27.2.10

குளம்

தாழ்வாரத்தில் தேங்கும் ஒளிக்குளம் நிலவு கொடுத்தது. எடுத்து முகத்தில் அப்பிக்கொள். வழிகிறது வாசமாய் உன் இனிய சொற்கள். தேகம்கொல் காமம் பிசைந்த சோற்றுப்பருக்கைகளை உருட்டியளிக்கிறாய் நீளும் என் உள்ளங்கையில். வயிற்றிலில்லை பசிஎன்னும் சொல். எல்லாமே வெண்மையாய் தெரிய கறுத்துச்சிறுக்கிறது எனதான அகம். புறம் பேசுகிறது நிலா.

**************

சூரியனின் நீர் நிறைந்த பகலொன்றில் கனப்பு மிக்க நிலத்தில் உன் காலடி தடம். பற்றி செல்கையில் நிறைவடைகிறது தொடுவானம்.

****************

பலவருடங்களுக்கு முன் எழுதிப்பார்த்த காதல் வரிகள்!

*********************

24.2.10

சாயம் போன நிலம் 1

அந்த மண்ணின் தரம் ஏதுவாக இருந்தது தேவையான அளவை சேகரித்துக்கொண்டேன் அந்த இடம் ஏதுவாக இருந்தது தேவையான இடத்தை சுத்தம் செய்து வேலியிட்டேன் அவன் சொன்னான் அந்த இடம் ஏதுவானதென்றுஅங்கு ஓர் ஆழ்துளை செய்து தேவையான நீரைஎடுத்துக்கொண்டேன். அந்த மரம் காய்ந்து போனதுஅதை வெட்டி தேவையான விறகுகளை பத்திரப்படுத்தினேன்தேவையான அளவு இடத்தில்தேவையான அளவு மண்ணைக் கொட்டிதேவையான அளவு நீரை சேர்த்துகுழப்பி பரப்பினேன். உயிர் குடிக்கும் குரல் கொண்டுஒரு நாடோடியின் பாடலை முனுமுனுத்தவாறு நீஅந்த பரப்பில் கீறலிட்டாய். காயவைத்து ஒவ்வொன்றாய் அடுக்கி தேவையான அளவு விறகு வைத்து எரியூடினேன். மண்சுட்டு கல்லானது இப்போது தேவையான அளவு இடமில்லைஇப்போது தேவையான அளவு மண்ணில்லை இப்போது தேவையான அளவு நீரில்லைவேறு இப்போது வேறெங்கோ துளையிட அவன்போய்விட்டான்நாடோடிப்பாடல் நாட்டுப்பாடலானது இனி எப்போதும் தேவையான அளவு கல் இருக்கும் என்னிடம்.
**************
இடைமறித்த பகலொன்றின் துவக்கத்தில் ஒரு கொழுத்த இரவை எனக்கு பரிசளித்தாய் அதன் பாரம் தாங்கமாட்டாமல் என் கால்கள் பூமியுள் புதைகின்றன ஒவ்வொரு கணத்திலும் திரும்ப பெற்றுவிடு அந்த இரவை அல்லது தொடர்ந்து சுமக்க உன் தோள் கொடு அல்லது ஒரு சிறிய இளைப்பாறல் போதும் பார் அந்த சிறுமி என்னிடம் ஒரு காகிதம்
கேட்கிறாள். தெருவெங்கும் மழையோடையாம் கப்பலுக்கு ஏங்குகிறதாம் நீர்
அடர்நினைவினாலான அவ்விரவினை சற்று இறக்கி வைத்துவிட்டு ஒரு காகிதத்தை துலாவி எடுத்துக்கொடுக்கும் நேரத்தை மட்டும் எனக்கு அளி. ஒரு வேளை அவள் செய்யும் கப்பலில் அந்த இரவை சரக்காக்கி காலத்துக்கு ஏற்றுமதி செய்துவிட ஏலுமானால் மறுகணமே உன்னிடம் வருவேன்
ஒரு இனிய மிருதுவான குளிர் வீசும் மிளிர்கரும் இரவொன்றை உனக்கு
பரிசளிக்க.

