
11.12.09
தடம்
மெல்லிய காற்று
ஈரப்பதம் கூடிய வெயில்
நின்றுபோன மழையின் வாசம்
மணற்ப்புழுதியின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது
உயிரார்வம்..
புயல்
பெரும்மழை
காட்டாற்றின் வெள்ளம்
உடைந்து மிதக்கும் கிளையின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது
உயிரலறல்..
நிலம்
மேகமற்ற வானம்
பெயர் தேவையில்லாத நகரம்
வெடித்து சிதறிய கட்டிடத்தின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது
உயிர்ப்பதறல்..
கடல்
நீர்ப்பரப்பு
பெருவனத்தீ கண்டம்
பேரறத்தின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது
உயிர்ப்பயம்..
பிரபஞ்சம் சொல்லவொன்னாதவொரு
நுண்ணிய கோள்
நீலம்
பெருங்காமத்தின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது
உயிர்க்காதல்...
பெண்
ஆண்
உயிரற்ரதன் பொருள்
வெளியற்றதின் உள்
கற்பிதங்களின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது
உயிர்..
**********
உரையாடல் போட்டிக்காக மற்றொரு கவிதை இது.
சரிதான்...
******
முந்தய பதிவில் ஒரு சிறுகதை (அப்படித்தான் நினைக்கிறேன்) எழுதியதின் விளைவாக ஒரு பயங்கரமான முடிவை எடுத்திருக்கிறேன். அது என்ன? நாவல் ஒன்றை தொடராக எழுதுவது. பார்க்கலாம். நாவலின் தலைப்பு "சொல்லுவதெல்லாம் பொய்". மாதத்திற்கு இரண்டு அத்தியாயமாவது எழுதிவிட உத்தேசம்.
*******
ஒபாமாவுடன் ச்சாயா சாபிடறதுக்காகவே இந்தியாவிலே பொறந்தேன்னு பெருமை பட்டவாக்கில தல ரஷ்யாவுக்கும் போயிட்டு வந்துட்டது. இங்க ஒருத்தர் பத்துநாளா உள்துறைய தூங்கவிடல. சரி போகட்டுமேன்னு பாகம் பிரிசுடலாம்னு ஸ்டேட்மென்ட் விட்டா.... நூத்தினாலு சட்டமன்ற உறுபினர்களும் நாலு பாராளுமன்ற உறுப்பினர்களும் கடுதாசி கொடுக்கிறாங்க.
எது நடக்கிறதோ அது நன்றாகவே.........................
********
தினத்தந்தியில் வரும் சினிமா விளம்பரங்களை பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறது. ஏழெட்டு பேரு கூடி கூடி போஸ் கொடுத்து.. ஒரே கத்திரிக்காய ... சாமிகளா எத்தன கொளம்புகடா உலகத்துல இருக்கு? இதுகளுக்கு தமிழ் பேருக வேற. இந்த படங்களைஎல்லாம் பாத்து செத்து சுண்ணாபாகி போனவனோட கத ஒன்னு என்கிட்டே இருக்கு.. 'வீட்ல சொல்லிட்டு வந்துட்டேன்' னு படத்தோட டைட்டில் . யாருக்காச்சும் வேணுமா?
*******
8.12.09
என்னத்த சொல்ல...
***
அவளது அளவு முப்பத்துநான்கு. உடல் இளக்கம் தொடங்கும் வயது. மேல்வயிற்றில் இருந்த வெள்ளை தழும்பு சற்று பெரியதாகி
இருந்தது. உடல் இளைத்திருப்பதாக பட்டது. கொக்கிகளை மாட்டி சேலையை கட்டினாள்.
சீப்பில் நின்ற தலைமுடிகளைப் பார்த்து எரிச்சலடைந்தாள். கைப்பையில் வாகன சாவி இருப்பதை உறுதி செய்தவாறு வெளியேறியவள் கதவை பூட்டும் முன் மீண்டும் உள்நுழைந்து தனது உள்ளாடையை எடுத்து அணிந்து கொண்டாள். வெளியேறினாள்.
