25.10.09

தொலைவான ஓரிரவு

என் அம்மா ..
உன் ஒரு முலையிலிருந்து மறு முலைக்கு
என் உதடுகளை மாற்றிக்கொள்ளும் நேரமிது.
பிரிவென்று கருதாதே.

என் தமக்கையே நெடுவழியில் நான்
உன் சுட்டுவிரல் விட்டு நடுவிரல்
நுடுவிரல் பற்றிக்கொள்ளும் பொழுது இது
தீண்டளற்ற இடை நொடி
தனிமையோ என்று திகைக்காதே.

என் தங்கையே உன்னை தியானிக்கும்
என் மனம் இமைக்கும் தருணமிது.
அச்சமய இருட்டில்
நீ மிரளாதிரு.

உறங்கு என் மகளே
தோள் மாற்றி சுமக்கவே உன்னை
என் நெஞ்சிலிருந்து அகற்றுகிறேன்
ஐயோ இது விலகலோ என்று
திடுக்கிட்டு விழித்துவிடாதே.

சகலமும் ஆன பிரியமே
இன்று நாளெல்லாம் உன் நினைவால்
எத்தனை முறை மனம் ததும்பி
கண்ணீர் வரப்பார்த்தது...


யூமாவாசுகியின் என் தந்தயின் வீட்டை சந்தையிடமாக்காதீர் என்ற தொகுப்பிலிருந்து.

1 கருத்து: