. வருத்தமாய் இருந்தது. ஆனால் கிருபா அவனுக்கு வாங்கி கொடுத்து குடிக்கச்சொள்ளியும் ராமன் குடிக்கவில்லை. உன்னிடம் கேட்டு நானும் நீயும் ஒரு நாள் குடிக்க வேண்டுமடா என்று மணக்கோலத்துடன் மருத்துவ அறையில் வந்து சொன்னான். என்ன சொல்றான் என்று கேட்கிறாய். அவனை நீயும் ஒருமையில் அழைக்கத்தொடங்கியிருக்கிறாய். திருமணத்திற்கு முன் அவனை நீ பன்மையில் அழைப்பாய். நாளைக்கு வர்றோம் என்றுவிட்டு வாடா போகலாம் என்று அவனை அழைத்துச்செல்கிறாய். குட்டி ஆட்டுக்கு இலைதளை காட்டி அழைத்துப்போகும் இடைச்சியை போல. அவனும் ஆடு போலவே பின்தொடர்கிறான். அன்றே தனசேகரனும் அவன் மனைவியை அழைத்துக்கொண்டு என்னைப்பார்க்க வந்திருந்தான். மூன்று வருடங்களுக்கு முன் அவளை முழுதாகப்பார்த்தது. இப்பொழுது அவள் தொலைபேசி நிலையத்திற்கு வேலைக்கு போவதில்லையாம். குழந்தையை பார்க்க நேரம் போதவில்லை என்றான். பெண் குழந்தை. அவளின் முகம் எனக்கு மிகப்பரிச்சயமான ஒன்றாய் இருந்து. வெளியேறும்போது தனசேகரனை முன்னால் போகவிட்டு என்னை திரும்ப பார்த்து சிரித்தாள். எனக்கு அந்த சிரிப்பு அவஷ்த்தையை அளித்தது. அந்த அவஷ்த்தையை நான் சிரிப்பாய் மாற்றி மோகனம் மருத்துவமனையின் நர்ஸ் நந்துவிடம் அளித்தேன். மறுநாள் அவள் எனக்கு அளித்த தேநீர் உப்புகரித்தத்து.

*************************

15.1.10

சொல்லுவதெல்லாம் பொய் 5


***************

21.09.2000 வியாழக்கிழமை
00.07
தவிரவும் இன்று முதல் நான் நாட்குறிப்பை எழுதப்போவதில்லை அங்கயற்கண்ணி. எங்கிருக்கிறாய் நீ. மூன்று நாளாயிற்று நீ தொலைந்து போய். ஒரு வருடத்தில் எனக்கு மூன்று மரணம் அதிகம்தானே. மரணம் கண்டு மிரளும் என்னை மரணத்தாலேயே அடிக்கிறது வாழ்வு. இதோ பார் ராமனை, உன் காதல் கணவன் பேயறைந்ததுபோல் சுருண்டுகிடக்கிறான். அவனையும் இழந்துவிடுவேனோ. முதல் முறையாக நான் இறந்துபோனால் நல்லது என்று படுகிறது. மரணம் எவ்வளவு நிம்மதி. விடுதலை. ஆம். ஆனால் எதோ பயம். கற்பனை செய்யமுடியாத மிரட்சி. ஆழ்துளைக்கினற்றுக்குள் விழுந்துவிட்ட நடுக்கம். அப்பாவின் இறப்பு எதிர்பார்த்தது. அம்மா எதிர்பார்க்கவில்லை என்றாலும் அப்பா இல்லாத அம்மா இல்லாத அம்மாதான். அவளுக்கு அது தெரிந்தே இருந்திருக்கின்றது. இல்லையென்றால் அப்பா போன நாற்பது நாட்களில் புன்னகைத்த முகத்துடன் தூக்கத்திலேயே எப்படி இறக்க முடியும். உறங்கப்போகும்போது அம்மா. விடிந்ததும் உடல். புன்னகைக்கும் முகம் கொண்ட உடல். நிச்சயமாக அவள் சிரித்துக்கொண்டுதான் இருந்தாள். தெரியுமா, உறங்கப்போகும் முன் அவள் என்னிடம் சொன்னாள்: அவளத்தேடிப்போகாத.. அவளா வருவா.. நீ கவனமா இரு..எங்கப்போனாலும் ராமனக்கூட்டிகிட்டு போ..' நான் குமுதவல்லியை சொல்லுகிறாள் என்று நினைத்தேன் ஆனால் அம்மா உன்னைப்பற்றிதான் சொல்லியிருக்கிறாள். ஆனால் நான் இப்போது என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. தேடிப்போகாத என்றும் சொன்னாள். போனால் ராமனைக்கூட்டிகிட்டு போ என்றும் சொன்னாள். எதை செய்வது. ஒரு வாய் உணவு உண்ணும் தெம்பு கூட இப்போது ராமனிடம் இல்லை. எவ்வளவு உல்லாசமாக திரிந்த திருடன் இவன். மூன்று நாட்களாய் எதையோ முனுமுனுத்துக்கொண்டிருக்கிறான் விடாமல். கண்களில் நீர் வழிவது குறையவில்லை. என்னடா சொல்கிறாய் என்று கேட்டால், உதட்டை கோணிகொள்கிறான். உன்னிப்பாக கேட்டால் 'அதை தொட்டிருக்கக்கூடாது.. அது ஊழிப்பேய்.. சிலையில்லை.. கோரதாண்டவம்.. பாவம் செஞ்சுட்டேன்.. அதான் கண்ணனை கொன்னுட்டா.. அவளையும் தூக்கிக்கிட்டு போய்ட்டா.. அது சிலையில்ல .. கோரதாண்டவம்..' இவற்றை தவிர அவன் வாயில் ஒரு வார்த்தையில்லை. கண்களில் ஒளி மங்கிக்கொண்டிருக்கிறது. உதடுகளில் எச்சில் வழிந்தவண்ணம் சுருண்டுகிடக்கிர்றான். உனக்கு கண்ணனின் மரணம் தெரிந்திருக்கிறது அங்கயற்கண்ணி. என்ன பாவம் செய்தாய் அப்படி உன் மகனை காவு கொடுக்குமளவுக்கு. இவன் என்னவென்றால் எல்லாவற்றிற்கும் அவன்தான் காரணம் என்று புலம்புகிறான். குழந்தை இறந்த போது நான் வாங்கி கொடுத்த உடையை போட்டிருந்தான். நன் திருடியதுதான் பாவமாகிவிட்டதோ. மூன்று மரணம், உன்னைக்காணவில்லை, ராமனை தேற்றவேண்டும் ஒரு எளிமையான மனிதனுக்கு இவ்வளவும் நேர்ந்தால் என்னதான் செய்வது. குமுதவல்லி போனதுகூட நான் எனது வன்மமான செய்கைகளில் பிரதிபலன் என தேற்றிக்கொள்ள முடிந்தது. இந்த நாளில் நான் இற்றுப்போகும்படியான நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்வது. குழந்தை கண்ணனின் ஆசன வாயிலிருந்து தொடர்ந்து வெளியேறிய வாயுவையும் திரவத்தையும் ஏன் யாராலும் நிறுத்த முடியவில்லை. அவன் அழும் தெம்பிழந்து அரற்றி அமைதியாகி சலனமில்லாமல் அடங்கிப்போனது நாடகமில்லாமல் வேறென்ன. அது எப்படி உண்மையாக முடியும். வெள்ளைத்துணியில் அவனை பொட்டலமாய் கட்டியபோது நீ எப்படி பார்த்துக்கொண்டிருந்தாய் கண்ணில் ஒரு துளி நீர் இல்லாமல். ராமன் செய்த ஓலம் ஊர் இதுவரை பார்த்தறியாதது . நீர்தெளித்து மண்ணைத்தோண்டி ஒரு விதையைப்போல அவனை புதைத்ததை ஒரு நடுக்கமும் இல்லாமல் என்னால் எப்படிச்செய்ய முடிந்தது. எனக்கு ஏன் அப்போது மரணம் நிகழவில்லை. அழுகை வரவில்லை. அங்கயற்கண்ணி நீ எங்கு போய்விட்டாய். உன்னைத்தேடித்தான் இனி என் பயணம் என்பதை நீ முடிவுசெய்துவிட்டாயா. டிசோசா வரச்சொல்லியிருக்கிறாள். அவளும் வரும் போது ராமனை கூட அழைத்து வரச்சொல்லியிருப்பது இவையெல்லாம் எதோ ஏற்கனவே செயல் படுத்தப்பட்ட நடைமுறைகள் போன்றதொரு தோற்றத்தை எனக்கு ஏற்படுத்துகிறது. புதிதாக வெத்திலைப்பாக்கு போடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஜாதகக்காரர் கொடுத்த சுவடியை வேறு கொண்டுவரவேண்டுமாம். என்ன நடக்கிறது அங்கயற்கண்ணி, எங்கிருக்கிறாய் நீ.. ஜாதகக்காரர் சொன்னது போல உன்னை காண சுவடிக்காலத்துக்குள் நுழயவேண்டுமா.

***************
தொடரும்...
**************




12.1.10

சொல்லுவதெல்லாம் பொய் 4

******************

சன்னாசியின் இரண்டாயிரத்து நான்காம் வருட நாட்குறிப்பில் மடித்து வைத்திருந்த காகிதத்தில் அவனது கவிதைக்குறிப்பு. இதற்கு அவன் திருமறை ஒன்பது என தலைப்பிடிருந்தான்.


*****************


ஏதுமற்ற பால்வெளி

சாத்தியமின்மையின் நிதர்சனம்

நிழல்தேடிய பருப்பொருளின் இயலாமைசிரசின்

செங்குத்தாய் வெப்பரேகை

பகலின் மொத்த விசாலமும் அடங்கும்

ஒற்றைக்கணம். குறுக்கீடுகள் அற்ற

பாதையின் நடக்கிறேன் துயரம் தோய்ந்த

பாடலாய். எதிர்வருகிறீர்கள் எல்லோரும். நான்

தனியாய் எந்தவொரு துணிவு கனிவு

மற்றும் ஏதுமற்ற பால்வெளியுடன்

உங்களை எதிர்கொள்கிறேன்

உங்களுக்கென்று ஒன்று இருந்ததை

மட்டும்சுட்டிக்காட்டியவண்ணம்

இருக்கிறீர்கள் என்பதைப்பற்றிய ஞானம்

எனக்கில்லாமல் ஒரு பனையேறியின் கவனத்தை

பெற முயற்சித்துக்கொண்டிருபேன்

பனையேறி ஒரு பெண்ணாய் காணும்

நாளில் என் மரணம் உறுதிசெய்யப்படும்

அல்லது எனக்கு நிதமும் ஒன்பது கலயம்

குருதி பனையிலிருந்து பீய்ச்சி தரப்படும்

என்பதான சமிக்கையை பெற

ஒரு சபித்தல்

நிகழும் பின்னான ஒவ்வொரு

முழுநாளும் பனைக்குருதியின்

வெறியால் மழுங்கடிக்கப்படும். நான்

மகிழ்வுகொண்ட பேரிண்பனாக

என்னைக்கற்பனைசெய்ய உதவுமது. என்

பல்லாங்குழிப்பருவம் மேலெழும் நான்

உங்களுக்கு பல்லாங்குழி வித்தையை

அறிவிக்க முயல்வேன் சகலமும் சுலபமும்

இனிமையும் ஆகும் நடைபாதையில்

முற்கள் முளைக்கும் சிறு நெருஞ்சியும் பூக்கலாம்

உங்களுக்கும் அது

பிடிக்கும்அனைத்தும் உணர்ந்த ஞானியென

நான் என்னை அறிவித்துக்கொள்வேன்.

