1.4.10

குள்ளச்சாத்தான்


UTV- world movies - ல் இந்த படத்தை மீண்டும் பார்த்தேன். படம் முடிவதற்குள் அழுகை கோபம் சிரிப்பு பொறாமை சோகம் தாபம் இன்னும் என்னென்ன உணர்வுகளுக்குள் நுழைந்து வெளியேற வேண்டும்? படத்தை எடுத்தவனுகளை கையெடுத்து கும்பிடவேண்டும். மனிதர்களின் முகபாவங்களை இவ்வளவு துல்லியமாக காட்டமுடியுமா என்ன? இத்தனைக்கும் படம் முழுவதும் fast farward - ல் இருக்கும். படத்தில் வசனங்கள் வேறு கிடையாது. படத்தின் விமர்சனங்களை எதையும் படிக்காதீர்கள் படம் பார்க்கும் வரை.



*************************

முட்டாள்

தினமும் சுமக்கமுடியாத அளவுக்கு முட்டாளாகிக்கொண்டிருக்கிறேன், இந்த வள்ளலில் என்னை ஒரு விட்டுபோன நண்பர் குறுஞ்செய்தி கொடுத்து முட்டாள் பட்டத்தை உறுதிசெய்தார். முட்டாளாய் இருப்பது துயரமில்லை. முட்டாள் என்று தெரிந்தே இருப்பதுதான் துயரம். வாழ்க என் துயரம். எனவே.. நானொரு முட்டாளுங்க!
******************
பசங்களுக்கு வருட முழுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. வலைப்பதிவர்கள் தங்களது வாரிசுகளின் சேட்டைகளை பெருமை பொங்க பதிந்து தள்ளுகிறார்கள்! நல்லதுதான். புத்திர பாசம். ஜெயமோகன் தனது மகனின் அருமைகளை ஒரு அற்புதமான தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து எழுதி தள்ளுகிறார். படிக்கிறவர்கள் எம்பையனும் அல்லது எம்பொண்ணும் இருக்கே.. ஹ்ம்ம்..என்கிற அளவுக்கு காதுகளில் புகை கிளப்புகிறது அவரது ஹிப்னாடிச வரிகள். உண்மை எந்த பொந்தில் அரவங்களுக்கு இறையாகிக்கொண்டிருக்கிறதோ(தெரிந்தே தான் 'றை' போட்டேன் மக்கா). என் புத்திரன் விழுந்து விழுந்து அறிவியல் படித்து தேர்வுக்கூடத்துக்கு போயிருக்கிறான். வினாத்தாளில் படித்த ஒன்றையும் காணவில்லை. பத்து நிமிடம் இது அறிவியல் பாட வினாத்தாள் இல்லை என முடிவுசெய்து மேடத்தை அணுகி கேட்க. ஆங்கில இலக்கியத்துக்கு இதுதான் வினாத்தாள் என்றிருக்கிறார்கள். இன்னைக்கு என்ன பரீட்சை என்று கேட்டு விட்டு பொறுப்பை விதியின் மீது போட்டு எழுதிவிட்டு வந்திருக்கிறான்! கேட்க சந்தோசமாய் இருந்தது. எம்பையனாச்சே..! விழுந்து விழுந்து சிரித்ததை தான் என் மனைவி பொறுக்கவில்லை.
******************
சொல்லுவதெல்லாம் பொய் - ல் வேறொரு கதவை திறந்திருக்கிறேன். முழுக்க எனது ஞாபகத்துனுக்கில் கிளம்பிவரும் வரலாற்று தகவல்களையே கற்பனை செய்து தொடங்கியுள்ளேன். வரலாற்றுப்பிழை என்று ஏதேனும் தென்பட்டால் அதை பிழையின் வரலாறு எனக்கொள்ளவும். நான் சொல்லவந்தது இதில் ஏதாவது பிறமொழி வார்த்தையோ சமகால வார்த்தையோ இடைபட்டு இம்சித்தால் சுட்டவும். நான் கற்பனை செய்யும் காலம் கி பி நூற்று ஐம்பத்து ஆறாம் வருடம்!

**************************
அனைவர்க்கும் முட்டாள்தின வாழ்த்துக்கள்.
***********************

31.3.10

சொல்லுவதெல்லாம் பொய் 9

கணம் ஒன்றின் சாத்தியப்பாடுகள் என்னென்ன.

