5.12.09

மிமிக்கிரி



ஆசையெல்லாம் பெரியதொன்றும்
இல்லை. ஒரு கவிதை
எழுத முயற்சிப்பதை தவிர
அதற்கு முன்னால்
உலகத்தின் அத்துனை
நாழிதல்களையும்
கிழித்து ப்ருஷ்ட்டம் துடைக்க
வேண்டியிருக்கிறது. நாய்களைப்போல
காலைத்தூக்கி
வாகனங்களின் மீது
மூத்திரம் பெய்ய வேண்டியிருக்கிறது
ஒருகாதலிக்கும்
பல காதலிக்கும் இடையேயான
பயணத்தினால்
ஏற்படும் முதுகுவலிக்கு
சிகிச்சை செய்ய
வரும் கிழவியை
கொன்று புதைக்க வேண்டியிருக்கிறது
காலையில் எழுந்து
மலங்கழிக்க
முதல்நாள் இரவே
தூங்கவேண்டியிருக்கிறது
அலுமினியதட்டை ஏந்தி
தாயின் முதுகில் தொங்கும்
குழந்தையை
முகம் சுழித்து விரட்டவேண்டியிருக்கிறது
அரசியல் குறித்தான சொற்பொழியவும்
பெண்கவிகளின் பருண்மை
குறித்தான
கற்பனைகளை கைவிடவும்
சிரமப்படவேண்டியிருக்கிறது
ஒரு ஒற்றனைப்போல் மிமிக்கிரி
செய்யவேண்டியிருக்கிறது.
*****

பகிர்வு

http://www.blogger.com/www.chikkymukky.com
இரண்டு இதழ்கள் வெளியாகி உள்ளது.
நல்ல முயற்சி. உமாஷக்தி, லக்ஷ்மி சரவணகுமார் கதைகளை மட்டும் படித்தேன். நேரம் கிடைக்கிற போது மீதியை படிக்க வேண்டும்.
*****
sivakannivadi.blogspot.com
சிவகுமார் தனது பதிவில் உருப்படியான சில அரசியல் நையாண்டிகள்.
அருமையாய் உள்ளது.
******
makalneya.blogspot.com
எனது கவிதை தோழன் தனது கவிதைகளின் அடுத்தகட்டத்தை தொட்டிருக்கிறான். அவனுக்கு என் வாழ்த்து.
****

