26.3.10

உங்களுக்கு என்ன பிரச்சனை?


*****************
தலைப்புக்கு முன்:

இன்று எனக்கு வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. அனைத்து வாழ்த்துகளையும் பத்மாவின் தளத்தில் சொல்லி என்னை பரவசப்படுத்தியிருகிறீர்கள். நன்றி..நன்றி.. நன்றி.
*****************
பிறகு:
தலைப்பை மீண்டும் படிக்கிறேன். இந்த கேள்விக்கு என்ன அர்த்தம் என தெரியாமல் விழிக்கும் என்னை ஏலனப்படுத்துகிறது துயருத்தும் வாழ்வு. வேதனை. தெரிந்த உண்மைகளுடன் வாழும் துயரம் எனக்கு சாபமாக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சொன்ன வான்கோழி கதை: உலகின் மிகச்சிறந்த தாய்மை வான்கோழி. தனது குஞ்சுகளை காப்பதிலும் அன்பு செலுத்தி அரவணைப்பதிலும் நிகரில்லாதது. கீ கீ எனும் குஞ்சு என்றால் அதற்கு உயிர். பாருங்கள் நண்பர்களே... அந்த குஞ்சு கீ கீ என மட்டுமே கத்தவேண்டும். அது அப்படி கத்தாமல் ஊமையாக இருந்தாலோ கீ கீ என கத்தாமல் வேறு ஒலியில் கூவினாலோ அந்த அன்புத்தாய் தன் குஞ்சை கொத்திக் கொத்தியே கொன்றுவிடும். புரிகிறதா... அந்த தாய்க்கு குஞ்சென்றால் கீ கீ என கத்தவேண்டும்.. இல்லையென்றால் அது குஞ்சு இல்லை. குஞ்சு அல்லது குஞ்சு இல்லை! இதுதான் அதன் புரிதல். பைனரி.
நீதி: வான்கோழிதான் பைனரி! மனிதன் அல்ல. men are multiple. women are multiple and infinity.
****************
கடந்த சில தினங்கள் எனது வாழ்வின்மீதான மதிப்பீடுகளை கேள்விக்குட்படுத்த வேண்டிய தருணங்களைத் தந்தது. கடுமையான மனஅழுத்தத்தை அளித்த இந்த அனுபவத்தை கதையாக்க எண்ணம். பார்க்கலாம்.
*********************
ஆணி என் நடுநெற்றியில் நுழைய உன் சுத்தியலின் ஒற்றை அறைபோதும். ஏனித்தனை முறை. கபாலம் பிளந்து தெறிக்க நீ துப்பும் ஒற்றை வார்த்தை போதாதா.
****************

15.3.10

ஆளுமைகள்

Mr. BT
வாருமையா பி வீ.. சௌக்கியம்தானே.. ஊனு எடுத்தாச்சோ? பாத்து பலவருசம் ஆகுதே. எப்பிடியிருக்கு நம்ப ஜனங்க நெலை.. எல்லா பயல்களும் பெசிவேச்சமாதிரி ஆயிட்டனுங்கோ.. அப்ப நாம நெனச்சது சரிதானடே...

Mr. BV
நோ நோ மிஸ்டர் பி டி.. நான் பொதுவா என்னோட நாட்டு உணவு பொருள்கள் அடங்கின வேஸ்டேஜ.. முக்கியமா அதனோட காலை உணவு பழக்கங்கள நான் தொடுறதே இல்ல. புல்ஷிட்.. நானே சமைக்கிறேன்.. யு நோ .. நான் ஆலிவ் ஆயில்தான் உபயோகிக்கிறேன். . காலையில ப்ரீ டாய்லேட் தான் எனக்கு குறிக்கோள்.
Mr. BT
என்னடே உனக்குன்னு என்ன ஒரு நாடு இருக்கு எழவு.. நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லுத.. இதபாரு பலவருசத்துக்கபுறமா நாம இதே நாளுல பாத்துக்கிடனும்னு பேசிகிட்டோமில்ல.. அதுக்காகத்தானே இப்போ ஏகப்பட்டபேர ஏமாத்தி யாருக்கும் தெரியாம இங்க வந்திருக்கேன்.. எப்படி போகுது நாம செஞ்ச யோசன..