அநேக நேரங்களில் ஜாதககாரனாகவும் பூர்வத்தில் கதைசொல்லியாகவும் இருக்கும் அவன் இன்றயதினத்தில் பங்குனி உத்திரமாம் பௌர்ணமியில் பால் பொழியும் நிலா பார்க்க மிதிவண்டியில் சாலை கடக்கும்போது வகையறியாத வாகனத்தில் அடிபட்டு சாலையோரம் வீசப்பட்டான். அவனுக்கு நினைவு தப்பும் கணத்துக்கு முன்: அப்பா.. பேய்களுக்கு தப்புவித்து கைப்பிடித்து குளம் கடத்தி வீடு சேர்த்துவிடு என்னை.. என்கிற பின்னி மோஸசின் கவிதை வரிகளும் சில துளிகள் கண்ணீரும் உணர்ந்தான். குருதி அவன் சிரசில் வழிய அவன் கோமாவில் எழுந்தான்.

********************************

நான் மாந்தரநாட்டுக்கு நுழைந்தபோது பங்குனி இருபத்தியோராம் நாள். மன்னன் அத்துவன் உடம்பில் பொட்டு புண்ணில்லாமல் மூக்குப்பீளை நோய் தாக்கி மாண்ட தினத்தில் என் வருகை இருந்தது. மேழ ஓரை கார்த்திகை நாளில் பங்குனி பதினைந்து தினத்துள் உச்சமைடையும் உத்தர மீன். அந்த உத்தரம் கீழ் சாய எதிர்மேல் எழும் பின் எட்டாம் மீன் மூலம். மூலம் எழ முன் எட்டாம் மீன் மிருகசீரி துறை தாழும். அக்கணத்தில் எரிந்து கருகும் பெருமீன் ஒன்று கிழக்கோ வடக்கோ நகராது நிலத்தில் பெருவெளிச்சம் காட்டி வீழும். வீழ்த்த ஏழாம் நாள் அத்துவன் மரணிக்க, நான் நகர் நுழைந்தேன்.

மன்னனின் ஈமத்தில் கலக்க நேரிட்டது ஊழ்சாபம். குடநீரும் குடிப்பூவும் கொண்டுசெல்லும் வரிசையில் நான் என்னை நுழைத்துக்கொண்டேன். தீப்பந்தங்கள் வெளிச்சம் காட்ட இரண்டு பெரும் வேப்பமரங்களின் நடுவில் அவர்கள் கூடியிருந்தார்கள். அரண்மனை வாசிகள். தோற்றம் பொழிவு கலைந்திருந்தது. தீப்பந்த வெளிச்சம் எழுசூரியனின் மெல்லிய வண்ணத்தில் அடர் இருளில் பரவியிருந்தது. ஒரு சிறு பெண்டிற்கூட்டம் மரத்தடியில் ஒரு பொழிவான பெண்ணை சுற்றி நின்றிருந்தது. அவளது பொழிவு அவளது இருப்பிலேயே தெரிந்தது. மஞ்சள் துகிலில் அவளுடம்பு சுற்றப்பட்டிருந்தது. சூரியனிடம் பெறும் வெளிச்சத்தை பிரதிபலிக்கும் மஞ்சள் திங்கள். முகம் காணமுடியவில்லை எனக்கு. ஆண்களின் கூட்டம் சற்று பரபரப்பானது. தொலைவில் இருந்த குரும்பனையுயர சுவர்களில் சீரான இடைவெளியில் தீப்பந்தங்களுடன் ஆட்கள் நின்றிருந்தார்கள். இருட்டுக்குள்ளிருந்து ஒரு காத்திரமான சங்கொலி எழுந்தது. கட்டிலில் கிடந்த அத்துவன் உடலைச்சுற்றி அவர்கள் நின்றார்கள். தோள் அகன்ற கருத்த வீரனொருவன் இடைக்கச்சையில் தொங்கிய வாளை உருவி மிகப்பணிவான உடலசைவுகளுடன் அந்த உடம்பின் மார்பில் குறுக்காக நீண்ட ஒரு கிழிப்பை செய்தான். இடது மார்பிலிருந்து வலது வயிற்றிக்கு கீழ் வரை தோல் பிளந்தது. குருதிக்கசிவு இல்லாத அந்த பிளவில் வெண்மையான உட்தோல் தெரியவும் சுற்றியிருந்தவர்கள் முகத்தில் ஒருவித சிலிர்ப்பு தோன்றியதாகப் பட்டது எனக்கு. பின் சடங்குகள் விரைவாக நடந்தேறின. நான் இருளும் வெளிச்சமும் ஒன்று கூடும் கணத்தில் நல்லினியின் முகத்தைப்பார்த்தேன். நல்லினி. அத்துவனின் மனைவி. பட்டத்து அரசி. மாந்தர நாடு அவள் வசம். பிள்ளைப் பேரற்றவள்.