******
தனது காரை கிளப்பும் பொது அவன் வயிற்றில் ஏற்பட்ட மாற்றத்தினால் எரிச்சலடைந்து மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து கழிப்பறையில் பதினைந்து நிமிடம் அமர்ந்துவிட்டு பாரமிறங்கிய மனநிலையில் வெளியேறினான். காரை ஓட்டிக்கொண்டிருந்த பொது அவனுக்கு இரண்டு விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தன: ஒன்று அவன் சட்டையை பேண்ட்டுக்குள் திணித்து டக்இன் செய்ய மறந்தது, மற்றொன்று வீட்டின் கழிப்பறையில் மின்சாரவிளக்கை அணைக்காமல் வந்தது. அனிச்சையாக அவன் 'ஷிட்' என்றான். 'ஷிட்' என்ற ஆங்கில வார்த்தையின் நேரடி தமிழர்த்தம் அவன் மூளைக்குள் நுழைந்தபொது மீண்டும் 'ஷிட்' என்றான். அந்த வார்த்தை அவனிடமிருந்து வெளியேறி காற்றில் மிதந்த போதுஅவனது வாகனத்தின் முன்னால் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டி பெப் வாகனத்தை இடித்தான்.
******
ஸ்கூட்டி பெப்பை ஓட்டி வந்ததவள் 'சனியனே' என்றாள்.
******
காற்றில் மிதந்த 'ஷிட்' அவளிடமிருந்து வெளியேறிய 'சனியனை' பிடித்துக்கொண்டது. அன்றிலிருந்து பதினோராவது நாள் எல்லா சினிமா டிராமா கதை கற்பனை மற்றும் வாழ்க்கையில் நடப்பது போலவே நகரின் முக்கிய உணவகத்தில் வழக்கம்போல என்ன சாப்பிடலாம் என்று கேட்டுவிட்டு தேநீர் மட்டும் அருந்தலாம் என முடிவுசெய்தார்கள். அவன் தன் பெயர் 'ச' என்றும் தன்னை எல்லோரும் 'சி' என்றழைப்பார்கள் என்றும் அறிமுகம் செய்துகொண்டான். அவள் தன் பெயர் 'சை' என்றும் தன்னை எல்லோரும் 'சை' என்றுதான் அழைப்பார்கள் என்றும் அறிமுகம் செய்துகொண்டாள்.
******
மறுநாள் அவனிடம் பணம் பெற்றுக்கொண்ட டாடா குழுமம் அவர்களிருவருக்கும் பிரத்தியேகமான இரண்டு பத்திலக்க எண்களை ஆளுக்கொன்றாய் வழங்கியது.
*****
இவற்றையெல்லாம் அந்தரத்தில் ஜோடிபோட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்த 'ஷிட்' டும் 'சனியன்'னும் இனி இவர்கள் என்னவாக ஆவார்கள் என்கிற சாத்தியப்பாடுகளை பட்டியலிட்டு பார்த்ததில்,
௧.
சை தன் கணவனை விட்டுவிட்டு வந்து ச வுடன் நிரந்தரமாக செட்டிலாகி விடுவது. வயதான ச தொண்டை புற்றில் இறந்ததும் சன்மார்கங்களில் அடைக்கலமாகி தூக்கத்திலேயே இறந்து போவது.
௨.
ச தன் குடும்பத்தை பிரிந்து சை இடம் தன் சொத்து முழுவதையும் இழந்து பிறகு கோவலன் மாதிரி மடத்தனமாக திருந்தி மீண்டும் தன் குடும்பத்துடன் இணைவது. சை அவனிடமிருந்து பெற்ற சொத்துக்களை ஒரு கல்லூரி விடலைப்பையனுக்காக செலவழித்துக்கொண்டிருப்பது.
௩.
ஒரு மிதமான காதலால் இருவரும் இணைந்து, ஒரு அணுக்கியாய் வயதான ச வுக்கு ஹோமரின் இலியட் டை வாசித்துக்காண்பிப்பது.
௪.