Mr. BV

மேன்.. அதுக்காக நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்சமா.. என்னோட வேலையை பிடுங்கினது கூட எனக்கு கோவமில்ல .. எம்பையன் என்னை போடா தேவிடியாப் பையான்னு திட்டுனது கூட எனக்கு கோவமில்ல.. நான் .. நானே எழுதுன எல்லாத்தையும் நான் எழுதலன்னு சொல்லிகினு திரியுறாங்களே.. அவங்க அம்மாக்கள என்ன செஞ்சா தகும்..
Mr. BT
அதுக்காகத்தான் இவங்கள சுலபமா திசைதிருப்புற வழிவகை ஒன்ன கோதாவரி தாண்டி இல்ல தாண்டாம மேற்கு மலை தொடர்ச்சி முடியுற இடத்துல ஒரு வெள்ளைக் கல்ல கண்டுபிடுச்சு அதுக்கடியில முன்னூறு நாலு தியானம் பண்ணினேன்.. அந்த சோர்வுலதான் என்னோட ஆயிரம் பக்க நாவல எழுதினேன்.. அதுக்குப்பிறகு நா சிறுகதைகளை எழுதுன மகத்தான செயலையும் .. இரண்டு சிறுகதைகளுக்கு நடுவுல என்னோட மண மற்றும் மன நிலைய சமன்செய்ய நாவல்கள எழுதவும் தொடங்கினேன்.. பின்னால நான் என்னை உற்சாகப்படுத்தவும் நான் மொத்தமா எழுததொடங்கிட்டேன் ... மொத்தத்துல..
Mr. BV
.. நிறுத்து மேன்.. இன்னும் நீ பதினஞ்சு மார்க் பதில் சொல்ற பழகத்த விட்டு தொலைக்கலையா.. அவனவன் ஒன் வோர்டுக்கு மாறி இப்போ ட்வீட் வரைக்கும் வந்துட்டானுங்கோ.. நானும் அந்த சமயத்தில சீனா லேர்ந்து ஷெலே வரைக்கும் பலவித கலாச்சாரங்கள்ள புகுந்து திளச்சு.. கடைசியில இப்போ மலையாளம் கத்துக்கினு இருக்கேன்..
.....................

இவர்களைப்பற்றி எதுவும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத ஆளுமைகள். புத்தகம் வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இவர்களிடமிருந்து எதுவாவது கிடைத்துக்கொண்டிருக்கிறது. இவர்களைப்பற்றி வெகுஜன ஊடக வடிவிலான ஒரு கற்பனை உரையாடலைத் தொடங்கினேன். இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசினால் எப்படியிருக்குமென்று. சுவாரஷ்யமாய் இருந்தது. ஆனால் தொடரப் பிடிக்கவில்லை. இது ஆரோக்கியமாக படவில்லை.
***********************
ஜெயமோகனின் சில சிறுகதைகளும், விஷ்ணுபுரம், கொற்றவையும் ஏழாம் உலகமும் தமிழுக்கு கொடைசாருவின் சிறுகதைத்தொகுதியும், ராசலீலா நாவலும் இதே தமிழுக்கு கொடை. எழுத்தாளர்களுக்கு தற்பெருமை அடிப்படை குணம். இவர்களின் தம்பட்டம் அவ்வாறானதே. இந்த எழுத்தாளுமைகள் - அனைத்து எளிய மனிதர்களை போன்றே - மதிக்கப்படவேண்டியவர்களே. என்னைப்பொருத்தவரையில், வரலாறு தொன்மம் போன்றவற்றை தேடி கொள்ள ஜெயமோகன் சிறந்த வழிகாட்டி. உலக எதிர்கலாச்சாரம், திரைப்படம் போன்றவற்றை தேடி கொள்ள சாரு. ஆக, ஜெயமோகன் ஒரு biological typewritter. சாரு நிவேதிதா ஒரு biological vibrator.
*****************