*************

23.2.10

வினோதம் 4

பாதுகாப்புணர்வு இழக்கும் ஆண்கள் பற்றி முந்தய பதிவில் சொல்லியிருந்தேன். இப்போது நம்பிக்கையுடைய பெண்ணைப்பற்றி கொஞ்சம் யோசிக்கலாம். அதற்கு முன்னாள் இந்த ஆண்களைப்பற்றி நான் சொன்னவைகளை சுருக்கமாக மீண்டுமொருமுறை என் ஞாபகப்படுத்தலுக்காக எழுதுகிறேன்: பொதுவாக ஆண் பணம் மற்றும் பெண் தேவைகள் பூர்த்தியாகாத சமயங்களில் பாதுகாப்புணர்வை இழக்கிறான். இவை இரண்டும் கிடைக்கும் நிலையில் அவன் பெண்ணை நம்ப தொடங்குகிறான். குடும்ப அமைப்பில் இந்த இரண்டுமே ஆணுக்கு ஆதாரம். இதன் அடிப்படையில் ஆணுக்கு எழுவதுதான் அன்பும் காதலும். இதுதான் பெரும்பாலான சரி. பேரன்பும் பெருங்காதலும் கொண்ட வெகுளி/அப்பாவி/முட்டாள் ஆண்கள் இதில் விலக்கானவர்கள், பாவம் அவர்களை விட்டுவிடலாம்! பொதுவாக தனது மொத்த தேவைகளையும் குடும்ப அமைப்பின் மூலம் சுலபமாக தீர்த்துக்கொள்கிற ஆண்கள், தங்களில் சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளை நுகர்கிற வாடிக்கையாளர்களாக மட்டுமே உள்ளார்கள்.
நம்பிக்கையுடைய பெண் யார்: பிறரை சாராமல் தனியாக வாழ முடியும் என்று ஒரு பெண்ணுக்கு தெரிந்து போனால் மட்டும் போதும் அவள் நம்பிக்கை அடைந்தவளாகிறாள். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணும் தனியாக சுயமரியாதையுடன் வாழத்தகுதி உடையவள்தான். அது அவளுக்கு தெரியவில்லை என்பது மட்டுமே பிரச்சனை. அவள் சார்ந்தே இருப்பதுதான் நல்லது என்று போதிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறாள். பெண் அடிமைத்தனம் என்பதிலிருந்து விடுபடுதல் என்றால் ஆணை விட்டு விலகிச்செல்லுதல் என்று அர்த்தமில்லை, மாறாக ஆணீயச் சிந்தனைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதுதான்.
ஆண் சமுதாயம் பெண்ணை தொடர்ந்து ஒரு 'பாதுகாப்பற்ற உணர்வில்' இருப்பதாக நம்ப வைத்துக்கொண்டிருகிறது. அவளும் அதை முழுமையாக நம்புவதாகவே படுகிறது. சார்பு ஒரு சுய தேவை என்கிற அளவுக்கு அவள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதாவே எனக்கு தோன்றுகிறது. உடல்வலு கூட பெண்களுக்குத்தான் அதிகம். பெண்களுக்குஇருப்பது வலுவான திறன், ஆண்களுக்கு இருப்பது வலு. உதாரணத்திற்கு, ஐம்பது கிலோ அரிசி மூட்டையை தூக்கி அடுத்த அறையில் வைப்பது ஆண்களுக்கு சுலபம், மாறாக ஐம்பது துணிகளை உட்கார்ந்த இடத்தில் துவைத்துப்போட அவனுடம்பில் திறன் கிடையாது. விதி விலக்குகள் விலகுங்கள்.
இந்தவையான சுய அறிதலே பெண்களுக்கு நம்பிக்கை என்கிறேன். தான் தனியாக வாழ தேவையான அறிவை பெண் பெற்றுவிட்டால் அவள் ஆணிடம் பாதுகாப்புணர்வை அடைந்து விடுவாள். குடும்ப அமைப்புகளை சிக்கலின்றிபுரிந்து கொண்டு ஒரு சோலை நீரோடையாக தனது குடும்பத்தை அமைத்துக்கொள்ள அவளால் முடியும். பெருங்காதலும் பேரன்பும் இல்லாத பெண்களை நான் ஆண் என்றே கொள்கிறேன். அவர்களையும் விட்டுவிடலாம் பாவம் அவர்கள். சூழ்நிலை.