நீங்கள் அனைவரும் மேலும்

என்னை வெறுக்கத்தொடங்குவீர்கள்

அதையறியாமல் நான் பனையேறக்கற்றுக்கொள்வேன்

பனைக்குருதி பீய்ச்ச நான் தனிமையில்

பனை நாடுவேன் நீங்கள்

பனைகள் மூன்றாம் சந்ததிக்கானவைகலென

கதறித்துடிப்பீர்கள். ஏதுமறியாதவன் போல

இருந்து கொள்வேன் எனக்குத்தெரியும்

காலத்தின் வேகம் என்றவாறுநீங்கள்

சுயமாக புலம்பித்திறியும் மனப்பிரழ்வாளநென

என்னை பிரகடனபடுத்துவீர்கள். அதையேற்று

குடும்பங்களும் தெருக்களும் சேர்ந்த

கிராமமொன்றின் நாற்சந்தியில்

மனிதத்தன்மையற்றவனாய் அறியப்படும்

அல்லது வெயிலையோ மழையையோ அணிந்தவுடலுடன்

அலையக்கூடும் வேளையில் அடுத்தது

என்னவென்று நான் மறந்துபோவேன்.

திரும்பப்பெறவியலாதஞாபகச்சிக்கலுக்குள்

அமிழ்ந்துபோவேன். பெயரற்ற வட்டமும்

வெள்ளையுமான பிரகாச உஷை

கொண்ட பள்ளிக்குழந்தைகளின் குறிப்பில்

நிலவென அறியப்பட்ட பெரிய

கோளம் நேர்க்கோட்டில் முகில்களை

விரட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில்

அக்கிராமத்தின் தாய்நகரின்

அரசகட்டிலில் அமர்ந்தவனின் அறிவிப்பால்

உங்கள் முதுகு மீது கசையடி விழும்

கடவுள் எனும் சொல்லின் தூதர்கள்

அரசன்தான் மருவிக்கடவுளானான் என்று செய்தி

சொல்லிய கணம் நான் எனதான எட்டாவது கலயம்

தேடி மூன்றாம் தெரு கடப்பேன். கடவுள்

மருவி அரசனானான் என திருத்திய பதிப்பில்

அச்சுப்பிழை குறிப்புடன் நாழிதல் கண்டு

சுயமிழந்து பிறழ்வாய் அரற்றத்தொடங்குவேன்.

தாய்நகரிலிருந்து பெருங்கலயம் தரவாகி

பெருமாள் கோவிலின்

முச்சந்தியில் வைக்கப்பட்டிருக்கும். பெருங்கலயம்

மரணமென பறையப்பட்டிருந்த அவ்வூரின்

ஏழாம் தெரு கடந்து ஐந்தாம் கலயத்தில்

நுழைந்து நுழைந்து நுழைந்து

வெளியேற வெளியேற வெளியேற

அடுத்தது என்னவென்று உங்களுக்கு

ஏற்ப்பட்ட குழப்பம் எனக்கு நிகழாவண்ணம்

நான் நான் நான் நான் நான்

ஐந்து முறை நீங்களாக

மாறியதும் ஆறு ஏழு எட்டு தொடர்ந்து

ஒன்பதாம் கலயம் என்னை உங்களிடமிருந்து

மீட்டுத்தரும். பின்பு நான் முற்றிலும்

புதிய வூரில் ஆதி மொழி பேசும்

ஆண்களிடம் நாணயங்கள் பெற்று உடலின்பம்தரும்

பெண்ணாயிருந்து அவர்களுக்கெதிராக வெளியேறி

சகலமும் துறந்த முனிவனொருவனின் பதிவிரதையாவேன்

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய வென

முனிவன் உச்ச நேரத்தில் உளரும்

போதுகடவுளென அரசன் வருவான்.

வாளுருவி முனிவனைக்கொன்று

என்னை அந்தப்புரம் சேர்ப்பான் பகலிரவற்ற

புணர்வில் அமைச்சனின் மகள்

எனக்கு பிறப்பாள் என தோன்றும்

கணம் சாலையின் ஓரப்பூன்காவில் மண்

கிளரும் கிழவன் தன் பால்யத்தில் செய்த

வன்புணர்ச்சியின் ஞாபகத்தில்

வெடித்த சிரிப்பொன்றாய் மாறி

புல்வெளியில் நடக்கத்தொடங்குவேன்.

இயலாமையால் தொடங்கிய நாளின்

இறுதியில் இரண்டு மைதுனம் கழித்து

தூங்கமுடியாமல் பிரபஞ்சத்தை யோனியாக்கி

பால்வெளியில் வெளியேறியபின் நீங்கள்

பெண்களாய் மாறி நீண்ட அங்கிகள் அணிந்து


வெகுதொலைவில் மனப்பிரழ்வாளனான என்னை
பற்றி சிந்திக்கக்கூடும் என்கிற கற்பனையொன்றின்
விளிம்பில் நான் தூங்கத்தொடங்குவேன்
விடியும் பொது மீண்டும் ஒற்றைப்பாழ்வெளி
சாத்தியமின்மையின் நிதர்சனம்
நிழல் தேடும் பருப்பொருளின் இயலாமை.
வெயில் நிழலற்ற மரமற்ற உங்களை
நான் நான் நானென எதிரொலிக்கும் மலை
பின்பு எல்லாம் முடிந்த உங்களால் யூகிக்கவே
வியலாத தனிமை ஆகியவற்றின் முன்னிலையில்
உங்களை கதறக்கதற புணர்ந்த இந்த பாடலை
முடிவிற்கு அழைத்துவருவேன். பின்பு நீங்களும் நானும்
எதிரெதிர் திசைகளில் கடந்து செல்வோம்
இறைவன் ஆண் பெண் எனப்படுகின்ற பருப்பொருளை
படைத்துக்கொண்டிருப்பான் சொற்கள் மீது எந்த
நம்பிக்கையையும் இழக்காத என்னைப்பார்த்து
வியந்தவாறு.