3.12.09

ஓரியண்ட்டலிசம் 2


என்னை பொறுத்தவரையில் ஒரியேன்ட்டலிசம் என்பதன் ஆணிவேர் காலனியாக்கத்திலிருந்து தொடங்குறது. ஒரு நிலப்பரப்பு அதன் மொத்த வளங்களுடன் சேர்த்து அதன் பூர்வ குடிமக்களையும் வேறொரு நிலப்பகுதியின் அரசியல் குழு பல்வேறு வழிமுறைகளின் மூலம் அதிகாரம் செலுத்துவது என்பதை காலனி படுத்துவது என்று நாம் அறிவோம். அதற்கான உலகின் மிகச்சிறந்த உதாரணம் இந்தியா. இவ்வாறாக பல்வேறு காலனி நாடுகள் அரசியல் ரீதியாக அடிமைப்பட்டு அதன் பூர்வ மக்களின் பல்வேறுவகைப்பட்ட போராட்டங்களின் மூலமாக சுய அரசியல் ஆட்சி அமைப்புகளை உருவாகிய பின்பான காலத்தினை நாம் பின் காலனீய சூழல் எனலாம். காலனியம் மற்றும் பின்னைய காலனியம் ஆகியவைகள் நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் ஓரியென்டலிசம் அந்த நாணயத்தின் மறுபக்கம் எனக்கொள்ளலாம். இந்த நிகழ்வுப்போக்கில் பின்னைய காலனி நாடுகளின் மக்களும் அவர்களின் கலாசார அடையாளங்களும்தான் பலியாடுகள். உதாரணமாக அகதியாக்கம் என்பது இரு நிலைகளில் உணரலாம், ஒன்று சொந்த மண்ணை விட்டு வெளி நிலப்பரப்பில் அகதியாக்கப்படுவது, இரண்டு சொந்த நிலத்திலேயே அகதியாக்கப்படுவது. ( இதில் மூன்றாம் வகை ஒன்று உண்டு - ஒரு மனிதன் தனக்குத்தானே அகதி ஆகிப்போவது - இதை அந்நியமாதல் என்கிறோம். அந்நியமாதல் மிகப்பெரிய தனி கதை). ஒரு நிலப்பரப்பும் அதன் மக்களும் சொத்துக்களும் அரசியல் ரீதியாக அகதிகள் ஆக்கப்படுவது என்பது காலனிய நிலைமை. ஒரு மனிதன் உலகின் ஆகச்சிறந்த மோசமான நிலையை அவன் அகதியாக்கப்ப்படும்போது வந்தடைகிறான். அந்த வகையான மோசமான சூழலை ஒரு நாடு காலனிச்சூழலில் வந்தடைகிறது. அத்தகைய சூழலில் அந்நாடு தாய்மைநாட்டின் (இந்தியாவுக்கு பிரிட்டன் தாய்மைநாடு - சுதந்திரத்துக்கு முன் ) கலாச்சாரம் மற்றும் அரசியல் விவகாரங்களை திணிக்கப்படபட்டும் தனதான சுய அரசியல் மற்றும் பண்பாட்டு கலாச்சாரங்களை வலுக்கட்டாயமாக மறக்கடிக்கப்பட்டும் சிதைவுக்குள்ளாகிறது. இந்த இரண்டு வகையான செயல்பாடுகள் ஏக காலத்தில் நடைமுறைப்படுத்த படுகிறது. புதிதாக திருமணமான பதினைந்து வயதுப்பெண்ணின் புகுந்த வீட்டு சூழலில் ஏற்படும் மனசிதைவுகளுக்கு நிகராக அத்தகைய ஒரு நாட்டின் மொத்த இயங்கியலும் ஒரு குழப்பமான சூழலில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும். இச்சூழலில் ஆராய்கிறேன் என்று பெருமைகொள்ளும் பேர்வழிகள் தாய்மை நாட்டிலிருந்து புறப்பட்டு காலனி நாடுகளுக்குள் நுழைந்து காலனி நாடுகளின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றவைகளின் அமைப்பை அவதானித்து பதிவு செய்கிறார்கள். இந்த புள்ளிதான் ஓரியென்டலிசம் மற்றும் பின்னைய காலனிய பிரசச்சனைப்பாடுகளின் ஆரம்பம். இந்த கட்டுரைக்காக இவ்வகையான ஆராய்ச்சியாளர்களை குசும்பினிகள் என்று வைத்துக்கொள்ளலாம். இனி இக்குசும்பினிகள் எவ்வாறு தனது வேலைகளை செய்தார்கள் என்று சுருக்கமாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.


*****


தொடரும்.

2.12.09

பெண்

ஆயிரக் கணக்கான கேலக்சிகளும் அந்த ஆயிரக் கணக்கான கேலக்சிகளை விழுங்கக் கூடிய கருந்துளைகளும் விடை காண முடியாத இயற்கையின் மாபெரும் அற்புதங்கள். பிரபஞ்சமும் பெண்களும் எந்தப் புள்ளியில் இணைகிறார்கள்...?!

ஸ்ரீராமின் கேள்விக்கு பதில் சொல்லுவது போல் என் எண்ணங்களை எழுதுகிறேன். இது முழுவதும் ஒரு ஆணின் மனநிலையில் எழுதப்படுகிறது என்று உணர்ந்தே இருக்கிறேன்.