தொடரும்..
*****************************

22.2.10

வினோதம் 3

நண்பன் வசுபாரதி 'ஊதாரித்தனமான நண்பன்' என்கிற வார்த்தையை பிரயோகித்திருக்கிறான். சுவாரஷ்யமான கூற்று. அதை பற்றி நான் கொஞ்சம் எழுதுகிறேன். அதற்கு முன்னாள், பத்மாவின் பின்னூட்டத்தில் முட்டாள்தனம் என்று யோசிக்கத்தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார். இதைப்பற்றியும் நான் சொல்லவேண்டி இருக்கிறது. என்னவென்றால், முட்டாள் தனம் என்று நான் சொல்வது அறிவாளித்தனத்துக்கு எதிர்பதமாக. அறிவு எவ்வாறு ஒரு தன்மையோ அதுபோலவே முட்டாள் ஒரு தன்மை. சரியாக நான் சொல்ல வந்தது வெகுளித்தனம் அல்லது அப்பாவித்தனம். இது இரண்டும் சேர்ந்ததுதான் முட்டாள்தனம். இங்கு என்னைப்பொருத்தவரையில் அறிவாளிகளை விட முட்டாள்களே சிறந்தவர்களாகவும் மேன்மை மற்றும் மென்மையான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருக்கிறார்கள். வாழ்வதற்கு தேவையான அடிப்படை அறிவை கொண்டவர் எவரும் அறிவாளிதான். அப்படியானால் இங்கு முட்டாள்கள் யாரும் இல்லை, சமயோசிதமாக பணத்தை எவ்வழியிலும் சேர்க்கத தெரிந்தவர்களைத்தான் இங்கு நாம் அறிவாளிகள் என்கிறோம். முட்டாள்கள் பிழைக்கத்தெரியாதவர்கள். பெரும்பாலும் 'பாவம் அவன்' என்கிற விகுதியோடுதான் அவர்கள் அடையாளப்படுத்தப படுகிறார்கள். இந்த வகையில்தான் என்னை அல்லது என் செயல் பாடுகளை நான் முட்டாள்தனம் என்று விளித்துக் கொள்கிறேன். இது கண்டிப்பாக அவையடக்கம் அல்ல.
இரண்டாவதாய் வசுபாரதியின் ஊதாரித்தனம் என்கிற பதம். ஊதாரித்தனம் என்பது பொதுவாய் கண்டமாதிரி செலவுசெய்தல், பணத்தை சேமிக்காதிருத்தல் போன்ற பொருளாதார பிரச்சனைகளின் அடிப்படையிலான சொல். வசு இதனடிப்படையில் சொல்லியிருந்தால் அது எனக்கு உடன்பாடு கிடையாது. எனக்கும் ஊதாரித்தனம் பிடிக்கும். அனால் அதற்காக ஒரு மனிதன் அடுத்தவரை சார்ந்திருக்கக்கூடாது என்பதுதான் சரி. அதற்காக ஒரு சிறு அளவிலான திட்டமிடல் வாழ்க்கையில் மிகத்தேவையானது. திட்டமிடல் என்ற சொல்லே கொஞ்சம் பொறுப்புணர்வு சார்ந்ததுதான். அவ்வகையான பொறுப்புணர்வையே நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டேன். எனக்கு தெரிந்து அதிகப்படியான குடும்பங்களில் குழந்தைகள் வளர்த்த பின்னும் பெற்றோரை சார்ந்துதான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது பெற்றோர்கள் பெற்றதனாலேயே தரவும் வேண்டும் என்கிற எண்ணத்தில் வளர்கிறார்கள். குழந்தைகளை நாம் குற்றம் சொல்ல முடியாது. நமது வளர்ப்பு முறையே அவ்வாறாகத்தான் உள்ளது.
என்னைப்பொறுத்தவரை, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கைகளை வளர்க்க உதவ வேண்டும். நம்பிக்கைஎன்றால், அவர்களது வாழ்நாளில் எந்ததினத்திலும் அவர்கள் தனித்து கைவிடப்பட்ட நிலையில் - கையறு நிலையில் - தள்ளப்பட்டாலும் மீண்டும் வாழ்க்கையை முதலிலிருந்து உற்சாகமாக தொடங்கும் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும், அந்த நாள் அவர்களது அறுபதாவது வயதில் ஏற்பட்டாலும் சரி. எளிமையாக சொல்லவேண்டுமானால், ஒருவர் நடுத்தெருவுக்கு (!) வந்தாலும் வாழ்கையை சுவாரஷ்யமாக எதிர்கொள்ளும் திராணியை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அளிக்கவேண்டும். அதைத்தான் பெற்றோர்களுக்கான பொறுப்புணர்வு என்று நான் சொல்லுகிறேன்.
இங்கு நிலைமை அப்படி இல்லை. எந்த பள்ளியின் பாடத்திட்டமும் நம்பிக்கையை முன்னிறுத்துவது இல்லை. குடும்ப நபர்களும் அவ்வாறே. தமிழ்ச்செல்வன் சொன்னது போல இந்த இந்திய தேசமே 'பெயிலாய்ப் போனவர்களின்' தேசம் என்பது தெரியாமல் நாம் பாடப்புத்தகப் பொதிகளை குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கிறோம். நமது தேசத்தின் மொத்த வளர்ச்சியில் பள்ளித்தேர்வுகளில் தோல்வியுற்றவர்களின் பங்கு அறுபது சதத்திற்கு குறையாது என்பது கண்கூடு.
இதனடிப்படையில்தான் நான் ஆண் மற்றும் பெண் மனக்கூறுகளால் ஆன குடும்ப அமைப்பில் ஆண்களைப் பற்றியும் பெண்களைப்பற்றியும் நான் புரிந்து வைத்திருப்பவற்றை பற்றி சொல்ல முயற்சிக்கிறேன்.
...................................... தொடரும்.
********************