கணமற்றதொரு கணம். குளத்திற்குள்ளிருந்து வெளியேறும் குறுமுனிச்சூலி அப்பாவின் அதட்டலுக்கு அடங்கிப்போனது.

உழிஞை கொண்டுவாடா என்றதட்டும் குரல் என்னை நோக்கி வந்தது. அவள் என் கையிலிருந்த பூக்களை வாங்கி மன்னனின் உடம்பு நோக்கி நடந்தாள். அவள் பார்வை என் விழியை தொட்டு மீண்டது. துலக்கமில்லை. துக்கமில்லை. வெற்றுப்பார்வை. புதரிருளில் ஒதுங்கினேன். தொடைக்குக் கீழ் கெண்டை சதை நடுங்கியது. அரை நாழிகையில் தீப்பந்தத்துடன் அருகில் வந்து நல்ல வெளிச்சத்தில் என் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு கடுமையான சிரிப்பை மற்றவர் அறியாமல் உதிர்த்த கூடலூர்கிழாரை முதன்முதலில் பார்த்தேன். மொத்த உடம்பும் நடுங்குவதை உணர்ந்தேன்.

***************************

தொடரும்.

29.3.10

சொல்லுவதெல்லாம் பொய் 8

அந்தரச் சொல்லொன்றில் மெல்லிய நூல்கட்டி தொங்கவிடுகிறேன் என்னை. குன்டூசல் போல குறிப்பிட்ட இடைவெளியில் சோர்வுறாமல் இடமும் வலமுமாய் ஆடும் என்னை குறிவைக்கின்றன உனது நிதானமும் துரோகமும். கடக்கிறது காலம் 'கலுக்.. கலுக்' என்கிற மெல்லொலியில். தப்பப்போவது இல்லை இம்முறை இரண்டு குறிகளும். இடப்பக்கம் நான் வர உன் நிதானம் என்னை வீழ்த்தும். வலப்பக்கம் நான்வர உன் துரோகம் என்னை வீழ்த்தும். என்னால் செய்யமுடிந்ததெல்லாம் என்னை இரட்டை இலக்காக உன் முன் நிறுத்தியதுதான். இரண்டு இலக்குகள். இரண்டு வீழ்ச்சிகள். ஒரே நேரத்தில். அச்சம்.

குறுக்குச் சுவர்மீது குறிப்பிட்ட வீசை எடைகொண்டு பொன்வண்ண வரிகொண்ட வெளிர்சாம்பல் நிறப்பூனை எதிரெதிர் திசையில் நடக்க எனது ஒவ்வொரு விழியும் தனித்தனியாக அவற்றை பின்தொடர்வதை அறிகிறாய் வெயிலொழுகும் பகல் ஒன்றின் மத்தியில். சமநிலை இழந்த என் கால்நடை பிறழ்ந்து கீழிறங்கி செல்லுகிறேன் தனிமை வழி. மௌனம்.

நீர் வராக்குழாயடியில் அதே பகலில் வெற்றுப்பானையுடன் நிற்கும் தாவணிப்பெண்ணின் வியர்வைக் கோடுகள் போல திசையறியாது வழுக்கியோடுகிறது என்னுள் உனதான கூர் அவதானிப்புகள். கூரைமீதேறி நிற்கிறேன். வழியும் சொட்டுகள் ஈர்க்குச்சி முனைகளில் நிதானமாக சேகரமாகின்றன. ஊறும் அரவத்தின் அதிர்வு போதும் சொட்டுகள் உதிர. விழுகிற ஒவ்வொரு துளியும் வெற்றுப்பானையில் நிரம்பினால் சாந்தமடைவேன் என்கிற உன்னிடம் சமர் ஒன்றுமில்லை. அமைதி.

****************************************************

மழைபெயர்ப்பு. ஒரு நிராதரவான வேளையில் நீ என்னை கொல்ல உத்தேசித்திருப்பதாக ஒற்றனின் கூற்றை கருமேக நடுவில் சமிக்கையாக நான் கண்ட பொழுது வீழ்கிறது மழை.

கொலை என்பது ஒரு எளிமைகூடிய வீகரமான தாதுப்பொருள் என்பதையோ அது எல்லாவற்றிற்குமான ரசாயன மாற்றத்தின் மூலப்பொருள் என்பதையோ அறியாத என் அறியாமையை கழுவித்துடைக்கிறது இந்த மழை.