மொத்த பிரபஞ்சமும் தராசின் ஒருதட்டில் வைத்தால் மறுதட்டில் ஒரு பெண்ணை தவிர வேறு எதை வைக்கமுடியும்! பிரபஞ்சம் என்று நம்மால் காணமுடிவது அனைத்தும் ஒரு பெண்ணிடத்திலும் பருண்மையாக காணமுடியும் என்றே தோன்றுகிறது. பிரபஞ்சத்தின் அறிய முடியா பெரும் புதிர்களையும் அதன் மர்மத்தன்மையையும் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பெறலாம். இதை கொஞ்சம் நீட்டி எழுதினால் வைரமுத்துக்களின் சினிமா பாடல்கள் போல ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.

எனவே நண்பர்களே பாவம் இந்த ஆண்களுக்கு பெண்களை விட்டால் யார்தான் இருக்கிறார்கள்...!

******

வைரமுத்து என்றவுடன் ஜீன்ஸ் படத்தில் ஒரு பாடல் வரி: " பாக்கெட் சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா.. " என்ன வரி பாஸ்..!

******

ஒரு பெண்ணால் சித்ரவதை செய்யப்படுவதை விரும்பும் ஒரு ஆண் - மாசோக்கிசம். ஒரு ஆணால் சித்ரவதை செய்யப்படுவதை விரும்பும் அல்லது விரும்பாத பெண் - சாடிசம். இரண்டு வார்த்தைகளும் இரண்டு ஆண் நாவலாசிரியர்களால் உருவான கருத்தாக்கங்கள். சாடிச நாவலை நான் படிக்கவில்லை. மாசொவின் காதல்தேவதை நாவல் - யுனைடெட் ரைட்டர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது - படித்திருக்கிறேன். 'சர்வ வல்லமை பொருந்திய தேவன் அவனை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்தான்' என்கிற ஜூடித்தின் வரி எடுத்தாளுகையுடன் எழுதப்பட்ட நாவல், முடியும் போது வாசித்து பாருங்கள்.

******

சர்வ வல்லமை பொருந்திய தேவன் தொடர்ந்து ஆண்களை பெண்களிடம் ஒப்படைத்துகொண்டே இருக்கிறான்..இதில் தேவனுக்கோ ஆணுக்கோ பெண்ணுக்கோ சலிப்பு என்பதே இல்லை..!!!

******

ஆமென்.

*****

1.12.09

பயம்

நீங்கள் கீழ் கண்ட கேள்விகளை உங்கள் வாழ்க்கையில் எப்போது சந்தித்தீர்கள்:

1 பொருள் என்றால் என்ன?
2 ஒளிஆண்டு என்றால் என்ன?
3 கருந்துளை என்றால் என்ன?

நாம் எல்லோருக்கும் வாழ்வில் மல்லாக்க படுத்து வானத்தை பார்த்த அனுபவம் இருக்கும் என்றே நம்புகிறேன். எனக்கு பள்ளி நாட்களில் ஏறக்குறைய தினமும் இந்த அனுபவம் உண்டு. தூக்கமே வானத்துக்கு கீழ்தான். மழை நாட்களில் நான் நல்ல பிள்ளையாக வீட்டுக்குள் அடங்கி விடுவேன். இப்பொழுது மாதிரி என்னால் சிறுவயதில் குளிர் தாங்கமுடியாது. நான் பதினோராம் படிக்கும் போது இயற்பியலும் தியாகராஜன் ஆசிரியரும் என்னை கடந்தார்கள். அப்பொழுதுதான் மேற்படி கேள்விகளும் என்னை கடந்தன.

