31.10.09

எலிகாலம்

1

அவனுடையது ஒழுங்கான வீடு

அவன் ஒழுங்கானவன் அல்ல

தன் சகோதரர்களின் நண்பர்களின்

தெருவாசிகளுடைய குழந்தைகளின்

பெற்றோரின் மற்றும் நகரத்தின்

மற்றவர்களின் பழக்கத்தில் இல்லாததான

பாதாள சாக்கடையிலிருந்து தினமும்

பின்னிரவில் வீடு நுழையும் ஒரு

எலியுடன் பழகத்தொடங்கினான் . பளுத்த

எலி வால் நீண்டது

கரும் இருளின் சொட்டுக்களாய்

இரண்டு கண்கள் இரண்டு

வெளிச்ச புள்ளிகளை பிரதியெடுக்க

அலைபாயும். தேவகணத்தில் இருவரும் நெருக்கமானார்கள்

நகரின் அனைத்து வீடுகளுக்கும்

பாதாள சாக்கடையில் ஒரு வாசலிருப்பதை

அவனுக்கு பகிங்கிரப்படுத்தியது எலி

பின்பாக அவ்வெலி புத்தகங்களை

மட்டும் தின்று செழித்த காலத்தில்

அனைத்தையும் அறிந்த அவன்

நகரின் ஒழுக்க சீலன் என அறிவிக்கப்பட்டான்

எச்சில் ஒழுக உறங்கிக்கொண்டிருந்த

எலி வருவதற்கான முன்னான பொழுதில்

அவன் கனவின்கல்லில் பதித்த வாசகத்தை

உறக்கப்படித்தேன்

'புத்தகத்தை தின்பதும் மற்றவர்களின்

அந்தரங்கத்தை அறிந்து கொள்வதும்

ஒழுக்கத்தின் முதல் பாடமென...

2

அவனுடைய குப்பைத்தொட்டியை

தனது வீடாக்கிக்கொள்ள சம்மதங்கேட்ட

எலியை பரிதாபத்துடன் பார்த்து சம்மதிக்கிறான்

எலி தன் துணைஎலியுடன்

நிறைந்த அம்மாவாசையில் பால்காய்ச்சியது

பத்து மாதத்தில் ஒரு அழகான யானையை

ஈன்றது துணைஎலி. யானை போய்வர ஏதுவாய்

சாகடைத்துளையை அகலமாக்கினான்

வேறு வழியின்றி அவன்.

3

எலியுடனான பழக்கத்தில்

அவனுக்கான சிறு வால் முளைத்ததுகண்டு

தன் தாயிடம் பெருமை கொண்டான்

முன்பற்களும் பெரிதடைவதாய் தாய்

கண்டு சொன்னாள்தகப்பனுக்கு கொள்ளை

சந்தோசம். எலிப்பொறி சாதனங்களின்

கடையொன்றை நகரின் நடுவில் திறந்தான்

அரசன் வைத்த முதல் பொறியில்

தன் வாலை இழந்த அவனுக்கு

தாய் மருந்து வைத்து கொன்றுபோட்டாள்.

25.10.09

தொலைவான ஓரிரவு

என் அம்மா ..
உன் ஒரு முலையிலிருந்து மறு முலைக்கு
என் உதடுகளை மாற்றிக்கொள்ளும் நேரமிது.
பிரிவென்று கருதாதே.

என் தமக்கையே நெடுவழியில் நான்
உன் சுட்டுவிரல் விட்டு நடுவிரல்
நுடுவிரல் பற்றிக்கொள்ளும் பொழுது இது
தீண்டளற்ற இடை நொடி
தனிமையோ என்று திகைக்காதே.

என் தங்கையே உன்னை தியானிக்கும்
என் மனம் இமைக்கும் தருணமிது.
அச்சமய இருட்டில்
நீ மிரளாதிரு.

உறங்கு என் மகளே
தோள் மாற்றி சுமக்கவே உன்னை
என் நெஞ்சிலிருந்து அகற்றுகிறேன்
ஐயோ இது விலகலோ என்று
திடுக்கிட்டு விழித்துவிடாதே.

சகலமும் ஆன பிரியமே
இன்று நாளெல்லாம் உன் நினைவால்
எத்தனை முறை மனம் ததும்பி
கண்ணீர் வரப்பார்த்தது...


யூமாவாசுகியின் என் தந்தயின் வீட்டை சந்தையிடமாக்காதீர் என்ற தொகுப்பிலிருந்து.