******************************
தொடரும்
***************************

6.1.10

சொல்லுவதெல்லாம் பொய் 3


********

29.04.1997
00.06
போன வெள்ளிக்கிழமை தேனி வந்திருந்தேன். அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. நிறைய சிகரெட் பிடிக்கிறார். ரம் இல்லாமல் இரவு தூங்குவது இல்லை. அம்மாவுக்கு பழகிப்போய்விட்டதாம். அப்படியே உன்னையும் பார்க்க வரலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. காலையில் வந்து அன்று இரவே ஊர்திரும்ப வேண்டியதாகிவிட்டது. நாள்முழுக்க வீட்டிலேயே இருந்தேன். காலையில் அம்மா தக்காளியும் உழுந்தும் போட்டு சட்டினி அறைத்திருந்தார்கள். சாப்பிட்டு எவ்வளவு நாட்களாயிற்று. எனக்கு அந்த சட்டினி பிடிக்கும் என்று எபோதுமே அம்மாவுக்கு தெரிந்திருக்கிறது. அப்பா மிகவும் சோர்த்து இருந்தார். உடல் ரீதியாகத்தான். மனம் எப்பொழுதும் போல உற்சாகம். சுகவாசி. சுத்தமாக மரண பயம் இல்லை. எனக்கு எப்பவும் போல நிறைய மரண பயம். யோசித்துப்பார்த்தால் அங்கயற்கண்ணி, ஒவ்வொருவருக்கும் தன் மரணத்தை விட தன் தகப்பனின் மரணம்தான் அதிக பயத்தை தரும்போல. அப்பா இறந்துபோவதைப்பற்றி என்னால் கற்பனை கூட செய்யமுடியவில்லை. ஆனால் உனக்கு ஞாபகம் இருக்கிறதா, ஒரு தகப்பனால் மரண பயத்தை விட அதிகப்படியான பயத்தை தரவியலும் என்பதை அப்பா நிரூபித்ததை. அவர் முதலில் கண் தானம் செய்தார். யாரும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அடுத்த வருடமே அவர் புகைப்படம் ஒன்று நாளேட்டில் வந்திருந்தது. அவர் தன் உடலை தானம் செய்திருந்தார். மருத்துவக்கல்லூரிக்கு. ஆராய்ச்சிக்கு உதவுமாம். நடுங்கிப்போய்விட்டேன். நாளொன்றுக்கு அனாதைப்பிணங்கள் எத்தனை கிடைக்கின்றன தெரியுமா அரசு மருத்துவமனைகளுக்கு. தமிழ்நாட்டில் மட்டும். இவரின் அறம் ஒரு பிரயோசனமும் இல்லாததது என்பதை எப்படி சொல்லுவேன். தேனிக்கு நான் போயிருந்தபோது நல்ல வெயில். கோடை ஆரம்பிப்பதற்கு முன்னமே இவ்வளவு வெயிலா. சென்னையில் இருப்பது போல உணர்ந்தேன். தேனியில் இந்தளவுக்கு வெயில் அடித்தால் உலகம் வேறு நிலைக்கு மாறுகிறது என்பதை சுலபமாக புரிந்து கொள்ளலாம். பூமிக்கு சனிபிடிக்க தொடங்கிவிட்டது. நீ சொன்ன மாதிரி கவிதை எழுத முயற்சி செய்துபார்த்தேன். சரியாக வரவில்லை. அவற்றின் கருக்களை சிறுகுறிப்புகளாக பத்திரப்படுத்திவைக்கிறேன். எப்பொழுதாவது உன்னிடம் காண்பிப்பதற்கு.

12.12.1998

00.07

குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். ....................................................................................................



..........................................................................................................குமுதவல்லி சுந்தரத்துடன் ஓடிப்போய்விட்டாள். .................................




இன்றுடன் மூன்று வருடங்கள்.........


