6.4.10

உலைக்கலன்


உங்களுக்குத்தெரியுமா நாம் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட சாலையில் நடந்து கொண்டிருக்கிறோம் என்று. நம் சாலைகள் திருத்திய கணித சமன்பாடுகளால் துல்லியமாக விரவப்பட்டிருக்கிறதென. தினமும் கிலோரின் கலந்த நிலத்தடி நீரால் அச்சாலை தூய்மை படுத்தப்படுகிறதென. மேடுபள்ளமற்ற குறுக்கில் மலைப்பாதைஎன்றாலும் கணவாய்துளைத்து மிக நேர்த்தியாக ஜல்லிகளால் மெத்தபடுத்தப்பட்டதென. வளைவுகளை சகிக்காதாத நேர் பாதையென. குறிப்பிட்ட காலாவதிநாளைக்கொண்டதென. திரும்ப வியலாத ஒற்றைப்பாதை என. உங்களுக்குத்தெரியுமா எல்லா சாலைகளும் நமக்கு வலது புறத்தில் அமைக்கப் பட்டிருக்கிறதென.

********
உங்களுக்குத் தெரியுமா சூளைக்குள் மணல்கட்டிகளைத்தவிர உயிர்ப்பொருள்கள் வாழமுடியாதென. சுவாசிக்க ஏதுவான சூழல் அதனுள் இல்லை என. மணற்துகள் கூட்டமாய் அடைக்கப்பட்ட இடத்தில் சூளை பழுதாகுமென. நிறுத்தப்படாமல் நெருப்பேறும் சூளையில் வேகும் மண்கட்டிகள் உபயோகம் தராதென.

**************

உங்களுக்குத்தெரியுமா தலைப்பென காணப் படுபவைகளுக்குள் நிலம் நிறைத்திருக்கிறதென. அதில் மனிதர்கள் இட்டு நிரப்பப்பட்டிருக்கிறார்களென.
அவர்கள் தினமும் தினசரி படித்து தங்கள் அறங்களை தங்களது சுயத்தில் உரசிப்பார்த்து நிறைவுடன் வெந்து கழிக்கிறார்கள் என.

***************************
உங்களுக்குத்தெரியுமா ஆசீர்வதிக்கும் ஒவ்வொரு கடவுளும் ஒழுக்கத்தின் மீதிருக்கும் தனதான காதலை தங்கள் உள்ளங்கையில் பொங்கச் செய்வார்களென.

*****************************



5.4.10

வேட்கையின் இலக்குகள்

வரிகளில் மறைத்த பொறிகளை இலகுவாக கண்டடைகிறாய் . அவமானம் பிடிங்கித்தின்கிறது . இலக்குகள் எல்லாவற்றிற்கும் உன் சாயலை கொண்டுவந்து பூசுகிறாய். நான் எதை வீழ்த்தினாலும் நீ விழுவது தற்செயல் அல்ல என்பதை சொல்கிறது உன் நங்கூரத்திலகம். சாட்டைகளையும் குருவாள்களையும் அடுக்கிய பெருஞ்சிப்பமொன்றை சுமந்தலையும் என்னிடம் உன் நீண்ட மெல்லிய விரலின் நகங்களை பூவாக்கி கொய்யச்சொல்கிறாய். மரணம் என்பது நெடிய வாழ்வின் தடம். அன்பு தடவிய என் அம்புகளுக்கு பலியாவது இலக்குகளின் கடன்.

**********************************

யாசிப்பிற்கு பிடிபடாதது நமதான வேட்கை. பிச்சைபொருளும் அன்று. பசிய இலையொத்த பறவைகளின் அலகில் சிக்கிக்கொள்ளும் விதையுள் தவறிய பெருவிருட்சம் அது. விசும்பில் கிளைபரப்பி நினைவுகளில் வேர்கொள்ளும் ரணம். முரணாக நீயும் நானும் கேட்டலையும் அந்தக தாகத்தை கையில் பிடித்தபடிக்கு கானகம் அலையும் சில்வண்டுச்சிறுமியை பின்தொடர ஏதுவான வாகனம் ஒன்று மூன்றாம் இரவின் நிறத்தில் திரியும் எருது. நீலாற்றின் கரையில் கடைசியாய் அச்சிறுமியை கண்டடையும் போது கையில் திணித்தாள் ஒரு சுளை வெயிலை.

