17.5.10

புதியதளம்

எனது பதிவு தள பெயரை மாற்றியுள்ளேன். தொடர்ந்து எனது பதிவுகளை வாசிக்க கீழே குறிப்பிட்டுள்ள இணைப்பை பயன்படுத்தியோ அல்லது நேரடியாக தளப்பெயரை தட்டச்சு செய்தோ எனது தளத்திற்கு வருகை தருமாறு வேண்டுகிறேன். நன்றி.

http://theethumnanrum.blogspot.com/

***********************************************************************************

5.5.10

அற்றவை நிரம்பிய தேகம்

கற்றவை கரையும் கானுறை ஞானம்
சற்றவை மறைய களிபெறும் மோனம்
மற்றவை தேடிடா மதிவானின் போதம்
அற்றவை நிறைந்திட்ட அந்தியின் நாதம்

முற்றவை விலகிடா முற்றத்து வானம்
சிற்றவை அடங்கிடா கருமுகிழ் தானம்
கூற்றவை முற்றிடா குறுந்தமிழ் பானம்
கொற்றவை என்றொரு காடேகும் மௌனம் - திக்

கற்றவை நிரம்பிய விசும்பிடை வாசம்
பெற்றவை யாவிலும் தண்பனி வீசும்
உற்றவை பற்றிய ஊனுயிர் தாகம் - அமிழ்து
மற்றவை நிரம்பிய கலயமுன் தேகம்.

*******************

1.5.10

சித்திரைப் பௌர்ணமி




சித்திரைப் பௌர்ணமி. இம்மாதம் எனது மொபைல் கேமராவில் எடுத்தது. ஒவ்வொரு வருடமும் சித்திரையில் பௌர்ணமியை பார்ப்பது எனக்கு பிரார்த்தனை. இம்முறை கடுமையான வேலைப்பளுவுன் இடையில் கிடைத்த நேரத்தில் எடுத்தது. இடம் திருச்சி பொன்மலை அருகில்.
இந்த படம் தொடர்பாகவும் கவிதை எழுத நண்பர்களை அழைக்கிறேன்.
...................................

ஒளிரும் மரம்

கால்பரீட்சை ஒரு பாவச்செயல்.
அரைப்பரீட்சை ஒரு பெருங்குற்றம்.
முழுப்பரீச்சை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்
.

மாணவர்களின் கற்பனைக்கு ஒரு தலைவணக்கம். இதை ஒரு மாணவனின் தமிழ் புத்தகத்தில் பார்த்தேன்! தீண்டாமை என்னும் வார்த்தயை பென்சிலால் அழித்து மேலே எழுதியிருக்கிறான். பார்த்தது நாலைந்து வருடமிருக்கும். முதல் தடவை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பும் சிரிப்பும் இன்னும் மாறவில்லை. ஒரு அசட்டு சிரிப்பும் வெட்கமுமாய் அந்த புத்தகத்தை வாங்கி பைக்குள் திணித்துக்கொண்டான் அந்த ஆறாவது வகுப்புக்கு போகப்போகும் மாணவன். இந்த வருடமும் பரிட்சை முடிந்து கோடை விடுமுறையை அனுபவிக்க தொடங்கிவிட்டார்கள் மாணவக்கண்மணிகள். என்னனென்ன செய்வார்கள் என்று பார்த்தால் பெரும் பரிதாபமே மிஞ்சுகிறது. அவர்களின் அறுபது சதநேரத்தை தொலைகாட்சி கொன்றுவிடும். முட்டாள்தனத்தின் உச்சமான சம்மர் கோச்சிங் சில பல நூறுகளைக் கொல்லும். எல்லோருக்கும் வாய்க்காது இன்பச்சுற்றுலா. உறவினர் வீட்டுக்கோ கிராமத்து சூழலுக்கோ செல்லும் பழக்கம் அருகி விட்டது. என் பையன்கள் ஒரு நாளைக்கு ஐந்தாறு முறையாவது போரடிக்குது என்கிற வார்த்தையை பிரயோகிக்கிறார்கள். மனம் பயந்து தவிக்கிறது. அவர்கள் விரும்பும் ஒவ்வொரு பொழுதுபோக்கு முறையும் பெரும் செலவின வகைகளாய் இருக்கிறது. மக்கள் அவற்றைப்பற்றி பெரிதாக அக்கறைப்படவும் செய்வதில்லை. செலவு குறைவான உருப்படியான பொழுதுபோக்குகளை பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள். குழந்தைகளின் வயதுக்கு தக்கவாறு. நான் பரிதுரைக்கும் ஒரே பொழுதுபோக்கு நம் தொன்மைக்கதைகளை சொல்லியும் நடித்துக்காட்டும் பழக்கத்தை உருவாக்குவதும். நடனம் நல்லதுதான். ஆனால் சினிமா பாடல்களுக்கு அல்ல.


******************
இடிமின்னல்களுடன் கலைகட்டுகிறது கோடைமழை. இப்படி வெயிலில் பெய்யும் மழைக்கு காத்திரமான மண்வாசனையுண்டு. மேலும் இதன் மாலை நேர மேகம் அற்புதத்திலும் அற்புதமானவை. அநேக நேரங்களில் வெள்ளிச்சாம்பல் வண்ணத்தில் மின்னிப்பரவும். அதன் பின்புலத்தில் வெட்டும் மின்னல் நமக்கு கடவுளை காட்டும் அளவு வெளிச்சம் அளிக்கும். நின்று பெய்யும் மழையும் அதன் சத்தமும் மாலை மின்னலும் நம் பால்யத்தின் மிக நுணுக்கமான சுருள்களை விரிக்க வல்லவை.

*****************************

மின்மினிப்பூச்சிகளின் ஒளி திரவத்தை மரங்களில் செலுத்துவதின் மூலம் ஒளிரும் மரங்களை உருவாக்கலாம் என்றும் தெருவிளக்கு கம்பங்களை அகற்றி தெருவிளக்கு மரங்கள் ஏற்படுத்தலாமென்கிற சாத்தியப்பாடுகளை திட்ட வரைவில் நிரூபித்த திருச்சியை சேர்ந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தெருவெல்லாம் ஒளிரும் மரம் என்கிற அற்புத படிமத்தை கவிதையாக்க சிவகுமாரை அழைக்கிறேன். குட்டையாய் இல்லாமல் நீண்ட கவிதையாய் வந்தால் நன்று. மற்றவர்களும் முயலலாம்.

***********************