02.11.96

00.07


டிசாசொவுடன் சென்னையில் இருந்தேன் இன்று. நம்பமுடியவில்லை. டிசாசோ சென்னைக்கு வந்திருந்தாள். நேராக வீட்டிற்கு வந்து கதைவை தட்டும் போது ஆறேகால் மணி. என்ன கொக்குப்பையா காலையில் சீக்கிரம் எழும்பும் பழக்கத்தை மறந்துவிட்டாயா.. என்கிறாள். கனவு என்றுதான் நினைத்தேன். போர்ச்சுகலில் இருந்து சாந்தோம் ஆலயத்திற்கு வரும் பாதிரியை பார்க்க வந்திருக்கிறாள். அவளுடன் வந்தவர்களை சர்ச்சுக்கு அனுப்பிவிட்டு இங்கே வந்துவிட்டாள். அவள் முதல் முதலில் என்னை கொக்குப்பையா என்று அழைத்தபோது நான் எட்டாம் வகுப்பு முழுப்பரிச்சை விடுமுறையில் இருந்தேன். அங்கயற்கண்ணி பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். நான் ஒன்றும் அவ்வளவு உயரமான பையன் இல்லை. ஆனால் எந்நேரமும் ஒருகாலைத்தூக்கி எதன் மீதாவது வைத்து நின்றுகொண்டிருப்பேன். ஒற்றைக்காலில் நிற்பதனால் கொக்குப்பையன். அவள் அப்படி சொல்லும் வரை அப்படி ஒரு பழக்கம் இருந்ததை நான் உணரவே இல்லை. அதன் பிறகு அதை உணர்ந்தாலும் அந்த பழக்கம் என்னை விலகவில்லை. இந்த விஷயம் அறிந்த பையன்கள் ஒற்றைக்காலைத்தூக்கி ஒன்னுக்கு போகும் நாயை பகடி செய்து என்னை நாயப்பன் என அழைக்கத்தொடங்கினர். இரண்டு பேரும் கிளம்பி நடராசன் கடையில் இட்டிலியை சாப்பிட்டுவிட்டு ஆட்டோவில் ஏறி சாந்தோமில் இறங்கினோம். புனித தாமசின் பிணத்தின் மேல் நின்றிருந்த வழிபாட்டு ஆலயம். மிகஅழகான கட்டிடம் அங்கயற்கண்ணி. 'பென் துமா' வென போர்த்துகீசியர்களால் ஆயிரத்து ஐநூற்று இருபத்து மூன்றாம் வருடம் முசல்மானிடமிருந்து மீட்டு கட்டப்பட்ட தேவாலயம். 'பென் துமா' வென்றால் என்னவென்று கேட்டேன். தாமசின் வீடு என்று அர்த்தமாம். தாமஸ் உள்ளூர் அரசியலுக்கு பயந்து வீட்டை விட்டு நாலு கிலோமீட்டர் தெற்கில் இருக்கும் அடர்ந்த காடுடைய குன்றின் நம்ம ஊர் முருகன் சாமி ஸ்டைலில் சென்று தஞ்சம் அடைந்து அங்கிருந்தவாறு புனிதப்பணி செய்து நல்லபேர் பெற்று பின் சொந்த வீட்டில் அடக்கம் பண்ணிவிட்டார்கள். இப்பவும் அந்தகுன்று வீடுகலடர்ந்த கரடாக செயின்ட் தாமஸ் மௌன்ட் என நெரிசலடைந்து கொண்டிருக்கிறது சென்னையில். கடற்கையில் அலைந்தோம். மணல் சிப்பம் ஒன்றை செய்தேன். எப்பொழுதும் போல ஒரு குடிசை. அதில் ஏறி மிதித்து தன் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்தினாள் டிசொடா. பஸ் ஏற்றிவிட்டு வீட்டுக்கு வந்து அரைப்போத்தல் ரம்மை பக்தவச்சலம் வருவதற்கு முன்பாகவே குடித்துவிட்டு கண்களில் நீர் வழிய வழிய அழுதேன்.

*******************************

தொடரும் ....

**********************************

5.1.10

சொல்லுவதெல்லாம் பொய் 2




* * * * * * * ** * *




இடைக்குறிப்பு




சன்னாசி குடும்பத்தை பற்றிய வரைவு விளக்கம்:




ஆசிரியர் பணியை குமுதவல்லியின் புகாரால் விடநேர்ந்த சன்னாசி தற்சமயம் சென்னையில் ஒரு அரசு தத்தெடுத்த தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறான். இவன் மனைவி மற்றொருவனுடன் ஓடிபோனகதை வேறு காலத்தில் வேறு அத்தியாயத்தில் வரும். இவனுடைய அக்கா அங்கயற்கண்ணி. செவுலி. மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் தங்கராஜ் கௌண்டர் பெற்றோர். இப்போதைக்கு இவர்களை எனக்குத்தெரிந்த தேனிமாவட்டத்தில் தேனி அருகே இருக்கும் பழநிச்செட்டிபட்டியில் வாழ வைத்திருக்கிறேன். பூடகம் நிறைந்த அங்கயற்கண்ணியின் கதை தொன்மத்தில் வரும்.




* * * * * * * * * *









27.12.1991 வியாழன் இரவு.

00.03



ஜாதகக்காரர் மிகவும் பயமுறுத்தி விட்டார். ஆயுள் ஐந்பத்து ஐந்துதானாம். முப்பது வயது இன்றைய தேதிக்கு. இன்னும் இருபத்து ஐந்து வருடங்கள்தான். காலத்தின் வேகம் எனக்கு தெரியும் அதனால்தான் பயம். காலம்தான் எவ்வளவு வேகமானது. பயத்தில் வயிறு கலங்கி இரண்டுமுறை கழிப்பறையை சுத்தம் செய்தேன். ஜாதகக்காரர் முன்ஜென்மங்களைஎல்லாம் விவரித்துக்கொண்டிருந்தார். சோழர் காலத்தில் நான் படைவீரனாகவும் இரண்டு பொண்டாட்டி காரனாகவும் ஏக காலத்திலிருந்ததுதான்இந்த பிறவியில் நான் அடையும் துன்பத்துக்கு காரணம் என்றான். பரிகாரச்செலவு எனக்கு கட்டுபடி ஆகாததால் ஜாதகக்காரரின் சாபத்தையும் சேர்த்து வாங்கும்படி ஆயிற்று. ஆனாலும் அனுமார் கோவிலில் போய் பிரதி வியாழன் சாமி கும்பிடுவது என்கிற எளிய பரிகாரம் எனக்கு பிடித்துப்போய்விட்டது. காலையில் எழுந்து குளித்துவிட்டுத்தான் கோவிலுக்குப்போக வேண்டுமா என்ன, அதுவும் டிசம்பர் குளிரில். நேரத்தில் எழுந்திருப்பதே அதிசயம். பல்தேய்த்து முகம்கழுவியதும் உடல் நடுங்கியது. மெட்ராசில் இவ்வளவு குளிர் என்றால் தேனியில் எப்படி இருக்கும். ஒரு வருடத்திற்கு வாராவாரம் வியாழகிழமை அனுமார்கோவிலுக்கு சென்று வந்தால் நல்லது என்றால், அதை செய்வதில் ஒன்றும் தப்பில்லை என்றே தோன்றியது. கோவிலில் ஏற்படும் தனிமையும் ஏகாந்தமும் பிறகு அதே வியாழன்களில் வரும் கனகாம்பரம் வைத்த பெண்ணும் - இடது ஆள்காட்டி விரல் பாதி இல்லை - மிகவும் பிடித்துப்போய்விட்டது. அவள் பெயர் அனிதா என்று வைத்துக்கொண்டேன். பெயர் தெரியாத எல்லாப்பெண்களும் எனக்கு அனிதாதான். அவளுக்கு அனிதா என்கிற பெயர் பொருத்தமாகத்தான் இருந்தது. அனுமார்கோவிலுக்கும் பெண்களுக்கும் என்ன சம்பந்தம். ஆனாலும் பெண்கள் அனுமார்கோவிலையும் விட்டுவைப்பதில்லை. டிசொசாவிற்கு கர்த்தரை பிடிக்கிற அளவுக்கு கிருஷ்ணனை பிடிக்கும், ராமானை சுத்தமாக பிடிக்காது. எனக்கும் கிருஷ்ணன் தான் . பெண் தெய்வம் காளி. அங்கயற்கண்ணி நீ ராமனைக் கட்டியழும் பெண்.