**********************************

1.4.10

சொல்லுவதெல்லாம் பொய் 10


வீடு வந்துவிட்டாயா. மார்கழர் கேட்ட கேள்வி எனக்கு பிடிபடவில்லை. எரிமீனின் தினவு தீரவில்லை இளைஞா.. உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறது. உன் பூர்வம் அப்படி. அபூர்வத்தின் கிரகச்செர்க்கை. வா என்னுடன், பேசலாம் நாம். மறுத்துப்பேச தோன்றவில்லை. ஆனாலும் பயம் தாண்டிய மனத்தூண்டல் எனக்குள் அலைக்கழித்தது. அவர் தொடர்ந்து பேசத்தொடங்கினார். இன்றிலிருந்து மூன்றாம் பௌர்ணமி வரை நீ என்னுடன் தங்கு. உனக்குச்சேரவேண்டியத்தை அதற்குள் நான் கொடுத்துவிடுகிறேன். உன் மனக்குழப்பம் எனக்கு புரிகிறது என்பதை சொல்லத்தான் வேண்டுமா. நீ அவ்வளவு எளியவனும் இல்லை. எத்தனை நாள் ஆயிற்று. நான் அவரை பார்த்தேன். மெலிந்த தேகம். உடலுறுதி குழையத்தொடங்கியிருந்தது. நீண்ட கேசம். நரையில்லை. முகம் திருத்தமாக சவரம் செய்யப்பட்டிருந்தது. நாசிக்கு இடப்புறம் கருமிளகு அளவில் ஒரு மரு இருந்தது. நாசிக்குக் கீழிருந்த முடிக்கற்றைக்கு அது ஒரு சிறிய தலைப்பாகை போலிருந்தது. இடைக்கச்சு மட்டுமிருந்தது. உடலில் எந்த திரவியப்பூச்சும் இல்லை. உயரமான உடம்பில் நீண்டிருந்த கைகளும் கால்களும் ஆலமரவிழுதுகளை நினைவூட்டின. நிதானமான நடை என்றாலும் ஒவ்வொரு எட்டும் இரண்டரை அடிக்கு மேல் போயின. நான் அவரை பின்தொடர சற்று வேகம் காட்டவேண்டியதை தெரியாமல் இருக்க அவ்வப்போது ஒரு செருமலை வெளியேற்றினேன். சொல் எப்படி வந்தாய் மாந்தைக்கு. அதற்குமுன் உன்னை எப்படி விளிப்பது.
இந்த குரல் ஒரு கட்டளைப்போல் என்னுள் இறங்கியது. உடல் நடுக்கத்தை உடனடியாக சீராக்கியது. ஒருவித இளைப்பாறல் மனநிலையை ஏற்படுத்தியது போன்றதொரு சூழலில் நான் சொல்லத்தொடங்கினேன். எல்லாவற்றையும்.

கணமற்றதொரு கணம். வாசப்படியில் உக்காராதே என்றால் கேட்க மாட்டாயா. எத்தனைமுறை சொல்வது.

சென்னி என்று என்னை விளிப்பர். எனக்கு பூழிநாடு. அய்யன் எருது காப்போன். அம்மை திருமேனி. பால்காரி. கீழ்மலை ஒட்டிய தயாபுரி கிராமம் என்னை வளர்த்தது. கூடவே வளர்ந்தது மூவேழு எருதுகள். மணம் பேசினார்கள். பிடிக்கவில்லை. கிளம்பிவிட்டேன். மர்கழரின் சிரிப்பொலி கேட்டு நிறுத்தினேன். பங்குனி முதல்நாளில் உச்சியில் வெளியேறினாயாக்கும்.. சிரிப்பில் ஏலனமில்லை. துயரமிருந்தது. அவள் பெயர் என்ன. யார் பெயர். உன்னை மணம் முடிக்கப்போகும் பெண். நான் அவளை மணம் முடிக்கப்போவதில்லை. யாரை. மேருநடையாரின் புதல்வி அல்லிக்கன்னியை. ஹா..ம்ம் .. இது வெகுநீண்ட கதைதான். கேள் இன்று முதல் மூன்று திங்களுக்கு நான் உன் குரு. ஆனால் என்னக்கு நீ மட்டும்தான் மோட்சம். எனது வேள்விக்கு பதில்நீ. உவகை பொங்குகிறது. உன் விதி உன்னை வழிநடத்தும். என் பாரம் இறங்கியதும் நான் சென்று விடுவேன். இனி தூக்கிச்சுமப்பது உன் வினைப்பயன். பயம் கொல்லாதே. போகப்போக விளக்குகிறேன். அவளைப்பார்த்தாயா. இல்லை. ஆனால் அவள் உன்னைப்பார்த்தாள். இல்லை, அவள் என்னைப் பார்த்ததில்லை. இளைஞா.. சென்னி..என்றே இனி அழைக்கிறேன். நான் சொன்னது நல்லினியை. கன்னியை சிலகாலம் நீ மற. அவளை உன்னை கண்டடைவாள் ஒரு சிறு புயல் போல.