24.10.09

புள்வனம்

மழைக்காற்றில் நடுங்கும் இலையென
இமைகள். மெல்லிய பிரவாகமென
பொங்கி வழிகிறது வெறுப்பின் நீர்
வெம்மை தாங்காமல் வெளியேறும்போது
தெரு நுழைகிறான் பிச்சாந்தேகி
புன்சிரிப்போடு கடக்கிறான் என்னை
வீடு திறந்து நீ அளித்ததை
உமிழ்நீர் வழிய உண்கிறான். தெருமுனையில்
அவன் மீண்டும் என்னை கடக்கும்போது
திருவோடை தவரவிடுகிறான். உடைந்து
சிதறிய பாத்திரத்திலிருந்து கிளம்பி
பறக்கிறது புள்வனம் ஒன்று
பசிய பூனையாய் மாறி
எவ்விக் கவ்வுகிறேன் அவற்றில் ஒன்றை
அதன் சிறகுகள் படபடக்க தின்னும்
என் கண்களுக்கு தெரியுமாறு
பெருங்கிளையின் கயிற்ரிலுன்
உடல் தொங்கும் சித்திரத்தை
வானத்தில் வரைந்திருக்கிறான்
பிச்சாந்தேகி.

23.10.09

பார்க்காத கோணம்

சாருநிவேதிதா மீது ஆயிரத்தெட்டு எரிச்சல் இருந்தாலும் அவரது சினிமா விமர்சனத்திற்கு நூறு சதம் நான் உடன்படுகிறேன். ஒரு சினிமாவை கூட விமர்சனம் செய்ய நான் முயன்றதில்லை.
நிறைய படங்கள் பார்க்கிறேன். ஸ்தம்பிக்க வைக்கிற அளவு கொட்டி கிடக்கிறது. தமிழ் சினிமா ஒரு சதவிகிதம் கூட கவரவில்லை. நான் பார்த்த உலக படங்களை நண்பர்கள் விமர்சனம் செய்வதை படிக்க நேருகிற போதுஒரு சந்தோசம். அதுவும் நான் பார்க்காத ஒரு கோணம் அவற்றில் தெரியும் போது ஒரு ஆச்சர்யம். சாருஒப்பீட்டளவில் பல தலங்களில் விமர்சனத்தை முன் வைப்பார். கமலை பற்றிய அவர் பார்வை விசேசமானது. உமாஷக்தியும் ராமகிருஷ்ணனும் தான் பார்த்த படங்களின் கதைகளை துல்லியமாக விவரிக்கிறார்கள். ஒரு படத்தை பார்த்துவிடுகிற நேர்த்தி கிடைத்து விடுகிறது. பழைய படங்களை தன் அனக்டோடில் குறிப்புகளாய் தெறிக்க விட்டு சிலிர்க்க வைக்கிறார் ராஜநாயஹம். போன வாரத்தில் நான் பார்த்த மூன்று படங்கள் த்ரி மன்கீஸ், ஹங்கர் , விக்கி muகிறிஸ்டினா பார்சிலோனா. முதல் படத்தை ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அதனுடைய விசுவல் பிரம்மாண்டமானது. இரண்டாவது , சிறையில் அறுபத்தியாறு நாட்கள் உணவு உண்ணாமல் இருந்து இறந்து போகும் ஒரு கேரக்டர். ஒரு முறை சாப்பிட மாட்டாரா என்று ஏங்கவைத்தது. மூன்றாவது வூடிஆலனின் படம். தயவு செய்து படத்தை பாருங்கள் அவ்வளவுதான் இதற்குவிமர்சனம்.

22.10.09

போதை

ஒரு பயணம் அதன் நோக்கம் பொறுத்து அயர்வை அளிக்கிறது. நாற்பது மணி நேரங்களில் ராமநாதபுரம், தேனி, திருச்சி, சென்னை என வாகனத்தில் சுற்றுவது சம்பளம் தரப்படுவதால் செய்ய வேண்டிய வேலை என்பதால் அலுப்பு, சோர்வு , வலி, எரிச்சல் எல்லாம் சேர்ந்து ரணகளபடுத்துகிறது. நேற்று இரவு வசுவையும் சுரேசையும் பார்த்த பிறகுதான் கொஞ்சம் உற்சாகம். நாளைக்கு அக்டோபர் இருபத்தி இரண்டு என்றேன். என்ன விசேசம் என்றார்கள். அவர்களிடம் சொல்ல வில்லை. ஒரு அற்புதமான இல்லறத்தை நல்கி வரும் என் மனைவியை பன்னிரண்டு வருடங்களுக்கு முன் இந்த நாளில் திருமணம் செய்து கொண்டேன். எங்கள் திருமண நாள்.

பத்து வருடங்களுக்கு முன் ஆவடிக்கு வந்தது. இன்றும் அதே மன அழுத்தத்தை அளிக்கிறது. ஹைதராபாத் பிரியாணி மட்டும் விலக்கு.!

வலைப்பதிவு ஒரு விதமான போதையை உண்டுபண்ணுகிறது.