2 9.12.1991 சனிகிழமை இரவு





00.04





தனித்தன்மை வாய்ந்த இவ்விரவில் உனக்கு நான் எழுத வாய்ந்த தருணம் மிகவும் நெகிழ்வூட்டுவதாயும் வன்தன்மை கொண்டதாயும் உள்ளது. நமதான இத்தனைவருட நட்பில் நான் உனக்கு கடிதம் எழுதக்கூடும் என்று காலக்கடவுளுக்கு கூட தெரியாது என்கிற என் நம்பிக்கை எவ்விதத்திலும் மூடநம்பிக்கையல்ல. உன் செயல்கள் மீதான என் நம்பிக்கைஇன்மை உன்னால் எந்தவித தடங்கலும் இல்லாமல் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிலைத்திருட்டு தொடர்பாக சிறையிலடைக்கப்பட்டிருக்கிறாய். வாழ்வில் முதல்முறையாக இயற்கையாக்கப்பட்ட சமூக நிஜம் உன்னை வந்தடைந்திருக்கிறது. உன் செல்லரித்த மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தப்பட்ட வீராப்பு சொற்கள் எந்த பயனுமின்றி குழந்தைகள் விட்டெறிந்த பாடப்புத்தகங்கள் போல உனக்காகாக ஒதுக்கப்பட்ட தனியறையில் சிதறிக்கிடக்கக் கூடும். தனிமை சிறிதுமற்ற உன் பாதைகள் விசும்பில் அலைவுறும் கோள்களின் நிரந்தர விளையாட்டென கொண்டாய். வருத்தங்களும் ஆசீர்வாதங்களும் கொண்ட என் மனம் உன்னை தினமும் வேவு பார்த்துக்கொண்டிருக்கிறது. பனிக்குள் கசிந்து வெளியேறும் நீர்த்துளி போல என்னிடமிருந்து நழுவிச்சென்றுவிட்டாய். இப்போது உனக்கு வாய்த்திருக்கும் இத்தனிமை உனக்கான கருணைக்கடவுளால் விரும்பி அளிக்கப்பட்டது. பீடிப்புகை கிடைக்காமல் நீ மனச்சோர்வு கொள்ளக்கூடும். இது வாழ்க்கை உனக்கு ஆதரவாக அளித்த கொடைத்தருணம் . விளையாட்டாகவும் இயல்பு மாறாமலும் உன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய தருணம். இதுகாறும் நீ புணர்த்த மொத்தப் பெண்களின் மகிழ்வுவாசனை உன்னைக்காக்கும். உன் உறுதியற்ற நிலைப்பாடு எனக்கு மிகுந்த சோர்வை அளிக்கிறது ராமா.






31.12.1999
00.05
இன்று ஒரு இடத்தில் நூறு ரூபாய் திருடினேன் அங்கயற்கண்ணி. எல்லாம் உன் மகனுக்ககத்தான். குரோம்பேட்டை சிம்பொனி டெய்லர்ஸ் போயிருந்தேன். மூன்று மாதத்திற்கு முன் சௌந்தரபாண்டி இறந்தபோது போனது. நீ ஒரு தடவை அவனை பார்த்திருக்கிறாய். எனக்கு பள்ளித்தோழன். தொன்னூறில் குரோம்பேட்டைக்கு வந்தான் தையல்காரனாக. காடுமாடு போல கம்பீரமாய் இருப்பான். அவன் இறக்கும் போது முப்பத்தேழு கிலோதான் இருந்தான். ரத்தப்புற்று அவனைத்தாக்கியபோது அவனை விட நான்தான் அதிகம் பயந்து போனேன். அவனை பார்க்கவே போகவில்லை. ஐந்துமாதத்தில் இறந்து போனான். சாவுக்கு போய் மூஞ்சியைகூட பார்க்கவில்லை. அழுகைவரவில்லை. பயம். சுடுகாட்டிற்கு போகும் வழியில் பாதியிலேயே வந்துவிட்டேன். இன்றைக்கு சும்மா அந்தப்பக்கம் போயிருந்தேன். கையில் காசு இல்லை. வருசப்பிறப்பிற்குஉன் மகனுக்கு ஒரு உடை எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. டெய்லர் கடையில் சண்முகம் இருப்பான் எதையாவது தைத்து வாங்கலாம் என்று போயிருந்தேன். ஆள் இல்லை. கடையில் காஜா பையன் மட்டும் இருந்தான். உட்கார்ந்து டேபிளை நோண்டிக்கொண்டிருந்தபோது தையலளவு நோட்டில் அந்த நூறு ரூபாய் தாள் இருந்ததை பார்த்தேன். அதை கொண்டுதான் தாம்பரம் பஜாரில் உன் மகனுக்கு உடை வாங்கினேன். காபி நிறத்தில் வெள்ளைப்பூ போட்ட சட்டையும் திரௌசரும். நாளைக்கு வருசப்பிறப்பு. ஆனால் நான் அடுத்த மாதம் தான் ஊருக்கு வருவேன். அதுவரைக்கும் இந்த உடையை நான் தர முடியாது. யாரிடம் கொடுத்து விடுவது. பேசாமல் நீ மெட்ராசுக்கு மாற்றலாகி வந்துவிடு அங்கயற்கண்ணி. உன் குடும்பத்திற்கு என் வீடு சரியாய் இருக்கும். என் ஒருவனுக்காக இந்த வீடு சற்று பெரியதுதான். ராமனும் நீயும் உன் மகனுடன் வசதியாய் இருக்கலாம். எனக்கும் சாப்பாட்டு பிரச்சனை இல்லை. நான் சொன்னால் டிசொசாவும் வந்து விடுவாள். டிசோசா வந்தால் எனக்கு நிம்மதி வந்துவிடும் என்று உனக்கு தெரியும்தானே. கடலலை கேட்கும் இந்த அரசுகுடியிருப்புக்கள் மாலைக்காற்றுக்கு பேர்போனது. கடலை உனக்கு எவ்வளவு பிடிக்கும். பார் நான் கடலின் முன்னூறு மீட்டர் தூரத்தில் வாழ்கிறேன். கடலைப்பார்த்து ஒருமாதத்திற்கு மேல் ஆயிற்று. தினமும் கடலை கேட்கிறேன் என்பதுதான் மிச்சம். கடல் உன்னை அதிகம் ஞாபகப்படுத்துகிறது அங்கயற்கண்ணி. நமது பால்ய நினைவுகள் என்னை பெரிய ஆயாச ஆழத்துள் அமிழ்த்துகிறது. கடலறியாத எனக்கு உன் கற்பனைச்சிப்பிகளை கொடுத்த காலங்களை நான் கடற்கரை மணல்த்துகள்களில் தேடுகிறேன். புத்தாண்டு கொண்டாட்ட கூச்சலில் கரைத்து கொண்டிருக்கிறது கடல். எனக்கு நம் குடும்ப ஞாபகம் நிலவின் பால் வெளிச்சம் போல பொங்குகிறது. அழுதால் சற்று இளைப்பாறல் கிடைக்கும். முடியவில்லை. நான் கடல் பார்க்க போகிறேன். உன்னைப்பற்றி நினைக்கவும் குமுதவல்லியை மறக்கவும் கடல் உதவுமெனப்படுகிறது.