முற்பகலில் எதிர்பாராத விதமாய் வீட்டுக்கு வந்த சை இன் கணவனிடம் உடம்பும் கையுமாய் பிடிபட்டு இடதுகாதுக்கு பக்கத்தில் ஆழமான வெட்டுக்காயம் வாங்கி சை அந்த இடத்திலேயே இறந்து போக ச ஓடிப்போய் மதிலேறி குதித்ததில் இரண்டு காலும் முறிந்து போவது.
௫.
ச வுக்கும் சையுக்கும் அழகான ஈ என்ற பெண்குழந்தை பிறந்து பிற்காலத்தில் தமிழக சட்டசபையில் போக்குவரத்துதுறை அமைச்சியாவது.
*****
சும்மா கற்பனை செய்வதை விட்டுவிட்டு நடப்பதை கவனி சனியனே என்றது ஷிட்.
*****
அப்புறம் என்ன நடந்தது என்றால், பனிக்காலம் குளிர்காலம் மற்றும் கோடைகாலம் ஆளுக்கொன்றாய் கடந்தபின்னான ஒரு இனிய வியாழனில் அதே உணவகத்தில் எல்லா சினிமா டிராமா கதை கற்பனை மற்றும் வாழ்க்கையில் நடப்பது போலவே வேறுவேறு இருக்கையில் வேறுவேறு நபர்களுக்கு முன்னால் அமர்திருந்த ச வும் சையும் எதேச்சையாக ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். ச ஒரு ஷிட் டையும் சை ஒரு சனியனையும் அனிச்சையாக வெளியேற்றினார்கள்.
*****
ஏற்கனவே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஷிட்டும் சனியனும் காற்றில் மிதந்த புது ஜோடியை கண்டு இடிந்துபோன மறுநாள் இரண்டு நிகழ்வுகள்:
ஒன்று:
டாடா குழுமம் கட்டப்படாத பில் தொகைக்காக ச வுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்தது.
இரண்டு:
ரிலையன்ஸ் குழுமம் ச விடம் பணத்தை பெற்றுக்கொண்டு ச வுக்கும் சை யுக்கும் பிரத்தியேகமான பத்திலக்க எண்களை ஆளுக்கொன்றாய் வழங்கியது.
********************************
7.12.09
அஞ்சலி
மரணவீடேகாதவன்
துர்மரணங்கள் துரத்த
களித்துத் திரிந்த எம் குருத்துக்கள்
சிறு கடுகெனத் தெறித்துக் கலைந்த காலமது
காய்ந்த மூங்கில் சடசடவென முறிய
வேய்ந்த சருகுதிர்ந்து காற்றலைந்து செல்ல
தெறித்த விழிகளில் பிதுங்கிய துர்க்கனவுகள் தொற்றாதிருக்க
பதுங்கிப் பிழைத்த பாதகன்
கடுகுப் பொதி சுமந்தலைகிறேன்.
***************
துரத்தும் நினைவுகளை என்ன செய்வது. மிலன் குந்தேராவின் தலைப்பு: Unbearable Lightness of Being . . நண்பணின் துர்மரணம் நேற்று. வாகனவிபத்து. எந்த கெட்டபழக்கமும் இல்லாதவன். கவுண்டமணியின் காமெடி நினைவுக்கு வந்து தொலைக்கிறது. தண்ணி கிண்ணி/பொம்பள கிம்பள/பீடி சிகரெட்/ கொறஞ்சது வெத்தலபாக்கு.. எதுவும் இல்லை. அவன் செய்தது: முப்பது வயதுவரை ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தது.. கர்த்தருக்கு விசுவாசமாய் இருந்தது.. உருப்படியான காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்தது..
முப்பத்தி ஒன்பது வயதில் அரசு பேருந்தில் அடிபட்டு இறந்து போனான்.
டிசெம்பர் ஆறாம் தேதி.
*******
வளர்மதியின் மேற்குறிப்பிட்ட கவிதை உள்ளுக்குள் கரைந்தழும் எனக்காக எழுதப்பட்டது போல உணர்கிறேன்.