அகன்றுவிட்ட அறியாமையின் முதல்தாகம் குருதிஎன்பதை உன் விபூதியும் வவ்வால்கழிவும் கலந்த சுகந்தம் எனக்குணர்த்துவதை மறைக்காமல் என்முகபாவத்தை மணலள்ளி பூசுகையில் மீண்டும் கழுவி வெளியேற்றுகிறது மழை.

வாய் நிறைய குருதிவழியும் ஓநாயின் படமொன்றை ஒற்றனின் சட்டைப்பையில் திணித்து கழுத்தறுத்து கொல்கிறேன் அவனை உன் பார்வைக்கு படும்படிக்கு. வழிந்தோடும் திசையனைத்தையும் என் இருப்பின் பாதைகளாக மாற்றுகிறது எனை நோக்கி நீ வர, தோதாக மழை.

வா. இம்மழை என்னுள் வெளியேற்றும் வெக்கையை எனைக்கொன்று அடக்கு. பின்னும் வா. என்னுடல் தின்ன. என் சாபத்தால் உன் தாகம் தீர்க்க விடாது தொடரும் இந்த மழை.

******************************

மதுவுண்ண தொடங்கி விட்டான் கலிபுத்தன். கோரைப்பற்கள் உதடு தாண்டி நீள்வதை சிரிப்பின் அடையாளமென்கிறான். சுய போதனையில் துப்பும் எச்சிலில் உடையும் ஆடியில் ஆயிரமாயிரம் பிக்குகள் சிரித்து நெளிகிறார்கள். உடல் கூசி விஹாரம் நுழைந்து யசோதரையை கொல்கிறான் மீண்டுமொருமுறை. தலைக்குமேல் கைகளை தூக்கி கும்பிடும் அவனது விலாவில் முளைத்த வேனல் கட்டியில் குவிகிறது உயிர். ரணம் குணமாகும் மருந்தென காரணம் கண்டடைகிறான். இந்த எளிய புத்தன் மதுவுண்ண தொடங்கிவிட்டான் மீண்டும். கலிபுத்தன்.

பாவம் சரணம் கச்சாமி....

போதம் சரணம் கச்சாமி...

மரணம் சரணம் கச்சாமி...

*******************************

26.3.10

பச்சையிலை.

பால்யம். அடைகாக்கும் காக்கைச்சூட்டில் வெளியேறும் குயில். நிராதரவான பகலுக்கும் நிர்பந்தமற்ற இரவுக்கும் இடையில் அது கூவுகிறது. திறக்கிறது உயிர். அதன் மரத்தில் காற்றுக்கு நடுங்குகிறது இளம்பச்சை இலை. உதிரும் போது காற்றில் நடுங்குகிறது இலை. வீழ்ந்த நதியில் இலையை நடுங்கச் செய்கிறது ஓடும் நீர். மழையில் துவளும் போதும் நீரில் அமிழும்போதும் நடுக்கமடங்குகிற இலையில் முதிர்கிறது பச்சை.

நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் மணிக்கட்டில் வைத்து வித்தைக்காட்டும் அண்ணனின் விரல்கள் பார்த்து வியக்கிறாள். அடர்வெளிச்சத்தில் விரிகிறது கண்கள். காணாமல் போன பந்துக்கான அழுகையை மறந்து வைக்கிறாள். உருட்டி கொடுத்த சோற்றை கையில் வாங்கி மீண்டும் தட்டில் வைத்து பந்து கேட்டு அழத்தொடங்கும் தங்கையின் அறிவை வியக்கிறான்.

தாத்தாவிடம் தான் தனது முதல் நடையை செய்து காண்பித்தான் தம்பி. வாரியணைத்த தாத்தாவிடம் மீண்டும் நடக்கவிடுவென சொல்லி பூரிக்கிறாள் பாட்டி. தெருப் பெண்களை மாட்டுவண்டியில் அமர்த்தி மாட்டுகாரவேலனைப் பார்க்க போன தாத்தாவின் உருமாளில் சொக்கிய பாட்டிக்கு பதினாலாவது பேரன் தம்பி. எளிமையாய் கடந்தது அவர்களின் மரணம் துளி கண்ணீரில்லாமல்.

ஊதாப்பூ மொக்கவிழ்வது போல விரிகிறது. உதிர்கிறது அந்தியில். அதன் மணம் நீர் தின்ற புழுதியின் வண்ணம். நின்ற மழை பெய்யும் பொருட்டு நிமிர்கிற நேரத்தில் சருகான இலையின் பச்சையில் கூடியிருக்கிறது கருமை. பால்யம்.

**********************

நூறாவது பதிவு. அய்யோடா..!

**********************