வழை

நண்பர் சுரேஷ் தனது நண்பருடன் பேசும்போது வலைப்பதிவர்கள் பற்றிய ஒரு கருத்தை விவாதித்ததாக சொன்னார். அதன் சாரம் ஒரு கேள்வியாக இருக்கிறது. வலைப்பதிவில் கருத்துக்களைப் பதிவதற்கும் பகிர்வதற்கும் கட்டணம் வாங்கினால் எத்தனைப்பேர் பதிவுலகில் தங்கள் எண்ணங்களைப் பகிர்வார்கள்? முக்கியமான கேள்விதான் இல்லையா ? வலைப்பதிவர்கள் இணைய வலையில்/வளையில் இரண்டுவிதமாக மாட்டிக்கொள்கிறார்கள் என்று படுகிறது. இலவசமாய் பதிவுவெளியை அளிப்பதின் மூலம் சர்வதேச நிறுவனங்கள் விரிக்கும் வலை ஒன்றிலும், தொடர்ந்து பதிவு மற்றும் பகிர்வு செய்வதில் கிடைக்கும் மனச்சுகிப்பிற்கு ஒன்றிலுமாக. இத்தகைய பதிவுவெளி சேவை இலவசமாக கிடைக்காவிட்டால் நாம் எத்தனை பேர் கைக்காசு செலவு செய்து நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம்?

பதிவு வழக்கம் மெல்லியதொரு போதைப்பழக்கமாக உருவகிக்க தொடங்குவதை பதிவர்கள் கண்டுகொள்ளக்கூடும். முதலில் எண்ணத்தைப் பகிர நல்ல களமாய் இருக்கும் இவ்வெளி தன்னை இட்டு நிரப்ப ஏதேனும் ஒரு கருத்துக்கும் அதன் தொடர்ச்சியாக ஒரு சார்புக்கும் பதிவர்களை நிர்பந்திக்கிறது. இச்செயல்பாடு படிப்படியாக நிகழும். ஒருவரின் வேலை மற்றும் சூழல் சார்ந்தே இதன் தன்மை காலவெளியை எடுத்துக்கொள்ளும். ஆனால் தொழிநுட்ப யுகத்தில் நாம் இதிலிருந்து தப்ப முடியாது.

ஏற்கனவே நமது பருண்மையுலகில் இணையத்தின் வழியாக ஒரு பிரபஞ்ச வெளியைப் போன்ற தன்மையில் ஒரு மாயச்சமூகம் மனித எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டு விட்டது. நாம் நமது சமூகத்தில் ஒரு உறுப்பினர் போன்றே இந்த மாயச்சமூகத்திலும் உறுப்பினர்கள். நமது கட்டற்ற எண்ணங்களை மிகச்சுலபமாக பரப்ப முடிகிற வெளியாய் இது தன்னை தொடர்ச்சியாக விரிவு செய்து கொள்கிறது. அதைவிட ஒரு சிறப்பம்சம் உண்மைச்சமூகத்தில் ஒரு தனிமனிதனுக்கு சாத்தியப்படாத பன்மை நுழைவுத்தன்மை இந்த மாயச்சமூகத்தில் சாத்தியமாகிறது.

அதாவது, ஒருவர் இச்சமூகத்தில் எத்தனை பேராகவும் உறுப்பினராக்கிக்கொள்ளலாம். அனாலும் இது உண்மைச்சமூகத்தின் ஒரு புள்ளி மாற்றமற்ற மாயப்பிரதியாக மட்டுமே இருக்கிறது. மொத்தத்தில் ஒரு தனியறையில் தன்னை யாரும் கவனிக்காத நேரத்தில் ஒரு தனிமனிதன் செய்யும் அத்தனைக்காரியங்களையும் எல்லாம் அறிகிறபடி தன்னை யாரென்று வெளிக்காட்டிக்கொள்ளாமல் செய்வதற்கான சாத்தியப்பாடுகளை இவ்வெளி நமக்கு அளிக்கிறது.

என்னவொரு பயங்கரம்!

***********

வலை/வளை இரண்டு வார்த்தைக்குப் பிறகு 'வழை' என்கிற வார்த்தை இருக்கிறதா என்று தேடினேன். இருக்கிறது. வழை என்றால் இளமை என்ற ஒரு அர்த்தமும் புதுமை என்ற ஒரு அர்த்தமும் இருக்கிறது வர்த்தமானன் தமிழ் - தமிழ் அகராதியில்.

********

12.3.10

தானமடைகிறது நிர்வாணம்.

தானமிடும் மனிதன் தன்னை தேவனென கொள்கிறான்.


கண்மூடிய இமைவழி தெரிகிறது தகிப்பின் சிவப்பு. ரசமிழக்கும் ஆடியின் முன் என்ன செய்துவிட முடியும் வெப்பமூச்சு. கருகி அழிகிறது தனித்தலையும் இரட்டைவால் மிருகம். பொறி தேடும் பறவையிடமிருந்து கூண்டை மறைக்கிறான் வேடன். பாழடைந்த காட்டில் ஒற்றையடிப்பாதை ஒன்றை கண்டுபிடிக்கிறான் அகழ்வு செய்பவன். தங்கக்குழம்பின் ஊற்றுவழிஎன கொக்கரிக்கும் அவன் சர்ப்பதோஷம் பெற்று வீழ்கிறான் முதலடியில்.


தானம்பெறும் மனிதன் தன்னை பாவமெனக் கொள்கிறான்.


காற்றின் குளிர்பெற்று ஊற்றுகிறது மேகம். இரவு. இருள். காடு. குளிர் பொறுக்கா ஒளிதேவதை சிலந்தியின் கூட்டில் தஞ்சம் கேட்கிறாள். இரைகளுக்கானது அதன் கூடு. இறக்கம் கொள். மழைத்துளி ஆகிவிடு. இருண்டவனக்கிளையில் பனித்துளியில் தன்னை ஒளித்துக்கொள்கிறது ஒளி.


*************************



wrong

"there should be somethin wrong..." என்றான் அவன்.
"there should be somethin wrong..." என்றாள் அவள்.
"there should be somethin wrong..." என்றது அது.
"where" என்றேன் நான்.
"there" என்றாய் நீ.

................வேறொன்றும் இல்லை நகுலனை மீண்டும் எடுத்தேன்.

********************

இரண்டு நாவல்கள் ஒற்றை மூச்சில் படித்தேன். மீண்டும். ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்பு எவ்வளவு மண்ணாய் இருந்திருக்கிறேன்! (இப்ப மட்டும்..?) இப்போதைய என் இருப்பை ஒரு கேலியாக்கி, அற்பத்தின் அற்பமாக்கி, திருவிழாக்கூட்டத்தில் துணியற்றவனாக்கி .... ன்னும் என்நெல்லாமொவாக்கியது அப்புத்தகங்கள். படித்துமுடித்த கணத்தில். இப்பொழுது இந்த மனநிலை இல்லை. பரபரப்பு அடங்கி நிதானமாகிவிட்டேன். ஒரு மனதின் கற்பனைசக்தியை, அந்த கற்பனை மூலம் ஏற்படும் பரவசத்துடிப்பை வாசகனுக்கு பரிமாற்றம் செய்வதில் ஒருநூலும் மனிதர்களின் சாதாரண உறவுமுறைகளில் கீழ் மற்றும் உள் அடுக்கில் நிகழும் மன உரையாடல்களை ஒரு மூன்றாம் ஜாம நாய் குரைப்பு போல குரூரப்புதிர் வழி வெளியேறும் வார்த்தைகளைக் கொண்ட மற்றொரு நூலும்.

நித்தியகன்னி - எம்.வி.வெங்கட்ராம்
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

படித்து துன்புறுங்கள் நண்பர்களே.
****************