19.2.10

சுயம்

நான் யார். தெரியவில்லை என்று ஒதுங்கி போகாமல் ஏதாவது சொல்லவேண்டும். இது எனக்கு சுயவிருப்பமாக (பர்சனல் அர்ஜ்) உள்ளது. இது ஆன்மீகத்தேடல்தொடர்பான கேள்வி இல்லை. இந்த சமூகச்சூழலில் என் மனம் என்னவிதமாக உருவாக்கி இருக்கிறது என்பது பற்றிய ஒரு சுய விமர்சனம். என் மனநிலை (ஸ்டேட் ஆப் மைன்ட்) என்பதை நான் எவ்வாறு அமைத்துக்கொண்டுள்ளேன் என்கிறது பற்றிய எனது எளிய வாக்குமூலம். இது யாருக்காக என்பதை இறுதியில் சொல்கிறேன்.

நல்லது - கெட்டது :

என்று எதுவும் இல்லை. மனிதர்களின் பழக்கங்கள் அவரவர் சூழ்நிலைகளுக்கு ஒப்ப நல்லவை கெட்டவை என தீர்மானிக்கப்படுகின்றன. புகை, மது, பெண் ( பெண்களுக்கு ஆண்) ஆகியவை பொதுமைப்படுத்தப்பட்ட கெட்டபழக்கங்களாக உள்ளன. இதை நான் திண்ணமாக மறுக்கிறேன். பொய் சொல்லுதல், பொறாமைப்படுதல், திருடுதல், பழிசுமத்துதல், பிறன்மனை விழைதல் போன்ற இன்னும் பலவிதமான பழக்கங்கள் மனிதர்களின் வளர்ப்புச்சூழலில் உருவாகும் மனவியல் பக்குவம் என்பது என் எண்ணம்.

ஆண் - பெண் :

என்பவர்கள் உடல் அடிப்படையில் வேறுபட்டவர்கள். மன அடிப்படையில் வேறுபாடு அற்றவர்கள். மீண்டும் இதற்கு வளர்ப்புச்சூழல் காரணியை நம்புகிறேன். இது அடிப்படை. மாறாக, நான் பல சந்தர்ப்பங்களில் ஆணாக இருப்பதற்காக குற்றவுணர்வு அடைந்திருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை ஆண் என்பவன் ஒரு மொன்னையான இயற்கை அமைப்பு. ஒற்றைபுரிதல் ஆணின் மன இயல்பு. பெண் பலவித (மல்டிப்பில்) புரிதன்மை அமைப்பு. ஆண் பனைமரம் என்றால் பெண் வாழைமரம். வேறு வேறு வகை. வேறு வேறு இருப்பு. மூளைச்செயல்பாடுகள் மட்டும் ஒன்று.


