19.11.09
சங்கீத சாகரம்
எனக்கு இல்லாத பல அறிவுகளில் மிகமுக்கியமானது இசையறிவு. அதை பற்றிய குற்றவுணர்வை எனக்கு முதலில் ஏற்பதியது ரமேஷ்வைத்யா. என் இசையறிவு வெறும் சினிமா பாடல்கள்தான். மற்றவையெல்லாம் எனக்கு பாகவதர் பாடல்கள் வகைகளே. பாகவதர்கள் பாடல்கள் என்றாலே அறுவை. இப்படியிருந்த என்னை ஞானசூன்யம் என்று நம்பவைத்தது ரமேஷ். அது அவருக்கே தெரியாத விஷயம். நான் இது பற்றி ஒருதடவை கூட அவரிடம் பேசியதில்லை. பொதுவாக எல்லா நேரத்திலும் அவர் பேச நாங்கள் கேட்டுகொண்டிருப்போம். தனியாக சந்திக்க நேர்ந்தாலும் அதுவே. எனக்கும் ரமேஷுக்கும் ஆன நட்பை எனது நாவலுக்காக சேமித்து வைத்திருக்கிறேன். மூளைக்குள் இருக்கும் அந்த அனுபவங்களை எப்போது எழுதுவேன் என்று தெரியாது. ஆனால் அந்த அத்தியாயத்தின் முதல் வரி மட்டும் மாறவே மாறாது. அது இப்படி ஆரம்பிக்கும்: அக்கக்கா கிளி செத்து போச்சு.. எப்ப.. இப்ப..எப்பிடி.. இப்பிடி...! பதினைந்து வருடங்களுக்கு முன் அவர் எழுதிய ஒரு பாடலை பாலுசத்யா என் வாகனத்தில் பில்லியனில் அமர்ந்து என் காதருகே பாடிக்கொண்டு வர நான் வாகனத்தை பெரியகுளத்திலிருந்து தேனிக்கு ஓட்டி சென்றது ஒரு இனிமையான நினைவு. முல்ல பூ வாசம் மூக்குல வீசும் கன்னிப்பெண் வாசம் என் நெஞ்சுக்குள்ள.. அத்த மகளே மெத்த வேணுமா.. என்று தொடங்கும் அப்பாடல் எனக்கு முதல் தனிப்பாடல்! அதில் வரும் ஒருவரி: குண்டு விளையாட சேக்கலைனு ரெண்டு வண்டு கண்ணால கண்ணீர் வடிச்சவளே..." இன்னும் இனிமேலும் மறக்காது. அதன் பிறகு த மு எ ச பாடல்கள் முதல் உலகில் எனக்கு கேட்க கிடைக்கும் அனைத்து வகையான சங்கீதத்தையும் கேட்டு வருகிறேன். பல விதமான உணர்வுகளுக்கும் ஆட்படுகிறேன். இதுவரை அதன் கிரமப்படிகள் எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. மேற்கத்தி இசை கலந்த இந்திய இசை எனக்கு பெருவிருப்பமாய் இருக்கிறது. இதை எழுதும் பொது பாலமுரளிக்ருஷ்ணா அவர்ளின் ஒருநாள் போதுமா பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக