29.11.09

வாதை

அனுபவிக்க இயலாத துயரமொன்றை என் உடலுக்கு பழக்கப்படுத்திவிட தினமும் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். அவ்வாதை மிகப்புராதானமானது. மேலும் துல்லியமானதும் கூட. தாட்சண்யம் இல்லாததது என்றும் சொல்லலாம். மரணம் கூட அதை கண்டு மிரள்கிறது. போகிற போக்கில் அனைவரும் அதை புறம் தள்ளுகிறார்கள். சிலர் அதை கையில் பிடித்து லாவகத்துடன் என்முன் ஒரு நிகழ்வை நடத்துகிறார்கள். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. உடல் இற்று மனம் பேதலிக்கிறது இவ்வாதையை கடக்க. கடவுளை கூட நம்பிவிடலாம் என்கிற அளவு வேதனை.
அவ்வாதையின் இருப்பு ஸ்தூலமானது. ஆயிரமாயிரம் ஊசிகளாய் என் நகக்கண்ணில் நுழைந்து வெளியேற அதற்கு தெரிகிறது. ஒவ்வொரு கணமும் அதன் இருப்பு என்னை பயப்படுத்தி நடுநடுங்கசெய்கிறது. நேர்மை என்னும் அவ்வாதைக்கு சொல் தவிர எந்த வடிவமுமில்லை. நேர்மை பயங்கரமானது. வசீகரமற்ற ஒரு ஒட்டு உண்ணியது. உடனடியாக அடித்து கொல்லப்படவேண்டிய வீட்டினுள் நுழைந்த விசப்பூச்சியது. அது ஒழுங்கற்றைவைகளையும் சிதைவுகளையும் பார்த்து முகம் சுழிக்கிறது. தன்னை சமன் செய்துகொள்ள கடுமையாய் வற்புறுத்துகிறது. நேர்மை என்னும் அவ்வாதையை தினமும் நான் சிலமணிநேரம் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். மரகிளையில் தாவும் குரங்கின் இயல்பென அந்த பழக்கம் என்னை விட்டு அகலாதிருக்கிர்த்து.
மேலும் தொடந்து என்னை அவமானப்படுத்த முயற்சி செய்து என்னை ஒரு மடையனை போல் உணர்த்தும் அவ்வாதை என் தனியறையில் மதிப்பிழப்பதை காண சகிக்காமல் கதவை இழுத்து சாத்துகிறேன் நீங்கள் அறியா வண்ணம். ஒவ்வொரு முறையும் நான் கதவு திறந்து வெளியேறும் போது பழகிய நாயென என்மீது தாவி ஏறுகிறது. அதன் மலநாற்றத்தை என் நாசியில் கொட்டுகிறது. ஒரு அசுத்தமற்ற பள்ளி சீருடையென அது என்னுடனே இருக்கிறது.

4 கருத்துகள்:

  1. ஆதிரன் நேர்மை மிகத் துயரம் தரக்கூடிய மனதை கிழித்துப்போடும் உண்மை. ஒரு விசயத்தில் நம்பிக்கை அல்லது அதற்கு நேர்மையாக இருக்க நேரிட்டால் எத்தனை மனிதர்களை இழக்க வேண்டியிருக்கிறது. நேர்மையாய் இருந்து எல்லாவற்றையும் இழந்து சாவது அல்லது நேர்மையைக் கொல்வது இரண்டில் ஒன்று மட்டுமே சாத்தியப்படுகிறது. உங்களுடைய பயிற்சி வெற்றிகண்டால் தயவு செய்து எனக்கும் சொல்லுங்கள். அல்லது அதில் ஏற்படும் சிக்கலை எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்...
    ஒரே பாராவாக இல்லாமல் இரண்டு மூன்றாக பிரித்து இடம் விட்டு எழுதினால் படிக்க சிரமம் இல்லாமல் இருக்கும்..

    பதிலளிநீக்கு
  3. உயிரே போனாலும் இந்த வாதையை விட்டு விடாமல் பற்றிக்கொள்ளுங்கள்.உங்களைப் போன்ற‌ மிகச்சிலரால் தான் மழை பெய்கிறது.
    பத்மா..

    பதிலளிநீக்கு