matter, light year, black hole... இம்மூன்று வார்த்தைகளை பற்றி நான் யோசித்தபோது

எனக்கு முதலில் பயம் வந்தது. மீண்டும் சில நாள் வானத்தை பார்த்து விட்டு யோசித்தபோது மரணபயம் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நான் மரணபயத்திற்கு அடிமையானேன். ஆனாலும் பிரபஞ்ச கூறுகளின் வசீகரம் என்னை பித்து நிலைக்கு அனுப்பியது. நான் அவற்றை பற்றி எதையும் படிக்கவில்லை. வானத்தை பார்ப்பேன் எதயாவது கற்பனை செய்வேன் அவ்வளவுதான். அதிகமாக கற்பனையில் விமானம் ஓட்டுவேன். அதிலிருக்கும் அழகான பெண்களுக்கு ஆபத்து வரும்.. அவர்களை காப்பாற்றும் சாகசத்தில் ஈடுபடுவேன். இரும்புக்கை மாயாவியும் மந்திரகம்பளமும் என் ஆதர்ஷன நாயகர்கள். தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய குழந்தை பருவ கடவுள் கிருஷ்ணனாய் இருந்தார்! ஐந்துதலை நாகம் எனக்கு பெரும் பயம். தூக்க கனவுகளில் என்னை அதிகம் மிரட்டிய ஜந்து அரவங்கள். பின்னாளில் பாம்பு கனவில் வருவது பொதுவான பாலியல் பிரச்சனை என்று கனவு சாஸ்திரம் சொன்னதும் சற்று வெட்கப்பட்டு கொண்டேன்.

பொருள் என்றால் என்ன?

என்ன அற்புதமான கேள்வி! சற்று திரும்ப திரும்ப கேட்டால் இந்த கேள்வியின் தீவிர தன்மை வெளிப்படும். இயற்பியலின் ஆதாரக்கேள்வி இது. நீங்கள் இந்த கேள்வியை வெற்றுவெளியில் கேட்டுப்பாருங்கள் அதன் தீவிரம் உங்களை தாக்கினால் நீங்களும் பயப்படத்தொடங்கலாம். ஒருவேளை!

ஒளிஆண்டு என்றால் என்ன?

ஒளியின் வேகம் மூன்று லட்சம் கிலோமீட்டர்கள். ஒரு வினாடிக்கு என்பதை நாம் அறிவோம். இதே வேகத்தில் ஒரு வருடம் பயணம் செய்தால் கடக்கிற தூரம் ஒரு ஒளியாண்டு. இந்த பிரபஞ்சம் கோடிக்கணக்கான ஒளியாண்டுகள் தூரம் உடையவை.! நம்மிடையே ஒன்றுக்கு மேற்பட்ட பிரபஞ்சங்கள் இருப்பத்தாக கேள்வி.! யோசியுங்கள். என்னை போல நீங்களும் பயம் கொள்ளலாம். ஒருவேளை.!

கருந்துளை என்றால் என்ன?

ஈர்ப்புமையம்! பிரபஞ்சங்களை கூட விழுங்கி சேமிக்கும் ஒற்றை புள்ளி.! ஒன்றுமே இல்லைஎன்று கூட அதனுள் ஒன்றுமில்லை என்கிறார்கள்! இதன் தத்துவத்தில் நான் மிகவும் மயங்குகிறேன். ஆம். மயங்குகிறேன். ஒரு நிலையில் என் மரண பயத்தை வெல்ல கற்றுக்கொடுத்தது இந்த கருந்துளை! இப்பொழுது நான் ஏறக்குறைய மரணபயமற்று இருப்பதற்கு இந்த பிரபஞ்ச கருந்துளைகள் ஒரு முக்கிய காரணிகள். நான் இதனடிப்படையின் நீண்ட காலம் எழுதிவரும் ஒரு நாவலுக்கு கருந்துளை என்றே தலைப்பிட்டிருக்கிறேன். எப்பொழுது எழுதி முடிப்பேன் என்றுதான் தெரியவில்லை.

இந்த கேள்விகளால் நீங்கள் பயம் கொள்ள நேர்ந்தால், ஒருவேளை, உங்கள் வாழ்க்கையை கொண்டாடுவதன் மூலம் பயத்தை கடக்கலாம்.. அல்லது இக்கேள்விகள் உங்களுக்கு அறிவு விசாலத்தை ஏற்படுத்துமானால், ஒருவேளை, நீங்கள் அறிவுஜீவியாக மாறி உங்களை நீங்களே வருத்திக்கொள்ளலாம்!

இந்த பிரபஞ்சத்தையும் பெண்களையும் பற்றி நாளைக்கு எழுதுவதாக எண்ணம்.

*******