நான் மர்கழன். கூடல் என் ஊர். கூடலூர்கிழார் என்கிற கவிஞன். தொழில் வான சாஸ்த்திரம். என் கணிப்பில் இறந்தவந்தான் இன்று சிதையேறிய அத்துவன். எனது வாழ்த்து மீறி வினை வெற்றிகொண்டது அவனை. என் கணிப்பின் மிச்சம் நான் எவரிடத்திலும் சொல்லவியலாது. இவ்வுலகத்தில் அது எனக்கும் நான் சொன்னபின் நல்லினிக்கும் மட்டுமே ஆன ரகஸ்யம். ரகஷ்யத்தின் மூலப்புள்ளி நீ. சென்னி, இன்றிரவு என் இருப்பிடத்தில் வந்து ஆழ்ந்த உறக்கம் கொள். ஏனென்றால் நாளை முதல் மூன்றாம் பௌர்ணமி வரை உனக்கு இரவு தூக்கம் கிடையாது. வானத்தைக்கற்றுகொள்ள இரவுதான் மிகச்சரியான காலம்.

வான சாத்திரம் என் வித்தை. அதைத்தான் நான் உன்னுள் இறக்கப்போகிறேன்.

******************

தொடரும்..

***************

குள்ளச்சாத்தான்


UTV- world movies - ல் இந்த படத்தை மீண்டும் பார்த்தேன். படம் முடிவதற்குள் அழுகை கோபம் சிரிப்பு பொறாமை சோகம் தாபம் இன்னும் என்னென்ன உணர்வுகளுக்குள் நுழைந்து வெளியேற வேண்டும்? படத்தை எடுத்தவனுகளை கையெடுத்து கும்பிடவேண்டும். மனிதர்களின் முகபாவங்களை இவ்வளவு துல்லியமாக காட்டமுடியுமா என்ன? இத்தனைக்கும் படம் முழுவதும் fast farward - ல் இருக்கும். படத்தில் வசனங்கள் வேறு கிடையாது. படத்தின் விமர்சனங்களை எதையும் படிக்காதீர்கள் படம் பார்க்கும் வரை.



*************************

முட்டாள்

தினமும் சுமக்கமுடியாத அளவுக்கு முட்டாளாகிக்கொண்டிருக்கிறேன், இந்த வள்ளலில் என்னை ஒரு விட்டுபோன நண்பர் குறுஞ்செய்தி கொடுத்து முட்டாள் பட்டத்தை உறுதிசெய்தார். முட்டாளாய் இருப்பது துயரமில்லை. முட்டாள் என்று தெரிந்தே இருப்பதுதான் துயரம். வாழ்க என் துயரம். எனவே.. நானொரு முட்டாளுங்க!
******************
பசங்களுக்கு வருட முழுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. வலைப்பதிவர்கள் தங்களது வாரிசுகளின் சேட்டைகளை பெருமை பொங்க பதிந்து தள்ளுகிறார்கள்! நல்லதுதான். புத்திர பாசம். ஜெயமோகன் தனது மகனின் அருமைகளை ஒரு அற்புதமான தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து எழுதி தள்ளுகிறார். படிக்கிறவர்கள் எம்பையனும் அல்லது எம்பொண்ணும் இருக்கே.. ஹ்ம்ம்..என்கிற அளவுக்கு காதுகளில் புகை கிளப்புகிறது அவரது ஹிப்னாடிச வரிகள். உண்மை எந்த பொந்தில் அரவங்களுக்கு இறையாகிக்கொண்டிருக்கிறதோ(தெரிந்தே தான் 'றை' போட்டேன் மக்கா). என் புத்திரன் விழுந்து விழுந்து அறிவியல் படித்து தேர்வுக்கூடத்துக்கு போயிருக்கிறான். வினாத்தாளில் படித்த ஒன்றையும் காணவில்லை. பத்து நிமிடம் இது அறிவியல் பாட வினாத்தாள் இல்லை என முடிவுசெய்து மேடத்தை அணுகி கேட்க. ஆங்கில இலக்கியத்துக்கு இதுதான் வினாத்தாள் என்றிருக்கிறார்கள். இன்னைக்கு என்ன பரீட்சை என்று கேட்டு விட்டு பொறுப்பை விதியின் மீது போட்டு எழுதிவிட்டு வந்திருக்கிறான்! கேட்க சந்தோசமாய் இருந்தது. எம்பையனாச்சே..! விழுந்து விழுந்து சிரித்ததை தான் என் மனைவி பொறுக்கவில்லை.
******************
சொல்லுவதெல்லாம் பொய் - ல் வேறொரு கதவை திறந்திருக்கிறேன். முழுக்க எனது ஞாபகத்துனுக்கில் கிளம்பிவரும் வரலாற்று தகவல்களையே கற்பனை செய்து தொடங்கியுள்ளேன். வரலாற்றுப்பிழை என்று ஏதேனும் தென்பட்டால் அதை பிழையின் வரலாறு எனக்கொள்ளவும். நான் சொல்லவந்தது இதில் ஏதாவது பிறமொழி வார்த்தையோ சமகால வார்த்தையோ இடைபட்டு இம்சித்தால் சுட்டவும். நான் கற்பனை செய்யும் காலம் கி பி நூற்று ஐம்பத்து ஆறாம் வருடம்!

**************************
அனைவர்க்கும் முட்டாள்தின வாழ்த்துக்கள்.
***********************