கடவுள் :

இல்லை. கடவுள் என்கிற கருத்தாக்கம் மட்டுமே இருக்கிறது. கருத்துக்களை நான் ஒருபோதும் நம்புவதில்லை. சில கூட்டு மனங்களின் நம்பிக்கைகள் சில நேரம் பலிக்கிறபோது நிகழ்தகவின் குழந்தையான 'தற்செயலையே' நான் கடவுளென தீர்மானிக்கிறேன்.


நட்பு:

எனக்கு நட்பில் பால்பேதமில்லை. ஒருவரை பிடித்திருந்தால் அவர் எப்படிப்பட்டவராய் இருந்தாலும் நண்பர்தான். கொலைகாரர், திருடர், புரம்சொல்லுபவர், பாலியல் தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள் என அவர்கள் எவ்வாறு இருந்தாலும் எனக்கு கவலையில்லை. யாரையும் எனக்கு கேவலமாக நினைக்கத்தோன்றாது. பிடிக்கவில்லை என்றால் சுத்தமகாக ஒதுங்கிவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். எனக்கு உலகத்தில் அனைவரையும் பிடிக்கும் அரசியல்வாதிகளைத்தவிர.


அரசியல்: கட்சிகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பையும் இதுவரையில் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. இனிமேலும் இல்லை.


கலாச்சாரம்-பண்பாடு: எதுவும் இல்லை. திராவிடன் என்பதில் லேசான பெருமிதமுண்டு.


மதம்: புத்தம் தேவையாக இருக்கிறது. சமணம் விருப்பமாக இருக்கிறது. இசையும் நடனமுமாய் இருந்தால் மகிழ்ச்சி.


மரணம்: என்பது முற்றுப்புள்ளி. எளிய, உறுதியான மருத்துவச்செயலிழப்பு (டெத் இஸ் கிளினிக்கல்). ஆன்மாவையும் மறுபிறப்பையும் திண்ணமாக மறுக்கிறேன்.


அறம்: சுதந்திரம். என் அறம் சுதந்திரம். நான் ஏற்படுத்திக்கொள்ளும் ஒவ்வொரு கருத்தும் என்னால் சுதந்திரம் என்கிற சிக்கிமுக்கியில் உரசிப்பார்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டவை.


இந்த சுருக்கமான மற்றும் முட்டாள்தனமான வாக்குமூலம் எதற்கு: எனது மன - சிந்தனைப்போக்கு மேற்கண்டவைகளின் அடிப்படையில்தான் இயங்குகிறது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வதன் மூலம் எனது இரண்டு மகன்களுக்கும் (அவர்களைப்போலவே ஆன ஆண் சிறுவர்களுக்கும் ) தெளிவுபடுத்தவே. எதிர்வரும் கடுமையான, காழ்ப்புணர்வும், பொறுப்பற்ற தனிமனித மற்றும் சமுதாயச்சூழலும் நிறைந்த காலத்தில் ஆண்களென அவர்கள் நுழைகிறார்கள். அவர்களுக்கு நான், ஆணாகிய நான் எவற்றை சொல்லி அனுப்புவேன் ? எதையும் சொல்ல வேண்டுமாவென்றும தெரியவில்லை. எல்லாக்குழந்தைகளைப்போலவே அவர்கள் ஊடக கற்பிதங்களையும், திரைப்பட நாயகர்களின் பிரதிமைகளையும் , மோசமான பாடத்திட்டங்களின் மத்தியிலும் வளர்கிறார்கள். சகோதர்களுக்குள்ளே குரோதம் பேணுகிறார்கள். பயமாய் இருக்கிறது. என் பொறுப்புணர்வின் மேல் கடும் கேள்வி எழுகிறது. வெறும் பொருளாதரத்தை சேமித்து வைத்தால் சரியாகிவிடுமா?


உணவுக்காவும் இருப்பிடத்திற்காவும் பாதுகாப்பிற்காவும் நிறம் மாறும் ஒரு எளிய பச்சோந்தி போல வாழும் எனக்கு நிறைய எழுதத்தோன்றுகிறது. மனஅழுத்தம். பிறகு எழுதுகிறேன்.
*********************