* * * * * * * * *
தொடரும்
* * * * * * * *


4.1.10

சொல்லுவதெல்லாம் பொய் 1

*******************


கவனமாய் கேள் விவேகி. இது நான் சொல்லப்போகும் கதைகளின் கூட்டம். குழப்பம் விளைவிக்கும் இக்கதைகளின் காலம் முன்னுக்கு பின் முரணானது. இதன் சம்பவங்கள் நேரடியானவை என நீங்கள் நம்பினால் நீங்கள் எமாற்றப்படுகிறீர்கள். நான் எனும் சன்னா தனக்குள் நிகழ்ந்த கற்கால சிந்தனைகள் இவை. விளையாட்டுச்சீட்டுகளை கலைக்கத்தொடங்குகிறேன். விவேகி வா. இது நமக்கான சமர். கவனமாய் இரு.




********




சன்னாசியின் நாட்குறிப்பு


00.00

15.07.1998 இரவு பத்து இருபதுக்கு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகத்தில் தடாலென விழுந்தேன். பத்து வினாடிகளுக்கு அம்மா அப்பா நீ என யாரும் நினைவுக்கு வரவில்லை. நமது கஷ்டமெல்லாம் முழுவதுமாக தோன்றி மறைந்தது. மறுநாள் மாமனானது அறிந்தேன். அப்பா எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பார். எதையும் நிம்மதியாக அனுபவிக்க முடியவில்லை பார்த்தாயா. ஒரு வாரம் ஒரு வருடம் போல் உள்ளது. உன் திருமணத்துக்கு முதல் நாள் இரவும் இதுபோல நான் வண்டியிலிருந்து விழுந்தது ஞாபகத்திற்கு வருகிறது. எவ்வளவு வேடிக்கை. இப்பொழுதெல்லாம் எனக்குக் கீழிருப்பவர்களிடம் கூட நேராக பார்த்து பேச முடியவில்லை. யாராவது ஜோக் அடித்தாலும் சிரிக்க எனக்கு தகுதி இருக்கிறதா என்று யோசிக்கிறேன். என் மூளை செயல் இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது. என்ன நடந்தாலும் என் மனம் தோல்வியை மட்டும் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. பசித்தாலும் நிறைய உண்ண மறுக்கிறது. இப்போதைக்கு என் இடதுகை எழுத மறுக்கிறது. அங்கயற்கண்ணி கை சரியாகட்டும் நிறைய எழுதுகிறேன்.

*******

26.02.1991 செயவ்வாய் இரவு.

00.01
அருவருக்க தக்க ஈனப்பிறவி என உலகில் ஏதேனும் உள்ளதா. தெரியவில்லை. ஒரு பட்டியலைப் பார்க்கலாம்: குஷ்டம் கண்ட உள்ளாடை கிழிந்த தெருவில் கிடக்கும் நீக்ரோ பிச்சைக்காரி, சொறிநாய், மலம் உண்ணும் பன்றி, பீழை தெறிக்கும் கழுதை, முருங்கைபிசின் போல வடியும் புண்களுடன் அம்மை கண்ட வேசி மற்றும் என்னால் கற்பனை செய்யவியலாத அவரவர்களுக்கு தக்க விதமாய் கற்பனை செய்யப்படும் பிம்பங்கள். இவைகளெல்லாம் தன்னளவில் புனிதமாகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் நியாயப்படுத்த கூடியதாகவும் அதே சமயத்தில் இயற்கையின் பேராதிக்ககூறின் ஒரு அழகாகவும் இருக்கிறது. எனில், அருவருக்கத்தகுந்த ஈனப்பிறவி என ஏதேனும் உண்மையில் இருக்கிறதா என்றால், இருக்கிறது மேலும் அதை இரண்டு வகையாக பிரிக்க முடியும். முதலாவதாக அருவருக்கத்தகுந்த ஈனப்பிறவி என எண்ணுகிற உணர்வு, ஒரு மனதின் வாழ்வு நீளத்தில் - மனிதனின் வாழ்வு நீளம் அல்ல - இவ்வுணர்வுக்கு பல்வேறு படிநிலைகள் உள்ளன. அவற்றின் அதிர்வுகளை அவ்வந்த மனமே தீர்மானிக்கும். தீர்மானிக்க வேண்டும். தீர்மானித்துக்கொள்ளும். இரண்டாவதாக, தன்னிலையையே அருவருக்கத்தகுந்த ஈனப்பிறவி என்று உணர்கிற தருணம். இது ஒரு வகையான அகவய நிகழ்வுப்போக்கு. தன்னைத்தானே அருவருக்கத்தகுந்த ஈனப்பிறவி என்று உணர்கிற தருணம் என்பது அந்த மனத்தின் படிக்கற்கள் போல. அதன் எடைக்கு தகுந்து அதன் வாழ்வுதிசை மாறும். இவ்வகையான உணர்வின் முதல் அறிமுகத்தின் போது ஏற்படும் மன உடைப்புகளை அம்மனம் புறக்கனிக்குமேயானால் பின் எப்போதும் அதேவகையான நிலையில் அம்மனம் இயங்கக்கூடும். என் மனம் என்னை அருவருக்கத்தகுந்த ஈனப்பிறவியாக உணர்ந்த கணம் இன்று எனக்கு வாய்த்தது. அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி நான் என்ன முடிவு செய்ய வேண்டும் என்று டிசோசாவிடம் கேட்கலாமென்று முடிவு செய்தேன்.

********

09.05.1991 புதன் இரவு.

00.02
மற்ற பெண்களைப்போலவே அவளும் ஒரு ஆணுக்கு மனைவியாய் இருந்தாள். அவள் மனவெளியைப்போன்றே அவள் உலகமும் மிகச்சிறியது. நகரின் ஒரு கட்டணதொலைபேசி நிலையத்தில் அவளது வலது ஆள்காட்டி விரலும் வலது காதுமடலும் கருத்துப்போகுமளவுக்கு வேலை செய்தாள். அவளது கணவன் நூற்பாலை ஒன்றில் வரைமுறையற்ற நேரங்களில் வேலை செய்தான். அந்த நூற்பாலையின் முதலாளி இனிய இரவொன்றில் தனது வீட்டு முற்றத்தில் அமர்ந்து பக்கார்டி ரம்மும் முந்திரிக்கொட்டையும் சாபிடப்பிடிக்காமல் ஏற்பட்ட சிறு மனக்கிளர்வினால் தன் ஆலையில் தொழிலாளர்களின் பணிக்காலம் முறைப்படுத்தப்படவேண்டும் என்கிற முடிவை வந்தடைந்தான். மறுநாள் முதல் பதினைந்து நாட்களுக்கு அவளின் கணவன் இரவுப்பணி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டான். சில சந்தர்ப்பங்களில் அவள் மனவெளியில் எங்கோ கிடந்த கல்லைப்புரட்டியத்தில் அவள் கணவனின் நெருங்கிய நண்பனாகிய நான் அந்த பதினைந்து இரவுகளில் அவளை இருபத்தியேழு முறை புணர்ந்தேன். காத்திரமான அவளது கருப்பு உடல் என்னால் குழைவாக்கப்பட்டதாக ஒரு சில இரவுகளிலேயே நம்பத்தொடங்கியிருந்தேன். அவள் உடம்பின் ஒவ்வொரு புள்ளியும் என்னால் புரிந்துகொள்ளத்தக்கதாய் இருந்தது. ஆனால் அவளின் மன வெளி எனக்கு சற்றும் விளங்காதவை. அவளின் ஞாபகத்தொகுப்பில் சில வீடுகள் இந்த நகரின் கிழக்கில் இருக்கும் மூன்று வீதிகளின் வரைவு விளக்கமும் திரையரங்குகளின் வழிப்பாதையும் காமதேனு தொலைபேசி நிலையமும் ராஜாராம் தையல்கடையும் கணவனின் தோல் வாசனையும் அம்மாவின் கூந்தலும் அப்பாவினால் ஏற்பட்ட காயத்தழும்பும் குழப்பமான பல்வேறு வகையான தொடர் எண்களும் அவள் பாட்டி வைத்து கொடுக்கும் மாங்காய் பச்சடி இனிப்பும் இன்னும் என்னால் விளங்கமுடியாத விஷயங்களாலும் நிரம்பிக்கிடந்தன. மற்ற எல்லாப்பெண்களைப்போலவே அவளும் மற்ற எல்லா வேலைகளையும் செய்தாள். நகரில் அவளுக்கென்று சொல்லப்பட்ட வீட்டில் அவள் தனதான குடும்பத்தை நிர்வகித்தாள். ஒவ்வொரு இரவும் நான் கொண்டு சென்ற அரைக்கிலோ இனிப்பு பதார்த்தத்தை சில நிமிடங்களில் தின்று தீர்த்துவிடுவாள். பதினைந்தாவது இரவில் இனிப்பை தின்றவாறு சொன்னாள்: மொத நாளே சொல்லலாம்னு நெனச்சேன்.. நீ எப்பிடிப்பட்ட வாத்தியார்னு எனக்கு தெரியாது.. ஆனா நீ சரியான ஆம்பள.. உடனே நான் கேட்டேன், அப்படி எத்தன ஆம்பளைகள உனக்கு தெரியும்..' பின்எப்போதும் அவள் என்னை அனுமதிக்கவேயில்லை. அவளின் கணவன் எப்போதும் போல என் நண்பனாகவே இருந்தான்.

****************

தொடரும்..

***************